அந்தரப்பந்துகளின் உலகு- ----------------------
வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன் புதுப் பிராந்தியத்துக்குச் செல்லும் போது அவனுக்குப் பழக்கமாயிருந்த உலகம் புதிய பிரதேசங்களாலும் புதிய பிரதேசங்கள் பழகியிருந்த உலகத்தாலும் சமன் செய்யப்பட்டு ஆசுவாசம் கொள்கிறான். தான் அறிந்த உலகிற்கு மிக அண்மையில் இருந்திருக்கும் இப்புதிய பிராந்தியத்தைத் தான் அறியாது போனது எங்கனம் என வாசகன் வியக்கிறான். எல்லாவற்றையும் போல் பாதைகளாலும் கரவுப் பாதைகளாலும் ஆனதாக இருக்கிறது புதிய பிராந்தியமும்.
கண்டராதித்தனின் கவி உலகம் எனக்கு ஞானக்கூத்தனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து கொண்டே இருந்தது. தமிழில் மரபுச்சாயலுடன் அங்கதத்தை எழுதி ஒரு தொடக்கத்தை உருவாக்கியவர் அவர் . அந்த மரபு இன்று இசை, முகுந்த் நாகராஜன் என பல கோணங்களில் வளர்ந்துள்ளது. ஞானக்கூத்தனின் சமகாலத்தைய புதுக்கவிதையில் இருந்த தனிநபரின் இருத்தலியல் துயரம், கைவிடப்பட்ட உணர்வு ஆகியவை அவரிடம் இருக்கவில்லை. அது விலகிநின்று பார்ப்பதனால் ஒரு சிரிப்பை அடைந்த கவிதை. அந்த விலக்கமும் சிரிப்பும் இன்று எழுதும் கவிஞர்களில் ஒரு மரபினரில் மேலும் கூர்மைகொண்டிருக்கிறது. கண்டராதித்தன் அதற்குச் சிறந்த உதாரணம்
அரசகட்டளை
--------------------
இரவில் எரியும் பிணத்தை
வேடிக்கை பார்க்கும்
தற்செயலாக அன்று
மூதேவி அம்மன் கோவிலை
வழிபட நேர்ந்தது
கேடொன்று நிகழ்வது போல்
நாயும் நரியும் ஓலமிட்டன
கணீரென்று ஒலித்தது பெருமணிச்சத்தம்
காத்தும் கருப்பும் கலந்து நின்றன
சாமந்தி நாற்றம் தூக்கலானது
குறுக்கும் நெடுக்குமாய் யாரோ ஓடுகின்றனர்
கடும் இரவாகயிருந்ததால்
கால் தடுக்கி விழவும் செய்தார்கள்
இப்போது கதையில்
கள்வர் பயம் கூடியிருந்தது
மழையின்றி விலங்குகள் திரிந்தன
சினம் கொண்ட மந்திரவாதிகள்
ஒன்றாக கூடினர்
கூர்வாள் கொண்ட தடித்த
நாலைந்து காவலர்கள்
நாடே இருண்டிருக்க
எரியும் பிணத்திலிருந்து
வெளிச்சத்தை திருடியதாக
இவனைக்கொண்டு போயினர்
இது அரசகட்டளை.
இரவில் எரியும் பிணத்தை வேடிக்கைபார்க்கும் வழக்கம் கொண்ட ’அப்பாவி’யை அரசாங்கத்தால் புரிந்துகொள்ள முடியாது. பிணத்திலிருந்து அப்படி என்னதான் இவனுக்குக் கிடைக்கிறது? இவன் பிணத்தைப் பார்ப்பதனால் என்னென்ன அனர்த்தங்கள் நிகழ வாய்ப்பிருக்கின்றன. நாடே இருண்டிருக்கிறது.பிணத்தில் உதவுவதாக எஞ்சியிருப்பது வெளிச்சம்தான். அதைத்தான் இவன் நாடிவந்திருக்கவேண்டும்.
சாதாரணமாக இக்கவிதையை வரலாற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு சித்திரம் வருகிறது. பிணத்தை ஆன்மிகசாதனைக்கான கருவியாகக் கண்டவர்கள் காபாலிகர் ,காளாமுகர்கள் போன்ற தாந்த்ரீகக்குழுக்கள். பத்தாம்நூற்றாண்டு முதல் அவர்களை அரசுகள் கடுமையாக ஒடுக்கின. பேரரசுகள் உருவாவதற்கு பக்திதான் உதவுகிறது. ஏனென்றால் அது எளிமையானது. கடவுள்மேல் பக்திகொண்டிருந்தால் மண்ணில் பெருமாள் வடிவம் கொண்டிருக்கும் அரசனிடமும் பக்திகொள்ளமுடியும். தாந்த்ரீகம் பக்தி அல்ல. அது ஐயம், மறுப்பு ஆகியவற்றைக் கொண்டது. அதை ஒடுக்கியே ஆகவேண்டும். அந்த மரபுகள் அனைத்தும் தலைமறைவு இயக்கமாக தேங்கி சுருங்கின.
