வானம் கருகாது தீப்பொறியில்
துளிர்த்த கண்ணீரில்
நீ சொன்னாய்.
உனது கனவை
உப்பு நொதித்ததென்று.
உறக்கத்தில் உறங்காத
உன்னை நெருக்கி
தள்ளியவர் பற்றியும்.
அயர்வின் கணங்களில்
குத்திக்கொல்லும்
வார்த்தைகள் பற்றியும்.
நாம் பிரித்தரிந்த
காலை மாலை
இரவு பகல்
இவையெல்லாம்
ஒரே பொழுதாகி உன்னில்
உயிர் உறிஞ்சுவதையும்...
வலுத்த புயங்கள் தளர
பாறைகள் மறிக்கும்
தகித்த காட்டினுள்
முட்கள் கிழித்துப்பிய்க்க
நீ நடக்கிறாய்.
நடந்து போ தோழி
பார்ப்பாயெனில் தெரியும்
வளர்ந்த அடர்ந்த
பெரும் மரங்கள்...
அவையும் ஒருநாள்
தன்னை அறியாது
உறங்கியிருந்தன
ஒரு சிறு விதையில்...