தாய்
அன்பு இல்லத்திலிருந்து தன் வீட்டுக்கு வந்தாள் துளசி. அவளுடைய மருமகள் சுதா, பத்து நாட்கள்முன்பு துபாயிலிருந்து வந்தவள், தன் அம்மா ஊருக்குப்போய் ஒரு வாரம் இருந்துவிட்டு, அம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
துளசியின் பிள்ளைதான் போன் பண்ணி, ‘சுதாவும், குழந்தை தீபாவும் அங்கு வந்து விட்டார்கள், நீங்களும் வீட்டுக்கு போங்கம்மா இன்னும் இரண்டு நாளில் நானும் வந்து விடுவேன்.’ என்று சொன்னதால் அவளும் வந்திருந்தாள்.
ஆனால் ஏன் வந்தோம் என்றிருந்தது அவளுக்கு. வந்ததும் சுதா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு , “வாங்க” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டுப்போய்விட்டாள். அவள் அம்மா சரசு “வாங்க, சம்பந்திம்மா, உங்க இல்லத்த விட்டு வர மனசு வந்திச்சா? ரொம்ப சொகுசா இருக்குதாமே அது. எப்பவும் ஏசியாம். தனித்தனியா ரூமாம். விதவிதமா சாப்பாடாம்.விட்டுட்டு வரது கஸ்டமாத்தானே இருக்கும்.’ என்றாள் கேலியாக.”
ஏன்? இங்கே சொகுசுக்கு என்ன குறச்சல்? என் பிள்ளை வீடு பூரா கூட ஏசி போட்டுத்தருவான். வருசத்துக்கு ரெண்டு மாசம் வெயில் வறுத்தெடுக்குதுங்கறதுக்காக ஏசி,கீசின்னு எதுக்குன்னு நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன். ‘ என்று சொல்லியவாறே. துளசி தன்னறைக்குப்போய்விட, “சம்பந்தி சாமர்த்தியமானவங்கதான், பிள்ளைய கைக்குள்ளயே வச்சிருக்காங்க. என் தலயெளுத்துதான் சரியில்ல. புருசன்ஓடிபூட்டான் . புள்ளயும்பெண்சாதி முந்தானைய பிடிச்சுக்கிட்டு போயிட்டான்”, என்று புலம்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
துளசியின் பிள்ளை. மதிமாறனை அவனுடைய ஆபீசில் துபாய்க்கு அனுப்ப விரும்பியபோது அவன் தன்அம்மாவை நினைத்து தயங்கினான். துளசி , ‘ எனக்கு அங்கெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா. நீயும்,அவளும் போங்க.’ என்று சொல்லிவிட்டதால், அம்மாவைத் தனியாக விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. தனியாக இருக்கும் வயதானவர்களை குறி வைத்து கொலை, கொள்ளை நடப்பதாக டிவியிலும், பேப்பரிலும் செய்திகள் வந்துக்கொண்டிருந்ததுதான் காரணம்.
சுதாவுக்கு இந்த நல்ல வாய்ப்பை கணவன் தவற விட்டு விடுவானோ என்று ஒரே தவிப்பு.சரசு தான்வந்து அங்கு வந்துஇருப்பதாகவும், இரண்டு பேராக இருந்தால் அவர்கள் கவலைப்படாமல் துபாய் போகலாம் என்றும் பெண்ணிடம் சொல்லி அனுப்பினாள். மதிக்கு இதில் விருப்பமில்லை.சரசு ஒரு சண்டைக்காரி. ஊர் பூரா எல்லாரிடமும் சண்டைதான். அவள் புருஷன் சலித்துப்போய் அவளை விட்டுப் போய் விட்டான். பிள்ளை காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு வர, அது பிடிக்காமல் அந்தப் பெண்ணிடமும் சதா சண்டை. பிள்ளை தனியாகப் போய்விட்டான். ஆனால் அம்மா செலவுக்கு பணம் கொடுத்துவடுவான். சுதாவும் அம்மாவுக்கு உதவுவாள். அதற்கு மதி தடை போடுவதில்லை.
