பேரழகி என்னும் பேசாமொழி

வணக்கம்! இதுவே வலைப்பதிவில் நான் எழுதும் முதல் சிறுகதை. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும்.



இன்று
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி அவள் மனதை அடிக்கடி கேட்டுவிட்டு செல்லும. கடல் கரையை தொட்டுவிட்டு செல்வது போல ஓயாது இந்த கேள்வி அவள் காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

அன்று
அவள் நம்மைப்போல் சராசரியானா வாழக்கை நடத்துபவர். அன்பான கணவன் காதல் திருமணம். "பேரழகி" என்று ஆசையாக அவன் கணவன் அழைப்பதுண்டு. அவளும் வெட்கத்தில் சிலிர்ப்பதும் உண்டு. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்தன. இருவரும் பொதுநல சேவகர்கள். இவர்கள் வாழ்க்கையில் மோசமான சம்பவங்களில் இருந்து மீண்ட புனித தீ பறவைகள் இவர்கள். இருவருக்கும் தாய் தந்தை இல்லை தெருவில் விடுபட்டவர்கள். தீப்பெட்டி தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளிகளாக இருந்தவர்கள். அப்போதே அவளும் அவனும் பிரியா நண்பர்கள். ஒரு நல்லவரின் அன்பால் வளர்க்கப்பட்டு நன்றாக படித்து நல்ல வேலையில் பின் சமூக சேவகர்களாக தங்கள் வாழ்க்கை வண்டியை ஒட்டிச் சென்றார்கள். நடுவில் இருவருக்கும் காதல் ஊற்றெடுக்க திருமணம் என்னும் கடலில் கலந்தது.

அவளுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் ஏனோ அவளுக்கு அந்த வாய்ப்பு அமையாமலே சென்றது. இருப்பினும் தன்னம்பிக்கை விடாமல் முயன்றப்பின் பேரழகிக்கு ஒரு குட்டி பேரழகி பிறந்தது. இருவரும் அடைந்த இன்பத்திற்கு ஈடில்லை இவ்வுலகில் ஆனால் குட்டி பேரழகிக்கோ திடீரென மர்மக் காய்ச்சல் வந்து குழந்தை இறந்தது. துயரம் அவர்களிடத்தில் குடிக்கொண்டது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.
மீண்டும் அவளுக்கு ஒரு குட்டி பேரழகன் பிறந்தான். குழந்தை தட்டு தடுமாறி "அம்மா","அப்பா " என்று உச்சிரித்த காலம். வாழ்க்கையில் மழலையின் மொழி கேட்கும் காலம் "இரவாக்கலாம்". முதல் மொட்டை அடிப்பதற்க்காக பழநி சென்றனர். முருகன் அருள் பெற்று வீடு திரும்புகையில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது.
இரவு நேரம் மணி ஒன்பது இருக்கும். பேருந்தில் ஏறி வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்தனர். களைப்பின் காரணமாய் மூவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எதோ பலமான சத்தம் கேட்டது. அவள் காதில் எதோ தாங்க முடியாத வலி. கண் முழித்தாள். அவளை சுற்றி யாருமே இல்லை. சுற்றி சுற்றி பார்த்தாள். ஒரு செவிலித்தாய் அருகில் வந்து "நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் , எனவே தூங்குங்கள்!" என்று கூற இவள் பதிலுக்கு ஏதோ கூற விழைகிறாள் மயங்கினாள்.
அடுத்த நாள் மருத்துவர் நடந்ததை ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக்கொடுத்தார் . "குறுக்கு வழிக்காக தவறான வழியில் வந்த சரக்குந்து வண்டி தாங்கள் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மோதி பெரிய விபத்துகுள்ளானது என்றும் அதில் தங்கள் கணவரும் குழந்தையும் சம்பவயிடத்திலேய இறந்தனர்". அவள் அலறிய ஒலி அந்த மாடிப் பிரிவில் இருந்த ஏக அனைவரும் திரண்டனர். மருத்துவர் இன்னொரு அதிர்ச்சி அவளுக்காக வைத்திருந்தார் அடுத்த பக்கத்தில் "விபத்தின்போது தங்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தங்கள் காதுச்சவ்வும் குரல்வடவும் சேதமடைந்துள்ளது தங்களால் இனி பேச முடியாது. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்."காகிதம் அவள் கண்ணீரால் நனைந்தன. அந்த விவரம் அறிந்த செவிலித்தாயின் கண்கள் நீரால் வழிந்தன. செவிலித்தாய் அவளை கட்டியணைத்து அழுதார். அவள் அருகில் இருந்த ஒரு சிலர் அவளுக்கு ஆறுதல் கூறினர். அவளை சுற்றி இருந்த நல்லவர்கள் இவளின் ரத்தங்களுக்கு இறுதி கடமையை செய்து முடித்தனர். இப்போது "பேரழகி" தனிமையின் அரவணைப்பில் வாழ்த்ந்தாள். அப்போது இவள் இழப்பிற்கு ஈடாக செவிலித்தாய் அவள் வாழ்க்கையில் தனக்கு ஒரு தாயாகவே மாறியிருந்தார். அவளின் வெற்றிக்கு விதையாய் வந்த தாய்.

இன்று
தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை நிமிடங்களில் ஓட்டிப்பார்த்தாள். சற்றே கண் விழித்தாள் அவள் கண்ணில் நீர்க்குளமாக தேங்கி உடைந்து வழிந்தது. புடவையில் கண்ணீரை துடைத்து நேரே பார்த்தாள். அவள்முன் புகைப்படங்களாக மூவரும் சிரித்துக்கொண்டிருந்தனர். அவள் வாழ்க்கைத் துயரம் வருத்தங்கள் இருப்பினும் அவளை ஒடுக்கவில்லை எழுந்து நடந்தாள் எதிர்நோக்கி ஏன் ஓடவும் செய்தாள்.

ஆம்! இன்று அவளுக்கு நூற்றி இருப்பது ஏழு குழந்தைகள் அனைவரும் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள். அவள் நடத்தி வரும் அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்த பெரிய தொண்டிற்க்காக பாராட்டும் விதமாக அவளுக்கு மத்திய அரசு "பத்மபூஷண்" விருது அளித்து கௌரவித்தது.
இதை நான் எப்படி தொடங்குவது? என் வாழ்க்கையின் புத்தகத்தை எப்படி நான் சிறுகுறிப்பாக எழுத முடியும்? கண் மூடி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் யார்? என்ற கேள்வி சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக கேள்வியை தொடுததாள் அந்த நேர்காணல் செய்ய வந்தவரிடம்.
அதற்கு அவளை பற்றி செவிலித்தாயிடம் கேட்டு வைத்திருந்த அவர் "பேரழகி என்னும் பேசாமொழி" என்று பதில் கூறினார். வாயசைவில் புரிந்தன அவளுக்கு புன்முறுவலாய் அவன் கணவன் சொன்ன "பேரழகி" என்னும் ஒலி அவள் காதுக்கு மட்டும் ஒலித்தன.

- காவியா

எழுதியவர் : காவியா (31-Mar-18, 12:21 pm)
சேர்த்தது : காவியா
பார்வை : 259

மேலே