என்றோ எங்கோ என் மரணம்

என்றோ...எங்கோ... எவ்வாறோ.. என் மரணம்...

உதிர உறவுகள் அழுது புரண்டிடும்
உற்றத்துணை உள்ளமுருகி விசும்பிடும்
ஊர் உறவுகள் சிலநாள் உருகிடும்

நாட்கள் செல்லச் செல்ல
அனைத்துறவும் மறந்திடும்
அவரவர் வழி தொடர்ந்திடும்
என் வழித்தடமே தூர்ந்திடும்

எஞ்சிய நாட்கள் இனி எத்தனையோ...?
அஞ்சி அதையெண்ணி வாழ்ந்தால்
ஒஞ்சி ஒளியிழந்த ஓயும் தீபமாய்
வஞ்சியென் வாழ்க்கை வாட்டத்தில் அழிந்திடும்....

இனி....
ஒவ்வொரு நொடியும் என் ஆயுளின் நீட்சி
ஒவ்வொரு விடியலும் என் வாழ்நாளின் சாட்சி
ஒவ்வொரு எழுத்தும் என் விழிப்பின் மீட்சி
ஒவ்வொரு உறவும் என் அன்பின் மாட்சி
என்றே யான் வாழ்ந்தால்
உலகம் உள்ளவரை நிலைத்திடும் என் சொல்லாட்சி

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-May-18, 3:06 pm)
பார்வை : 61

மேலே