201 பொய்யர்கள் இடுக்கு வழியே தொடர்ந்து செல்வர் - பொய் 7
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
பழியிலா ரொருவர்க்கு மஞ்சாது நேர்வழியே
..படர்வார் வவ்வுந்
தொழிலுளார் பகற்கஞ்சுந் துரிஞ்சில்போல் இட்டிகையில்
..தொடர்ந்து செல்வார்
இழிவுளா ரென்பதற்குப் பொய்த்தலே சான்றாகும்
..ஏசில் தூய
வழியுளா ரென்பதற்குச் சரதமே சாட்சியாம்
..மகியின் கண்ணே. 7 - பொய்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”பொய் முதலிய பழியில்லாதவர் ஒருவர்க்கும் அஞ்சாமல் அறவழியிலே நடப்பார். பொய் களவு முதலிய தீமையுடைய தொழிலைச் செய்பவர் பகலைக் கண்டு அஞ்சும் வௌவாலைப் போல் இடுக்கு வழியில் தொடர்ந்து செல்வர். இவர்கள் இழிந்தவர்கள் என்பதற்கு இவர்கள் கூறும் பொய்யே சான்றாகும்.
இவ்வுலகத்தில் குற்றமற்ற தூய்மையான நேர் வழியில் நடப்போர் என்று சொல்லப்படுவோர்க்கு அவர்கள் சொல்லும் உண்மையே சான்றாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
துரிஞ்சில் - வௌவால். இட்டிகை - இடுக்கு வழி. சரதம் – உண்மை, மகி - உலகம்.