சிட்டுக்குருவி காதல்

அந்தி மாலை நட்சத்திரம் ஒன்று சூரியனுக்கு எதிரான திசையில் கொஞ்சம் கொஞ்சம் தன் முகம் காட்ட சிட்டுக் குருவியொன்று உயரே எழுந்து பறந்து தன் காதலி கழுத்தில் அந்த நட்சத்திரத்தை கோர்த்து அணிவிப்பேன் என்று உறுதி பூண்டு புறப்பட்டே சென்றிட,
எட்டாத உயரத்தில் இரை தேடி திரிந்த கொடிய கழுகின் பார்வை சிட்டுக் குருவியின் மேல் படிந்தது.

பெரிய சிறகுகளால் பின்நோக்கி இருமுறை அழுத்த மறுகணம் கழுகு சிட்டுக்குருவியை கூரிய நகங்களால் பற்றி பறந்திட, கதறிய சிட்டுக்குருவி கழுகண்ணே! கழுகண்ணே! என்னை விட்டுவிடுங்க. என்னுயிர் காதலி எனக்காகக் காத்திருப்பாள் என்றிட சிறிது யோசித்த கழுகு எங்கே காத்திருப்பாள்? என்று கேட்டிட, அந்த உயரந்த கட்டிடத்தின் மொட்டையில் என்றிட விரைந்து சென்ற கழுகு அங்கிருந்த பெண் சிட்டுக்குருவியையும் சேர்த்து பற்றி தூக்கிக் கொண்டு வந்து தன் கூட்டை அடைந்தது.

தந்தை திரும்பிய மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த கழுகுக் குஞ்சிகளுக்கு இரைக் கொடுத்து உறங்க வைத்துவிட்டே திரும்பி வந்த கழுகு உங்களை எதற்காக இங்கே தூக்கி வந்தேன் தெரியுமா? என்று நயமாக கேட்டிட சிட்டுக்குருவி சோடிகளிரண்டு அஞ்சி நடுங்கின.

தானே முன் வந்து பேசிய கழுகு, உங்களில் காதலின் ஆழம் காண எனக்கு ஆசை. ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவருக்காக தன்னுயிரைத் தியாகம் செய்தால் ஒருவரெனும் பிழைப்பார் என்றே வார்த்தைகள் தீர மௌனமானது கழுகு.

கழுகண்ணே! என் காதலியை விட்டுருங்க.
நான் சாகிறேன். என்றது ஆண் சிட்டுக் குருவி.

சிட்டுக் குருவி கூறி முடிக்கும் மறுநொடி பெண் சிட்டுக்குருவி கழுகின் கூர்ய நகத்தின் தன்னைத் தானே குத்திக்கொண்டு மாண்டது.

காதலி மாண்டதைக் கண்ட காதலனும் கழுகின் கூர்ய நகத்தில் தன்னை குத்திக் கொண்டு மாண்டு போக,
இரண்டின் இரத்தத்துளி சிந்திய இடத்தில் தீப்பற்றிக் கொண்டது.

கோரமான தீ கழுகை எரிக்க வருகையில் இத்தகைய காதலை நான் எங்கும் கண்டதில்லை என்று வியந்தது கழுகு,
தன் இறகு இரண்டைப் பறித்து சிட்டுக்குருவிகள் மீது வைக்க உயிர்த்தெழுந்தன.

உயிர்ந்து எழுந்த சிட்டுக்குருவிகளைப் பாராட்டி அனைத்துக் கொண்ட கழுகு,
இருவரும் நலமாய் வாழ வரமொன்றை தந்து வாழ்த்தி அனுப்பியது.

உண்மைக் காதல் தியாகத்தில் ஒளிர்கிறது.
அத்தகைய காதல் எவ்வகையிலும் தோற்பதில்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Apr-18, 5:09 pm)
பார்வை : 669

மேலே