இன்றும்கூட ஜனநாயக அரசுகள் அம்மரபுகளை ஒடுக்குகின்றன. அவசரநிலைக்காலகட்டத்தில் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்த அமைப்புகளில் புரட்சியமைப்புகளுக்குச் சமானமாக தாந்த்ரீக அமைப்புகளும் உண்டு. அந்தக்கோணத்தில் வாசிக்கும்போது பிணம் மேலும் அர்த்தம் கொள்கிறது. பிணத்தை எரித்தே வெளிச்சம் என்ற குஜராத்தி தலித் இலக்கியத் தலைப்பு நினைவில் எழுகிறது. பிணத்தை எரித்த வெளிச்சத்தில் இருந்து எழும் சக்திகளை அரசு ஒடுக்கியே ஆகவேண்டும். அந்த வெளிச்சம் அடுப்பிலோ விளக்கிலோ இருந்து வருவது அல்ல.
தீவிரம் பகடி கலந்து வெளிப்படும் இக்கவிதைக்கு மறுபக்கம்போல அமைந்துள்ளது கண்டராதித்தன் கவிதைகளில் வெளிப்படும்
குழந்தைகளின் உலகம்.
-------------------------------------
வாரச்சந்தைக்கு காய்கறி
வாங்க வந்த பெண்ணிற்கு
நான்கைந்து பிள்ளைகள்.
நாலும் நாலு திசையை
வாங்கித்தர கைகாட்டின.
அவள் கைக்குழந்தைக்கு
பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.
பொடிசுகள் பின்னேவர
பொரியுருண்டை கீழே விழுந்து
ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க
பாதாள பைரவி மேலெழுந்து
குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி
நல்லசுவை நல்லசுவை என
நன்றி சொன்னது.
இந்த கவிதை எனக்கு ‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்ற திருக்குறளை நினைவுபடுத்தியது. பொரி இறந்தவர்களைக் கொண்டுசெல்லும்போது வீசிச்செல்வது. சுடுகாடுவரை தொடர்ந்துவரும் பாதாளதெய்வங்கள் அவற்றைப் பொறுக்கிக்கொண்டிருக்கையில் பிணம் சென்று சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. பாதாளத்தில் இருந்து பொரியைக் கண்டு எழுந்து வரும் பைரவி அதை வீசிய குழந்தையை கண்டு புன்னகைத்து கொஞ்சிவிட்டுச் செல்கிறது. இறப்புக்குப் பதில் முளைக்கும் வாழ்க்கையைப் பார்த்தமையால்.
பாதாளத்தில் இருந்து எழுந்து வந்து குழந்தையைக் கொஞ்சிப்போகும் கவிதை இன்னொரு குழந்தைக்கு அந்தரத்துக்கும் அந்தரத்துக்கும் இடையே எகிறும் பந்துகளின் நூதன உலகத்தை அதற்கு அளித்துச் செல்கிறது இன்னொரு கவிதையில்.
பந்துக்கள் இல்லாதவன்
------------------------------------
ஊருராய்
ரப்பர் பந்தை
விற்கும் வியாபாரியிடம்
முடிந்த பெண்
தன் பிள்ளைக்கு
இனாமாக ஒரு பந்தைத்
தருவாயா எனக்கேட்பாள்.
அந்தரத்துக்கும்
அந்தரத்திற்குமாய்
பட்டு எகிறும்
பந்தைக்கொடுத்து
எப்போதும்
இந்த உலகம் அழகானது
என்ற பாடலைப்பாடி
அந்த ஊரையும்
பந்துகளோடு கடப்பான்.
மண்ணுக்கே வராத, அந்தரத்திலிருந்து அந்தரத்தில் ஆடும் பந்துகள் கையிலிருக்கும் மாயாவிக்கு இவ்வுலகம் எப்போதுமே இனிமையானதுதான். அதில் ஒரு துளி அள்ளி அந்த குழந்தைக்கு அளித்துச்செல்கிறான் அவன்.
பிரபு மயிலாடுதுறை