விவசாயம் அன்று இன்று

விவசாயம் அன்று! இன்று!

"உழுவோர்
உலகத்தார்க்கு ஆணி"!!!
நம் பசி தீர்க்க
நீ! அல்லவா கால் வைத்தாய் கழனியில்!
நாம் ஒருவேளை உணவுண்ண
மூன்று வேளையும் உழைத்தவர் நீ-யன்றோ!

நெற்கதிர்கள் தலை கவிழ்வதும்
சோளக்கதிர்கள் நிமிர்ந்து நிற்பதும்
பூச்செடிகள் பூத்துக் குலுங்குவதும்
கரும்புகள் தோகையை விரிப்பதும்
அன்று! கண்குள்ளாக் காட்சி - இனி
வருங்கால சந்ததியினர் அதை
நிழற்படங்களில் காணுவோர் காட்சி!
அதற்கு நாம் தான் சாட்சி!!!

முப்போகம் விளைவித்து
நெல்மூட்டைகளை தலையனையாய்க்
கொண்டு உறங்கிய உழவர்க் கூட்டம்! - இன்று
நகரத்தின் நடைமேடைகளில்
கைகளைத் தலையனையாய்
கொண்டு உறங்கும் நிலையன்றோ!!!
தண்ணீர் பாய்கிறது மறுப்பதற்கன்று – ஆம்
விளைநிலங்களில் அல்ல
விவசாயி கண்களில்
கண்ணீராய்!!!

நீரின்றி யமையாது உலகு உணர்ந்தலும்
நீவீர்! இன்றி அமையாது மானிடம் என்று
உணராபேதைகளும் என் செய்வேன்!!!

சேற்றில் பிறந்து சோற்றினை ஈந்தும்
என் இனம் அழிந்து வருவதை
கண் கொண்ட குருடர்கள் - ஏன்
கண் கட்டை அவிழ்க்க மறுக்கிறார்களோ?

ஒரு துளி மழை
பெய்யாமல் பொய்க்குமானால்
பசும்புல் நுனியைக் கூடக்
காண இயலாததை - ஏன்
அறிவிலார் அறிய முயலாமல்
அலைந்து திரிகிறார்களோ?

உழவும் நேரத்தில் அழைத்தும் வராமல்
அறுவடை நேரத்தில் அழையா விருந்தாளியாய்
வந்த மழை மறக்காமல் அறுவடை செய்கிறது
உழவனின் கண்ணீரை மட்டும்!!!

விதை விதைக்க வேண்டிய
விவசாய நிலத்தில் இன்று
எதை விளைக்கிறோம்?
நிலத்தை நோக்கும் நெல்மணிகளையா? - அல்லது
வானத்தை நோக்கும் அடுக்கு மாடிகளையா?

பசுமை நிலத்தை அழித்துவிட்டு
பசுமை இல்லம் என்று
பெயர் வைத்துக் கொள்ளும்
மூடர் கூட்டமே!
அச்சானி இல்லா வண்டியில்
சக்கரங்களாய் சுழன்று கொண்டிருக்கும்
அறிவிலார் கூட்டமே!
உன் முடிவைத் தேடிக் கொள்ள
முழு வேகத்தில் பயணம்
மேற்கொள்கிறாயோ?

காலநிலையை எதிர்பார்த்த உழவன் - இன்று
காலனை எதிர்பார்ப்பது எதனால்?
தூக்குச் சட்டியைத் தூக்கியக் கைகள் - இன்று
தூக்கு கயிற்றைத் தூக்குவது எதனால்?
கஞ்சியை ருசித்த தொண்டைக் குழிகள் - இன்று
விஷத்தை ருசிப்பது எதனால்?
மாளாது நெல்மணியை அறுவடை
செய்த கைகள் - இன்று
மீளாது துயரத்தில் மூழ்கியது எதனால்?
கரும்பு காய்கறிகளை
சுவைத்த சுவை நரம்புகள் - இன்று
எலிக் கறிகளை சுவைப்பது எதனால்?
ஓ…! நாம் மூன்று வேளை
உணவுண்ண இரவு பகலா
உழைத்தக் காரணத்தினாலோ…!!!
அவன் பசி மறந்து நம்
பசிப் போக்கிய காரணத்தினாலோ!!! - போதும்
இவற்றிகெல்லாம் ஒரே காரணம்
நாமென்று பெருமைக் கொள்ளலாம்…..!!!!

உழுபவனின் கண்களில்
குளம்போல் தேங்கியிருக்கும்
கண்ணீரைத் துடைக்க நாதியில்லை! - ஆனால்
தூர்வார இந்த நாடே யிருக்கிறது…..!!!

@ம. சிவபாலகன்



எழுதியவர் : சிவபாலகன் (6-Apr-18, 8:31 pm)
சேர்த்தது : சிவபாலகன்
பார்வை : 2684

மேலே