நம்பிக்கை மனிதர்கள் 4 - ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன் -Erode Tamizhanban,
ஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர் மரபுக் கவிதையில் தொடங்கி புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.தனிப்பாடல் திரட்டு ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர் .சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்.கதை , கவிதை , கட்டுரை , பாடல் , ஓவியம் என அனைத்து துறைகளிலும் படைப்புகளை கொண்ட பன்முகப்பட்ட ஆளுமை .திராவிடக் கருத்தியலை வரித்துக்கொண்டவர்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் .செய்திகள் முடிவடைந்தன என்பதை மாற்றி, ‘செய்திகள் நிறைவடைந்தன’ எனச் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி நிறைவுக்கும் ,முடிவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்பித்தவர் .
பாரதிதாசனின் மேல் உள்ள பற்றினால் கவிதைக்கு வந்த இவர் , அறுபதுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார் .
ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். அதுபோல மூன்றடியில் உள்ள ஜப்பானிய கவிதை முறை ஹைக்கூ . இது இரண்டையும் சேர்த்த கவிதை முறை "லிமரைக்கூ" . இந்த கவிதை முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழன்பன் அவர்கள் .
ஒரு வண்டி சென்ரியு’ - என்னும் கவிதை தொகுப்பின் மூலம் ஜப்பானிய கவிதை வடிவமான "சென்ரியு " வை
தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் . நாட்டுநடப்பையும் , அரசியிலையும் , போலி பக்தியையும் தன் கவிதைகள் மூலம் நையாண்டி செய்கிறார் . நாட்டுநடப்பை சொல்லும் இந்தக் கவிதையை பாருங்கள்
"புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய். "
குழந்தைகளையும் , பொம்மைகளையும் பாடு பொருளாக கொண்டு குறும்பாக்கள் படைத்திருக்கும் அரிய கவிஞர் திரு தமிழன்பன் அவர்கள் . எடுத்துக்காட்டாக ஒன்று
" குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்
உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
கைக்குப் போகத் துடிக்கும் ! "
தனது தலைமையிலான கவியரங்குகளில் இளம் தலைமுறை காவிரியை ஊக்குவிக்கும் தமிழன்பன் அவர்கள் , உலகின் பல பகுதிகளில் நிலவிவரும் கவிதைக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்கும் தகவல் களஞ்சியம் . இவரது கவிதைகளின் உத்தி தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடமாக ஆராயப்பட்டுள்ளது .
வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதை நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கும் இவர் , தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார் .