202 பொய்மையும் வாய்மையே புரையிலா நன்மைக்காம் - பொய் 8
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
அயலார்செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே
..யறமா மன்னார்
துயருறா வண்ணம்நாம் பொய்த்தாலும் பிழையன்று
..சொந்த மாவோர்
பயன்வேண்டிச் சிறியதோர் பொய்சொலினும் பெரும்பழியாம்
..பார்மேல் கீழாய்
அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கின்னா தரும்பொய்யை
..அறையல் நெஞ்சே. 8 - பொய்
நீதிநூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”மற்றவர்கள் செய்யும் குற்றங்களைச் சொல்லாமல் நீக்கி விடுவதும் நன்மையாம். அவர்கள் வருத்தப் படாத அளவில் நாம் பொய் சொன்னாலும் குற்றமாகாது. நமக்குச் சொந்தமாக ஒரு பயன் கருதிச் சிறு பொய் சொன்னாலும், அது பெரிய பழியாகும்.
உலகமே மேல் கீழாகத் தடுமாறிப் புரண்டாலும் பிறர்க்குத் துன்பம் தரும் பொய்யை நீ சொல்லாதே நெஞ்சமே!” என்று சொல்லும் இப்பாடலாசிரியர், குற்றமில்லாத நன்மையென்றால் சொல்லும் பொய்களும் வாய்மையே என்கிறார்.
அயலார் - மற்றவர். மறைத்தல் - நீக்குதல்.
பார் - உலகம். அயர்வு - தடுமாற்றம்.