தலையெழுத்து
தலையெழுத்து
என்ன மொழி
யார் எழுதியது
யார் படித்தது
தோற்றுப்போனால்
இதன் மேல்
பழியைப்போட்டு
ஒதுங்கிப்போகும்
சோம்பேறிகளின்
ஆயுதம் இது...
பறவைகள் எந்த
தலையெழுத்தை
பார்த்தது
அவைகளை பாருங்கள்
அதன் கூட்டின் வடிவமைப்பை
பாருங்கள் யார் சொல்லிக்கொடுத்தார்கள்
இந்த நுட்பமான அறிவை...
கூட்டைவிட்டு இரைதேடி
பல மைல்கள் பறந்தாலும்
தன் கூட்டையும் குஞ்சிகளையும்
மறப்பதில்லை
இவைகளுக்கு தெரியுமா
தலையெழுத்து என்னவென்று...
குயிலை பாருங்கள்
எத்தனை நுட்பம்
தன் முட்டையை அடுத்த
இனத்தின் கூட்டிலிட்டு
தன் இனத்தை பெருக்கிக்கொள்கிறது
இது அறியுமா
தலையெழுத்தை...
சோதனைகள் மனிதனுக்கு
மட்டுமா வருகிறது
எல்லா ஜீவராசிகளும்
தினமும் தடைகளை
சந்தித்து முன்னேறிக்கொண்டே
தான் இருக்கிறது
இவைகளெல்லாம்
தலையெழுத்தின் மீது
பழிப்போடுவதில்லையே
சிறுத்தை மானை
விரட்டும்போது
மான் தலையெழுத்து என
விடுவதில்லையே
ஓடி பிழைக்கத்தானே
பார்க்கிறது
சிறுத்தை தலைவிதியென
ஓடும் மானை விட்டுவிடுகிறதா
விரட்டி வேட்டையாடி
தன் பசியை
போக்கத்தானே செய்கிறது
இங்கே தலையெழுத்தின்
வேலையென்ன..
வெற்றியும் தோல்வியும்
நாணயத்தின்
இரு பக்கங்கள் போல்
வாழ்க்கையின் இருபக்கங்கள்
இதில் தலையெழுத்துக்கு
என்ன வேலை
வாய்ப்புகளை
தவறவிட்டவனின்
வேதாந்தம் தலையெழுத்து
முயற்ச்சி செய்யாமல்
தூங்கிக்கிடப்பவனின்
சித்தாந்தம் தலையெழுத்து
உங்களுக்கு தெரியுமா
தலையெழுத்து என்று
ஒன்றிருந்தால் அதை
எழுதிக்கொள்ளும் அதிகாரமும்
நம்மிடத்திலே உண்டு..
தலையெழுத்து தலைவிதி
என தூங்கிக்கிடக்காமல்
உழைத்துப்பாருங்கள்
தலைவிதியெல்லாம்
சுக்குநூறாய் போகும்...
இயற்கையிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
பறவைகளிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
விலங்குகளிடமும் பாடம்
உள்ளது ஏன் அன்றாட
வாழ்க்கையே ஒரு பாடம் தான்..
தலைவிதி தலையெழுத்து
எனும் தடைக்கற்களை
அகற்றி முன்னேற்ற பாதையில்
பயணம் தொடங்குவோம்
வாழ்க்கையில் எல்லாமே
இனிமையாகவே வாய்க்கும்...