அன்புள்ள அக்காவிற்கு

அன்புள்ள அக்காவிற்கு...


அன்புள்ள அக்காவிற்கு
இப்படி எழுதி
எத்தனை ஆண்டுகாளாகிவிட்டன

உனக்குத் திருமணமான சிலநாட்களில்
இப்படி எழுதியதாய் ஞாபகம்

அப்போது நம் தெருவில்
பட்டாளத்தாரின் வீட்டில் மட்டுமே
தொலைபேசி இருந்தது

அன்றைய நாளிலிருந்து
இன்றுவரை நான்
அதிகமாய்க் கடிதம் எழுதியது
உனக்கு மட்டும்தான்

காலையிலிருந்து என் கைபேசியில்
குறுந்தகவலுக்கான
‘டிங் டிங்’ ஒலியில் எல்லாம்
எதிர்பார்த்தது உன் பெயர்தான்

உன்னிடமிருந்து ஒரு
தவறிய அழைப்பையாவது
எதிர்பார்த்தேன்
ஏமாற்றமே மிஞ்சியது

இன்றைய நாட்களில்
தொலைபேசிகளால் நம்
தூரம் குறைந்தது
கைபேசிகளால் நம்
கடிதம் மறைந்தது

அதனால்தான் இன்று
சில வருடங்களுக்குப் பின்
கடிதம் எழுதுகிறேன்

இன்று எந்த நாள்
நினைவிருக்கிறதா உனக்கு?

புதிய புத்தக வாசனை
உனக்குப் பிடிக்கும் என்பாய்
பூக்காமல் உதிரும் மொட்டுக்கள்
பார்த்து வருத்தம் கொள்வாய்

புளியமரத்தில் ஊஞ்சலாட
மிகப் பிடிக்கும் என்பாய்
புளி தின்றால் அம்மா
உன்னை அடிக்கும் என்பாய்

வண்ணங்களில் பிடித்தது
வான் நீலம் என்பாய்
வாலறுந்த பல்லி பார்த்தால்
பயத்தில் சத்தம் செய்வாய்

நினைவிருக்கிறதா உனக்கு?
எறும்பு பற்றிய என்
முதல் கவிதையின்
முதல் ரசிகை நீதான்

எனக்கு பட்டாசு இல்லாத
ஒரு தீபாவளியில்
நீதான் எனக்கு
உன் வீட்டிலிருந்து
மத்தாப்பு திருடிக்கொடுத்தாய்

திருசெந்தூர் செல்லும் வழியில்
முதன் முதலாய் காற்றாலைகளை
நீதான் எனக்குக் காட்டினாய்

என் அம்மாவிற்கு அடுத்ததாய்
பௌர்ணமியில் நீ தான் எனக்கு
நிலாச் சோறு ஊட்டினாய்

நான் முதன்முதலில்
கடலோடு விளையாடியதும் கூட
உன்னோடுதான்

இப்படியாக உன்னைப் பற்றிய எதையுமே
நான் இன்னும் மறக்கவில்லை
நீ மட்டும் எப்படி மறந்தாய் ?
இன்று என் பிறந்த நாள் என்பதை.

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (28-Apr-18, 2:41 pm)
Tanglish : anbulla AKKAVIRKU
பார்வை : 55

மேலே