அவனும் நானும்-அத்தியாயம்-08
....அவனும் நானும்....
அத்தியாயம் : 08
தேநீர் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு அருகாகவே அமர்ந்து கொண்டான் ஆனந்..
"முதல்ல இதைக் குடி..அப்புறம் ஆறுதலாய் அழுதுக்கலாம்..."என்றவனின் வார்த்தைகள் சற்றுக் கோபமாகவே வந்து விழுந்தன...அவள் அழுதால் அவனுக்கு என்றுமே பிடிப்பதில்லை...அதனால்தான் அவளும் அவன் முன்னே இப்போதெல்லாம் அழுது வைப்பதுமில்லை...அப்போதும் அவளது அழுகையை அவனிடமிருந்து மறைக்க முயன்றாள்தான்...ஆனால் அவனிடம் அவளால் அவ்வளவு எளிதில் எதையும் மறைத்துவிட முடியாதே...
"நான் ஒன்னும் அழல...தலைவலி அதான் அப்படியே கண்ணை மூடிப் படுத்திருந்தேன்.."
அவள் இப்படிக் கூறிச் சமாளிக்க முயன்றதுமே அவளைக் கூர்மையாய் ஓர் பார்வை பார்த்தவன்,
"ரொம்பவும் கஸ்டப்பட்டுச் சமாளிக்கத் தேவையில்லை...உன்னால என்கிட்ட எப்பவுமே பொய் சொல்ல முடியாது..."
ஏனோ தெரியவில்லை ஏற்கனவே பழைய நினைவுகளில் கலங்கிப் போயிருந்தவள்,அவனது இந்தக் கோபத்தில் அவளை அறியாமலேயே மீண்டும் கண்ணீரினைச் சிந்தத் தொடங்கிவிட்டாள்...
அவளின் கண்ணீர் அவனுக்குள்ளும் சொல்ல முடியாத ஓர் வலியினை ஏற்படுத்த,மெதுவாய் அவளின் கண்ணீரினைத் துடைத்துவிட்டவன்,அவளை அதற்கு மேலும் அழ வைத்துப் பார்க்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்...ஆனால் அவனை அங்கிருந்து நகர விடாது அவளின் கரம் அவனது கரத்தைப்பற்றி நிறுத்தியது...
அப்படியே அவளின் கரத்தை தன் கைக்குள் வைத்தவாறே அவளருகே அமர்ந்தவன்,என்னவென்று விழிகளாலேயே கேட்டான்...அவன் கேட்டதுமே அவனையே சிறிது நேரத்திற்குப் பார்த்தவள்,கலங்கிவிட்ட குரலில்,
"உன் தோளில்
கொஞ்சநேரம் சாஞ்சுக்கட்டுமா ஆனந்..??.."
அவளது விழிகள் அவனிடத்தில் அன்னையின் அன்பையும்,தந்தையின் அரவணைப்பையும் தேடுவதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது...அவள் கேட்ட மறுநொடியே அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டவன்,அவளின் முகத்தினில் தோன்றிய நிம்மதியைக் கண்டவாறே தானும் மெதுவாய் கண்களை மூடிக் கொண்டான்...
நீச்சல் தடாகத்தின் அருகாமையில் அங்குமிங்குமாய் நடை பழகிக் கொண்டிருந்த கார்த்திக்கின் மனதில் அவளின் நினைவுகள் தோன்றி அவனை இம்சித்துக் கொண்டிருந்தன...யாரை தன் வாழ்க்கையிலிருந்தே தூக்கி எறிய வேண்டுமென்று நினைத்தானோ,அவளைத் தன் உள்ளத்திலிருந்து கூட அகற்றிட முடியவில்லையென்று நினைக்கும் போது அவனுக்கே அவன் மேல் வெறுப்பாக இருந்தது...
