மீராவும் அவள் கண்ணனும்

கண்ணனைத் தேடுகிறாள்.... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்... தன்
கண்களில் விளையாடி ...
கார்குழல் தினம்கோதி
மார்பினில் உறவாடி
மனத்தினுள் கலந்திருக்கும்
சேதியை அறியாமல்
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்..

புல்லாங்குழல் போலப்
புதுப்புது இசை கூட்ட
கண்ணன் வருகின்றான்
கண்மணி கனிகின்றாள்
கள்ளத் தனமனைத்தும்
கண்களில் எடுத்துரைத்து
உள்ளத்தை வருடுகின்றான்
உடையாய் மாறுகின்றான்
கண்களைத் திறக்கையிலே
கற்பனை என்றறிந்து
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்... தன்
கண்களில் விளையாடி
கார்குழல் தினம் கோதி
மார்பினில் உறவாடி
மனத்தினுள் கலந்திருக்கும்
சேதியை அறியாமல்
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்..

மல்லிகை மலர்ச்சரங்கள்
மாங்கனி மதுரசங்கள்
தென்றலின் குளிர்க்கரங்கள்
தேன்தரும் இளஞ்சுனைகள்
பேதை மேனியெங்கும்
போகச் சுகம் குடித்தும்
தீராத விளையாட்டில்
திளைக்கும் மாயவன்தன்
நெஞ்சுக்குள் காதல் மீரா
இருப்பதை அறிந்திருந்தும்
கண்ணனும் தேடுகிறான்.... மாயக்
கண்ணனும் தேடுகிறான்...
கன்னத்தில் விளையாடிக்
கற்பனைக் கடல் மீறி
மார்பினில் உறவாடி
நெஞ்சுக்குள் கலந்திருக்கும்
மீராவை அறிந்திருந்தும்
கண்ணனும் தேடுகிறான்... தன்
கண்களில் விளையாடிக்
கார்குழல் தினம் கோதி
மார்பினில் உறவாடி
நெஞ்சுக்குள் ஒளிந்திருக்கும்
சேதியை அறியாமல்
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா...
கண்ணனைத் தேடுகிறாள்...

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (18-May-18, 9:46 pm)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 60

மேலே