பனிக்குடம்

திரவத்தின்
இடையே நான்
சுழலும் மீனாக
நீந்தி கழித்த நாட்கள்,
உருண்டோடிய சிறையில்
கால்கள் ஒடுக்கி
கைகள் ஒடுக்கி,
சுவாசம் இல்லா
கோட்டையில்
உன் சுவாசத்தை
சுவாசமாக்கினாய்,
இமைகள் இருந்தும்
ஒளி பார்வை
இல்லாதவனாக,
வாயிருந்தும் குரலொலி
எழுப்ப இயலாமல்,
கூண்டுக்குள் நான்
விளையாடிய கால்பந்து
ஆட்டத்தை ரசித்தாய்,
என் கழிவுகளை நான்
இடும் குப்பைத் தொட்டியாக
இருந்து வெளியேற்றினாய்,
கருவின் கனத்தை உன்
உயிரில் சுமையாக்கினாய்,
சுமையாக நினையாமல்
உன் பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடியறுத்து,
புணர்புழை வழியே
எனை வெளிக்கொணரும்
நாளுக்குள் நான் கைதியாகி
நான் காத்திருக்கிறேன்,
வலிகளுக்கு மருந்தாக
உன் முகம் பார்த்து,
என் இதழை உன்
கன்னத்தில் அம்மாயென்று பதிக்க.

எழுதியவர் : தமிழினியன் (12-Jun-18, 5:07 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 366

மேலே