சரசுவுக்கு பெண் வீட்டிலேயே வந்து நிம்மதியாய் உட்கார்ந்து விட வேண்டும் என்று எண்ணம். அம்மாவுக்கும், பெண்ணுக்கும் ஒத்துப்போகும். ஆனால் மதி இதற்கு சம்மதிக்க வில்லை. துளசி சாதுவானவள். மாமியார் , துளசியிடமே சண்டைப்போட்டு வீட்டைவிட்டு விரட்டி விடுவாள் என்று அவனுக்கு பயம்.
இந்த சமயத்தில் , மதியின் சிறுவயது முதல் நண்பனாக இருக்கும் கோபி ,’ அன்பு இல்லம்’ பற்றி சொன்னான். கோபி ஒரு டாக்டர்.அவன் மாதா மாதம் அந்த இல்லத்துக்கு அங்கு இருக்கும் முதியோர்களை செக்கப் செய்வதற்காக போவதுண்டு.வெளிநாட்டுக்கு வேலை காரணமாக செல்வோர் தங்கள் வயதான பெற்றோர்களை பாதுகாப்பு கருதி அங்கு விட்டு செல்வர்.அங்கு நல்ல வசதிகளும், பராமரிப்பும். அதற்குத் தகுந்த கட்டணமும் உண்டு.அதைச்சென்று பார்வையிட்ட மதி மிகவும் திருப்தியாகி , அம்மாவை அங்கே சேர்த்து விட்டுத்தான் துபாய் போனான்.
அங்கே போவதில் துளசிக்கு விருப்பமே இல்லை. ஆனால் அம்மா அங்கே சேரா விட்டல் தான் துபாய் போகப் போவதில்லை என்று மதி திட்டவட்டமாக சொல்லி விட்டதால் , அவனுக்கு வரும் நல்ல சான்ஸ்ஸை கெடுக்க வேண்டாமென்று சம்மதித்தாள்.
தங்கள் யோசனையை அவன் நிராகரித்ததிலும், துளசிக்காக இவ்வளவு செலவு செய்வதிலும் அம்மா,பெண்இருவருக்குமேகோபம்,எரிச்சல்.அதைஅவனிடம்காட்டமுடியாது.அதனால் சமயம் வாய்க்கும் போதெல்லாம் துளசியிடமே காட்ட முற்பட்டனர்.துளசிக்கும் இதெல்லாம் தெரியும். வெளிநாட்டில் போய் வாழும் பிள்ளை இதனால் மனைவியிடம் சண்டையிட்டுக்கொண்டு நிம்மதி இழக்கக் கூடாது என்று கண்டும் காணாமல் போய்விடுவாள்.
அன்றுமாலை , துளசியின் மூன்று வயது பேத்தி தீபா, சோபாவில் குதித்து, குதித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அருகில் வந்த சுதா , சுளீரென்று முதுகில் ஒரு அறை வைக்கஒன்றும் புரியாமல் ஓ வென்று அழுதது குழந்தை. “குழந்தையை ஏன் இப்படி அடிக்கறே” என்று பதறி துளசி எடுத்து அணைத்துக் கொள்ள,”நீங்க சும்மா இருங்க. இப்படி குதிச்சுக்கிட்டே இருந்தா சோபா என்னாகும்? புதிசு,புதிசா
வாங்கிப்போட பணம் என்ன மரத்திலயா காய்க்குது? துபாய் வெய்யல்ல வாடி, வதங்கி வேலை செய்து சம்பாதிக்கறாரு. யாருக்கு அந்த நெனப்பு இருக்கு ?” என்று சம்பந்த மில்லாமல் சாடிவிட்டு தீபாவை அழ அழ பிடுங்கிக் கொண்டு போனாள்.
சரசுவும் தன் பங்குக்கு, “அவ சொல்றது சரிதானே சம்பந்திம்மா. அப்படி ஒரு வெய்யில் அடிக்குமாமே துபாயில். அப்படிப்பட்ட வெய்யல்ல ,மாப்பிள்ளை ஓடி,ஓடி உழைக்கறதெல்லாம் எதுக்கு ? பெண்டு,பிள்ளைங்களுக்கு நாலு காசு சேர்த்து வைக்கறதுக்குத்தானே. அத இங்கே இருந்துக்கிட்டு தாம் தூம்னு செலவு பண்ணினா எப்படீ. ? நா ஒரு பேச்சுக்கு சொல்றேன்னு வச்சுக்குங்க. இந்த வீட்ல இருந்தா உங்களுக்கு என்ன , மிஞ்சி,மிஞ்சி போனாலும் ஒரு ஐயாயிரம் செலவாகுமா? இப்ப அந்த இல்லத்துக்கு எவ்வளவு கட்ட வேண்டியிருக்குப் பாருங்க.நீங்க தனியா இருக்க வேண்டாம்னா நான் வந்து துணையா இருக்கேன்னு சொல்றேன்.உங்க பிள்ள காதுல போட்டுக்கறதில்ல. ஒருவேள உங்களுக்கே அதுல இஷ்டம் இல்லையோ
என்னமோ.” சமயம் கிடைத்தது என்று போட்டு வாங்க முயன்றாள் சரசு.
துளசி எழுந்தாள் நிதானமாக , ” என் பிள்ளை வந்ததும் , இப்ப என் கிட்ட சொன்னதெல்லாம் அவன்கிட்ட சொல்லிடுங்க ” என்றவள் அங்கிருந்து சென்று விட, அம்மாவும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
” உன் மாமிக்கு நெஞ்சழுத்தம் அதிகம்டி ” என்றாள் சரசு.
” உன் மாப்பிள்ளைக்கு என்னைவிட அவங்கம்மாதான் உசத்தி. என் தலையெழுத்து அது.”என்று குறைப்பட்டுக்கொண்டாள் சுதா.
மறுநாள் காலை துளசி தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சமையல் அறைக்குள் வந்தவள் , மேடைமேல் பொங்கலும் சட்னியும் இருக்க ஒரு தட்டில் கொஞ்சம் எடுத்துப்போட்டுக் கொண்டு அங்கேயே கீழே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அப்போது தன் பெண்ணுக்கு பால் எடுத்துக் கொடுக்க உள்ளே வந்த சுதா, ஆச்சர்யப்படுபவள் போல்,”. என்ன சாப்டறீங்க ?” என்றாள்.
” பொங்கல் தான் சுதா. ”
” ஐயையோ. நான் அம்மாவுக்குத்தான் கொஞ்சம் பொங்கல் வச்சிருந்தேன். அதை சாப்பிட்டிட்டீங்களா? அம்மாவுக்கு காலை வேளைல ஒண்ணும் சாப்பிடாட்டி தல சுத்தல் வரும். கேட்டுட்டு எடுக்க மாட்டீங்களா?” சுதா ஆத்திரத்துடன் கத்த , திகைத்தாள்துளசி.
அவள் வீட்டில் அவள் சாப்பிட யாரைக்கேட்க வேண்டும். ஆனாலும் பொறுமையாக ” அதுல இன்னும் இருக்கே சுதா” என்றாள்.
” என்ன இருக்கு இதுல . இது எப்படி பத்தும்?”
” நான் வந்தது தெரியாதா? இன்னும் கொஞ்சம் சேர்த்து பண்ணியிருக்கலாமே. ”
” உங்களுக்கு ஹோம்ல நெய்யும், முந்திரியும் போட்டு ரிச்சா சாப்பிட்டு பழக்கம். நாங்கள்ளாம் அப்படி செலவழிக்க முடியுமா. ஏதோ கொஞ்சம் போட்டு பண்ணியிருக்கேன்.அது உங்களுக்கு புடிக்குமோ புடிக்காதோன்னுதான் உங்களுக்கு சேர்த்து பண்ணலை.” என்று குத்தலாக சொல்லி விட்டு ,” அம்மா இன்னிக்கு உனக்கு டிபன் இல்லை. விரதம்தான்.” என்று கத்தியபடியே வெளியே போனாள்.
துளசிக்கு அதற்குமேல் சாப்பிட பிடிக்கவில்லை. மீதம் இருந்த பொங்கலை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தட்டை தேய்த்து வைத்துவிட்டு தன்னறைக்கு போனவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
போய் வாந்தி எடுத்தாள். முகம் வேர்த்து கண்களில் கண்ணீர் வந்தது. ” பாட்டி அழறீங்களா” என்று அருகில் வந்து கேட்டது தீபா. ” இல்லடா செல்லம், பாட்டிக்கு வயிறு வலிக்குது” என்றாள். ” வீட்டுச்சாப்பாடு பாட்டிக்கு ஒத்துக்காது. அதான் வயிறு வலிக்குது.” என்று தானும் தன் பங்குக்கு குத்தலாக சொன்னாள் சரசு.
துளசி சண்டையை வளர்க்க விரும்பாது தன்னறைக்குப்போனாள். நாளை மறுநாள் மதி வந்து விடுவான். அவன் இருக்கும்போது இவர்கள் அடங்கிப்போய் விடுவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் வயிறு சண்டைக்குத் தயாராகிவிட்டது. மேலும் மேலும் வாந்தி வந்தது, பொங்கலோடு வயிற்றுக்குள் இருக்கும் அத்தனையும் வெளியே வந்து விழுந்து விடும்போல. சோர்ந்து போனாள்.
தீபா, ” அம்மா பாட்டிக்கு வயித்து வலியாம். மருந்து கொடு ” என்றது .
“அம்மாஎன்ன மருந்துக்கடையா வச்சிருக்கா , கேட்டதும் எடுத்துக் கொடுக்க? ”
” இந்தப் பாட்டிக்கு வேணும்னா போய் வாங்கிட்டு வருவேயில்ல? போய் வாங்கிட்டு வாம்மா”
” ஏய், நீ வேற என்னை கடுப்பேத்தாதே. போடி” என்று எரிந்து விழுந்தாள் சுதா.
தீபா உள்ளே போய், ” பாட்டி ரொம்ப வயித்த வலிக்குதா? அம்மாகிட்ட மருந்து இல்லையாம்.” என்று வயிற்றைத் தடவிக்கொடுத்தது. ஆனால் அதை உணரும் நிலையில் துளசி இல்லை . நினைவு தப்பிப் போயிற்று.
அம்மாவும், பெண்ணும் மேலும் என்ன செய்து ஹோமிலிருந்து துளசியை வீட்டுக்கு வரவழைப்பதோடு , சரசுவையும் இங்கேயே தங்க வைக்கலாம் என்று பேசி பேசி திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். அம்மாவும் இங்கேயே வந்து விட்டால் தன் கை ஓங்கி விடும் அப்புறம் மாமியார்செல்லாக் காசுதான் என்ற எண்ணம் சுதாவுக்கு. தன் கணவன் எது ஒன்றுக்கும் மாமியாரைக் கேட்டு, கேட்டு செய்வது அவளுக்கு பொறுக்க முடியாத்தாக இருந்தது.
சரசு வேறு அடிக்கடி, “உனக்கு சாமர்த்தியம் போதாது , உங்கண்ணியைப் பார் உங்கண்ணனை கைக்குள் போட்டுக்கொண்டாள்.” என்று போட்டுக் கொடுத்துக்கொண்டே இருப்பாள்.இருவரும் சாப்பிட உட்காரும் நேரம் வாசல் காலிங் பெல் அடிக்க ” இந்நேரத்தில் யார்?என்று சுதா அலுத்துக்கொண்டே போய்திறக்க, வெளியே கோபி நின்றுக்கொண்டிருந்தான்.
மனதுக்குள் அலுத்துக்கொண்டே, ” வாங்க” என்றாலும் உள்ளே விடாமல் , ” அவரு நாளைக்குத்தான் வராரு” என்றாள். ” தெரியும். அவன் போன் பண்ணியிருந்தான் . இன்றைக்கு இல்லத்துக்குப் போயிருந்தேன் . அம்மா இங்கே வந்திட்டதா சொன்னாங்க. போன மாசமே அம்மாவுக்கு பிரஷர் கொஞ்சம் ஏறி இருந்தது. அதான் பார்த்துட்டு போகலாம்னு ஆஸ்பத்திரி போற வழியில வந்தேன்” என்றான்.
வேறு வழியில்லாமல் அவனை உள்ளே விட்டாள் சுதா.
தீபாவைப்பார்த்து கொஞ்சி விட்டு ” பாட்டி எங்கே ” என்று கேட்க ” பாட்டிக்கு வயித்து வலி, நிறைய வாமிட் பண்ணாங்க” என்று சொல்லியவாறே அவன் கைப்பற்றி உள்ளே அழைத்துப் போனது. சற்று பதட்டத்துடன் உள்ளே போய் செக்கப் செய்த கோபி , வாசற்படி அருகில் வந்து நின்ற சுதாவை சற்றுக் கோபத்துடன் பார்த்தான்.
” என்ன அண்ணி இது? பிரஷர் அதிகமாயிருக்கு, நிறைய வாமிட் வேற பண்ணினதா தீபா சொல்றா. அவங்க மயக்கமாயிட்டாங்க. கவனிக்காம விட்டிருக்கீங்க” என்று கடுமையாக சொன்னவன், உடனே ஆம்புலன்ஸ்ஸை வரவழைத்து , சரசு சொல்லிக்கொண்டிருந்த சமாளிப்பு சமாதானங்களை காதில் வாங்காமல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டான்.
சுதா இவ்வளவு எதிர் பார்க்காத தால் பயந்து தானும் கூடப்போய்விட்டாள். ட்ரிப்ஸ் ஏற்றியதில் மாலையே நினைவு திரும்பி விட்டது. இருந்தாலும் இன்று இங்கு இருக்கட்டும் நாளை நானே கொண்டு விடுகிறேன் என்று சுதாவை அனுப்பி விட்டான் கோபி.
விடியற்காலையிலேயே வந்திருக்க வேண்டிய மதி ,ஃபிளைட் லேட்டானதால் ஒன்பது மணிக்கு மேல்தான் வந்தான். அவன் அம்மாவைப்பற்றிக் கேட்டால் என்ன சொல்வது என்ற பதட்டத்தில் இருந்தாள் சுதா.
சரசு அலட்சியமாக ” வயிற்று வலியும், வாந்தியும் எல்லோருக்கும்தான் வரும். அதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய் சரியாயிடிச்சு இல்ல? இதுக்கென்ன கவலை?” என்று சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தாள்.
வந்ததுமே “அம்மா ஹோம்ல இருந்து வந்துட்டங்களா? அம்மா எங்கே “என்று தான் கேட்டான். சுதா பதில் சொல்ல தயங்க,சரசு ” ஒண்ணுமில்ல மாப்ள , சம்பந்திம்மாவுக்கு கொஞ்சம் வயிறு சரியாயில்ல,ஆஸ் பத்திரி போயிருக்காங்க . இப்ப வந்திடுவாங்க” என்று சொல்லி முடிக்குமுன் ” என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா ? ” என்று மதி பதற, அவன் மடிமீது அமர்ந்திருந்த தீபா,
” அப்பா நேத்திக்கு அம்மா பாட்டியை திட்டினாங்களா ” என்று ஆரம்பிக்க திக்கென்றது சுதாவுக்கு. ” ஏய் உளறாதே . சும்மாஇரு ” என்று அதட்டினாள் சரசு.
” நீங்க சும்மாயிருங்க , என்ன சொல்றே தீபா அம்மா பாட்டியை திட்டினாளா”?
” சரசு பாட்டிக்கு பொங்கல் பண்ணியிருந்தாங்களா, அத துளசி பாட்டி சாப்பிட்டாங்கன்னு அம்மா திட்டினாங்க” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டது தீபா.
தன்னைப்பார்த்த கணவனின் பார்வையிலிருந்த நெருப்பைக் கண்டு நடுங்கிப்போனாள் சுதா. சரசு சமாளிக்க நினைத்து “குழந்தைக்கு என்ன தெரியும் , அது ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு சொல்லுது. சுதா அப்படியெல்லாம் பேசறவளா? தெரியதா உங்களுக்கு அவளப்பத்தி?” என்று சொல்ல , “தெரியுமே.அவ உங்க பெண்ணாச்சே , இதுவும் பேசுவா ,இன்னமும் பேசுவா” என்றான் மதி.
” மாப்பிள்ளே நான் உங்க மாமியார், அதோட வயசுல பெரியவ கொஞ்சம் மதிப்பா பேசுங்க”
” நான் உங்கள மதிக்கணும் ஆனா உங்க பொண்ணு அவ மாமியார மதிக்கக்கூடாது.
