பூச்சாண்டிகள் பாகம் இரண்டு
ஒரு கோணல் பாதையில்
பூச்சாண்டி இருக்கிறான்.
கதைகளில் வருபவன்.
பகலை உறிஞ்சியதும்
இரவை மெல்பவன்.
கண்களில் அணையாத
சிவப்பு விளக்கெரியும்.
சாப்பிடாமல் இருந்தால்
தூக்கிப்போய் விடுவான்.
ஆறு மணிக்கு மேல்
விளையாடப்போனால்
நிச்சயம் வருவான்.
அவனிடம் உண்டு
ஓர் உலக்கை கூட...
அடிப்பானாம்..
அவன் நாக்கு இருக்கும்
வயிறு வரை என்பதே
குழந்தை ரம்மிக்கு
மிகுந்த பயம்.
அவள் சமர்த்தானாள்.
பூச்சாண்டி கதைகேட்டு
ஐந்து வயதிலேயே.
சரியாக நேரத்தில்
சாப்பிட்டு தூங்கி
படித்து விளையாடி...
அந்த பூச்சாண்டி
வரவில்லை எப்போதும்...
ஆறு வயதில் கேட்டாள்...
இன்னும் வருவானாப்பா
அந்த பூச்சாண்டி.
ஒழுங்கா இருந்தா
வரவே மாட்டாண்டி...
கொஞ்சியதும் தூங்கினாள்.
ஒழுங்காய்த்தான் இருந்தாள்.
ஏழு வயதில் அவள்
ஏபிசிடி கற்றுத்தந்த
எதிர்வீட்டு அண்ணனின்
வன்கலவியால் சாகும்வரை.