203 பழியும் பாவமும் பயப்பன பொய்யே - பொய் 9

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

பாரினிற்பொய்த் திடல்பொய்க்க வுன்னுதல்பொய் யினைப்பிறர்க்குப்
..பயிற்றல் யாதோர்
காரியஞ்செய் வேனென்னச் சொலித்தவிர்தல் தனக்கேலாக்
..கருமந் தன்னை
வீரியமாய்ச் செய்வனெனல் அற்பரையே துதித்த’ல்’பொய்யை
..வியந்து கொள்ளல்
சீரியரை இகழ்த’ல்’பிறர் மீதொருவன் சொலும்பழியைச்
..செவியிற் கோடல். 9 - பொய்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”உலகினில் பொய் சொல்வது,
பொய்சொல்ல நினைப்பது,
பிறரைப் பொய் சொல்ல மற்றவரைப் பழக்குவது,
எப்படிப்பட்ட காரியமும் செய்வேன் என்று சொல்லிச் செய்யாமல் தவிர்ப்பது,
தன்னால் செய்ய முடியாத செயலை முடிப்பேன் என வீரமாகப் பேசுவது,
அற்ப குணம் கொண்டோரைப் புகழ்வது,
பொய்யை வியந்து பாராட்டுவது,
சீரிய குணமுடைய மேலோரை இகழ்வது,
மற்றவர் மீது ஒருவன் சொல்லும் பழிச்சொற் களைக் காது கொடுத்துக் கேட்பது ஆகியவை ஒருவர்க்கு பழியும் பாவமும் உண்டாக்கும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-18, 4:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே