நதிக்கரையின் நினைவலைகள்
நதிக்கரையின் நினைவலைகள் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
வைகை நதிக்கரை ஓரத்தில்
வயதான மூதாட்டி
குழல் புட்டு விற்கையிலே
பிட்டுக்கு மண் சுமந்த
பெருமானின் திருவிளையாடல்
படரும் நினைவலைகளாக
என் மனதில் ஓடின !
யமுனை நதிக்கரை ஓரத்தில்
கண்ணன் வேடமிட்டு
குழலோடு சிறுவன்
கானம்பாடி வருகையிலே...
‘என் புல்லாங்குழல் இசை
இனியவை என்பார்கள்
உன் குரல் கேட்காதவர்கள் ‘
அன்று
கண்ணன் ராதையிடம்
காதல்மொழி பேசியவை
என் காதில் ஒலித்தன !
பாயும் கங்கை நதிக்கரையில்
பசித்து நிற்கும் வேளையிலே
பாமரன் தேனும் தினைமாவும்
புன்னகையுடன் கொடுக்கையிலே...
பால் பழம் தேன் ராமனுக்கு
கள்ளமில்லா குகன் வழங்கியது
உள்ளத்தில் ஓடம்போல் ஓடியது !
பூ. சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்