இத்தனை வருட இடைவெளியில் அவளை அவன் பல தடவைகள் பார்த்திருக்கிறான்...ஆனால் அவள் ஒருதடவை கூட இவனைக் கண்டதில்லை...இவனும் அவள் காணும்படியாக நின்றதுமில்லை...அவள் மேலே அவன் வைத்திருக்கும் கோபத்தின் அளவை அவனாலேயே அளவிட்டுக் கொள்ள முடியாது...அதே போல் அவனது மனதினோரமாய் இப்போதும் அவள் மேலான அவனது காதலை அளவிடுவதென்பதும் கடினமானதொன்றுதான்...
இப்போதெல்லாம் அவன் மனதில் என்ன இருக்கின்றதென்பதை அவனாலேயே பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை...ஐந்து வருடங்களிற்கு முன்பாக அவனைப் புரிந்து கொள்ளவும்,புரிய வைக்கவும் அவள் அவனுக்காக இருந்தாள்...ஆனால் எப்போது அவள் அவனை விட்டுச் சென்றாலோ,அன்றிலிருந்து அவனுக்கே அவன் ஒரு புரியாத புதிர்தான்...
சில்லென்ற வீசிச் சென்ற குளிர் காற்று அவன் மேனியை மெதுவாய் வருடிச் செல்ல,தீண்டிச் சென்ற தென்றலோடு அவனின் அனுமதின்றியே அவனின் உள்ளம் அவளது நினைவுகளைத் தேடி பின்னோக்கிச் சென்றது...
அன்று இருவருக்குமே பொதுவான நண்பியொருத்தியின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்,விநாடிக்கொருமுறை பார்வைப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ளவும் தவறவில்லை...அவளிடம் அன்று தன் காதலை எப்படியேனும் சொல்லிவிட வேண்டுமென்ற துடிப்பில் இருந்தவன்,நண்பர்கள் பாட அழைத்ததுமே அச் சந்தர்ப்பத்தை தவறாது பயன்படுத்திக் கொண்டான்...
ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் மறுபுறமுமாய் அமர்ந்திருக்க,நடுவில் கிட்டாரோடு அமர்ந்தவன்,அவளைப் பார்வையால் வருடியாவாறே பாடத் துவங்கினான்...
"...மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைந்தாய்..
ஹோ..ஹோ... ஹே..ஹே..."என்று கிட்டாரை இசைத்தவாறே பாடிக் கொண்டிருந்தவனின் மனம் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்திவிடும் நோக்கில் தவித்துக் கொண்டிருக்க,அவளோ கிட்டாரை மீட்டியவாறு அழகாய் பாடிக் கொண்டிருந்தவனை உள்ளூர மிகவும் ரசித்துக் கொண்டிருந்தாள்...
அவளின் ரசனை அவளது முகத்திலும் பிரதிபலித்ததோ என்னவோ,அவனது அடுத்தடுத்த வரிகள் அவனது ஆழ்மனக் காதலோடு வந்து விழுந்தன...
"....வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி..
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி...
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி...
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக
ஹோ..ஹோ... ஹே..ஹே..."
அவனது காதல் அவளைத் தாக்கியதோ இல்லையோ...தலையைச் சாய்த்து முகச்சிவப்பை மறைக்கையில் அவளில் தோன்றிய அந்த வெட்கப்புன்முறுவல் அவனை மொத்தமாய் தாக்கிச் சென்றது...இதயத்திற்குள் நுழைந்த அவளின் புன்னகை அவனது முகத்திலும் புன்னகையை மலர்த்திட,அந்தக் குதூகலத்தோடே இறுதி வரிகளை இசைத்தான் அவன்...
"...மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி...
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி...
