மோர் விற்கும் முனியம்மா பாட்டி

மோர் விற்கும் முனியம்மாள் பாட்டி....

உச்சிக்கிழான் உக்கிரப் பார்வை நேரம்....
மோரு.....மோரு....எம்மா மோரு....

ஆம்!முனியம்மா பாட்டியின் கனிந்த தெளிந்த குரல்..
அரை நூற்றாண்டாய் அதே பகுதியில் ஒலிக்கும் குரல்...
தாகத்தில் இருந்த நான்
தாமதிக்காமல் அலுவலறை விட்டு வாயிலுக்கு வந்தேன்.....

நிறைந்த நெற்றிக் குங்குமம்
இதழ்களுக்குள் கோர்த்த முத்துச்சரம் ....
தூக்கி முனைந்தக் நரைமுடிக்
கொண்டையில் மலர்ச்சரம்...
வெள்ளாவியில் வெளுத்த வெண்ணிறம்
வெயிலுக்குக் காட்டியும் கருக்காத பொன்னிறம்....
உச்சந்தலையில் மோர் பானை சுமை....
அச்சில் வார்த்த சிலையாய் நின்றாள் முனியம்மா பாட்டி....

சுவையான புளிக்காத
தூய நீர்மோர் சொற்ப விலையில்...
ருசித்துப் பருகியபடியே குடும்ப விவரம் கேட்டேன்....
பெற்றது மூன்று
போனது இரண்டு
மீதம் ஒன்று...
அதுவும் பெண்பிள்ளை ...
அலுப்புடன் அரற்றினாள்....

அவர்களோடு இருக்கலாமே ...
இப்படி வேணாத வெயிலில் ஏன் இந்தத் துன்பம் ?
ஆதங்கத்தில் வினவினேன்...
“கொடுத்ததைக் கேட்டால்
அடுத்தது பகை” என அழகான பழமொழி சொல்லி
அதில் தன் நிலைமையை சொல்லி அசத்தினாள்....

உதவி வேண்டுமாயெனக் கேட்டேன்....
மரியாதையுடன் மறுக்காமல் மறுத்தாள்...
உழைப்பின் உறுதி அவள் தன்மானமாய் எதிரொலித்தது ...
நாள் முழுதும் விற்றால்
நானூறு வரை கிடைக்கும்...
வீட்டு வாடகை மற்றும் மளிகைச் செலவிற்கு இது போதும் .....
74 வயது நிரம்பிய முனியம்மாள் பாட்டியின் தன்னம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.....

உன் உழைப்பிற்கும் உறுதிக்கும்
தலை வணங்குகிறேன் பாட்டி....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-May-18, 3:08 pm)
பார்வை : 36

மேலே