200 பேச்சால் உயர்மக்கள் பேசுபொய்யால் கடையர் - பொய் 6
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
விலங்குபற வையினுநரர் வாக்கொன்றாற் சிறப்புடையர்
..விளங்குந் திண்மை
இலங்குவா யாலுரையா தவத்தமுரைப் போருலகம்
..இகழ்வி லங்கின்
குலங்களினுங் கடையராஞ் சாணமதை யமுதுவைக்குங்
..கோலச் செம்பொற்
கலங்களின்வைத் தலையொக்கும் மெய்க்குரிய வாயாற்பொய்
..கழற லன்றே. 6 - பொய்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”விலங்கு, பறவைகளை விட மக்கள் பேச்சுத் திறன் பெற்றதனாலேயே சிறந்தவராகின்றனர். அத்தகைய சிறப்புத் தருகின்ற வாயால் சொல்லத்தகாத பொய் சொல்பவர் உலகத்தாரால் இகழப்படுகின்ற விலங்குகளிலேயே மிகத் தாழ்வானவராம்.
அதனால் பொய் சொல்வது சாணத்தை, உணவு வைக்கும் அழகிய தூய்மையான பொன்னாலான பாத்திரத்தில் வைப்பதற்கு ஒப்பாகும். எனவே, உண்மையே பேச்க்கூடிய வாயால் பொய் பேசாதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.
நரர் - மக்கள். அவத்தம் - பொய்.
கடையர் - தாழ்வானவர். அமுது – உணவு,
கழறல் - சொல்லுதல்.