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை
ஹோ..ஹோ... ஹே..ஹே..."என்றவாறே பாடலை முடித்துக் கொண்டவன்,ஓர்வித எதிர்பார்ப்போடு அவளை நோக்கினான்...ஆனால் அதற்குள்ளாகவே நண்பர்கள் பட்டாளம் அவனைச் சூழ்ந்து கொண்டதில் அவனது பார்வை வட்டத்தைவிட்டு விலகியிருந்தாள் அவள்,அனைவரது பாராட்டிற்கும் தலையசைப்போடு சிறு புன்னகையை வழங்கியவாறே அவளைத் தேடியவன்,அவள் அவனது கண்களிற்கு அகப்படாமல் போகவும்..அவளது இலக்கத்திற்கு அழைத்தான்...
ஆனால் அவனது அழைப்பினைத் துண்டித்துக் கொண்டவள்,சிறிது நேரத்தில் தானே அழைப்பதாக மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தாள்...வந்த குறுஞ்செய்தியைக் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவன்,அவளது தோழி ப்ரீத்தி அவனை நோக்கி வரவும் அவளிடமே அவள் எங்கேயென்று கேட்டுத் தெரிந்து கொண்டான்...
"பாட்டு ரொம்ப சூப்பர்டா...ஆமா யாருக்காக இந்தப் பாட்டு..ம்ம்..??.."
"யாருக்கோ பாடினேன்...இப்போ அதை விடு...எங்க உன் ப்ரண்டு..??..அதுக்குள்ள மாயமாய் மறைஞ்சிட்டாளா...??.."
"நீ பாடி முடிக்குற வரைக்கும் இங்கதான் இருந்தாள்...அவளோட அப்பாக்கிட்ட இருந்து கோல் வந்ததும் அவசரமாய் கிளம்பிட்டாள்..."என்ற அவளது பதிலைக் கேட்டதுமே அவனது முகம் சோர்ந்து போய்விட்டது...அவள் எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிடுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவன்..
ஏதேதோ கற்பனைகளில் எல்லாம் அதுவரையில் மூழ்கிக் கிடந்தவனுக்கு,அன்றைய நாள் மிகவும் ஏமாற்றத்தோடே கழிந்தது...ஆனால் அன்றைக்கு மட்டுமல்லாது அவனது வாழ்க்கையே மொத்தமாய் சிதைந்து போகும்படியாக மறுநாளிலும் அவனுக்கு மிகப்பெரியதொரு ஏமாற்றத்தை அளித்துச் சென்றாள் அவள்...அன்றோடு மனதளவில் இறுகிப்போனவன்தான் இன்றுவரையிலும் அதே இறுக்கத்தோடுதான் இருக்கிறான்...
அதற்குமேலும் எதையும் மீட்டிப் பார்த்து மனதை ரணமாக்கிக் கொள்ள விரும்பாதவன்,அத்தோடே தன் நினைவலைகளை நிறுத்திக் கொண்டான்...அந்நேரம் சரியாக ராம்குமார் அவனைத் தேடி வரவும்,முகத்திலிருந்த இறுக்கத்தை சற்றுக் குறைத்துக் கொண்டான்...
"இங்க என்னபா பண்ணிட்டிருக்க..??.."
"இல்லைபா சும்மாதான்...கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன்.."
அவனது பதில் அவருக்குத் திருப்தியளிக்காவிடினும் அவரும் அதற்குமேல் அவனை ஒன்றும் கேட்கவில்லை..
"ம்ம் சரிபா...ரொம்பநேரம் இருட்டில நிற்காமல் சீக்கிரமாய் போய் தூங்கு.."என்று கூறிவிட்டு அவர் செல்லவும்,அவனது மனம் மட்டும் விரக்தியாய் ஓர் புன்னகையைச் சிந்திக் கொண்டது...காரணம் அவன் நிம்மதியாக உறங்கித்தான் ஐந்து வருடங்களிற்கு மேலாகிவிட்டதே...
"..உறக்கத்தை மட்டுமா
எடுத்துச் சென்றாய்...?
என்னையும் அல்லவா
நீ மொத்தமாய்
தோற்கடித்துச் சென்றாய்..??.."
தொடரும்....