இல்லையா? அவளுக்குத் தெரியாட்டியும் சொல்லித்தர நீங்க இருக்கீங்களே”
” என்னங்க , எங்கம்மாவ ரொம்ப அவமானப் படுத்தறீங்க ”
” உன்னை விடவா? ” என்றவன் சரசுவைப்பார்த்து, ” இது எங்க குடும்ப விஷயம். நீங்க தலையிட வேண்டாம். வந்தாச்சு, பார்த்தாச்சு இல்ல? கிளம்புங்க.”
சுதா கோபத்துடன்,” ஏங்க நீங்க அம்மா,அம்மாங்கறீங்க இல்ல? என் அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கில்லையா? என்று கேட்டாள்.
” அது உங்கண்ணனுக்கு இருக்கணும்.இல்லாம பண்ணது யாரு? உங்கம்மாதானே? இங்க வந்தா எனக்கும்,எங்கம்மாவுக்குமே வேண்டாம பண்ணிடுவாங்க. ஒண்ணு பண்ணு , நீ உன் அம்மாகூட போய் இரு. நான் செலவுக்கு பணம் அனுப்பறேன்.
சுதா. வாயை மூடிக் கொண்டாள்.
“இதோ நீங்க இரண்டு பேருமே கேட்டுக்குங்க , இன்னிக்கி நாம வாழற இந்த சொகுஸு வாழ்க்கைக்கு காரணமே எங்கம்மாதான். கிராமத்துல ஏகப்பட்ட நிலங்கள், சொந்தமா பெரிய மச்சு வீடு எல்லாம் இந்தது எங்கம்மாவுக்கு. அம்மாவை பெரிய வீட்டம்மானுதான் அந்த ஊர்ல இருக்கறவங்க கூப்பிடுவாங்க . எங்கப்பா சாகும்போது நான் சின்ன பையன். அம்மாதான் ஆளுங்களை வச்சு விவசாயம் செய்து கொண்டிருந்தாங்க.
எங்க ஊர்ல ஐந்தாம் வகுப்புக்கு மேல படிக்க அப்ப வசதி இல்ல. சென்னையில் நல்ல ஸ்கூல்ல சேர்த்து என்னை படிக்க வைக்கணும்னு அம்மா ஆசைப்பட்டாங்க. சொந்தக்காரங்கள்ளாம் இங்க இருந்தாங்க. ஆனா யார் வீட்லயும் விட அம்மாவுக்கு விருப்பமில்லை. இங்கே வீடு வாடகைக்கு எடுத்து தானும் இங்க வந்து இருந்து என்னை படிக்க வச்சாங்க. அம்மாவின் கவனிப்பு இல்லாத்தால் விவசாயம் சரியா நடக்கலை. இங்கேயும் குடும்பம்நடத்த, படிப்பு செலவுன்னு நிறைய இருந்தது. அதனால கொஞ்ச,கொஞ்சமா நிலத்தை வித்தாங்க. பிளஸ்2 முடிச்சதும் நான் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்.
“பின்னால முடியறப்போ சொத்து வாங்கிக்கலாம் நீ படிப்பான்னு ” காலேஜில் சேர்த்தாங்க. நான் படிச்சு முடியறப்போ நிலம், வீடு எல்லாமே கைவிட்டு போயிடுத்து. பிறகு எனக்கு வேலை கிடைக்கறதுக்குள்ளே , குடும்பம் நடத்த அம்மாவின் நகைகளையும் விற்க வேண்டி வந்தது.
யார்கிட்டயும் போய் நிற்கக் கூடாது, கடன் வாங்கக்கூடாது என்று எனக்காக தன் கடைசி காசு வரை கொடுத்தவங்க என் அம்மா. அந்த நிலங்களும், வீடும் இருந்தால் இன்று ராணி மாதிரி அந்த ஊர்ல இருந்துருப்பாங்க.
இந்த வீடு அவங்களாலதான் வாங்கினேன். நான் சம்பாதிக்கிறதெல்லாம் அவங்களலாலதான். என்னை ஐந்தாம் வகுப்போடு நிறுத்தி விவசாயத்தை பார்த்துக்கோடானானு சொல்லியிருக்கலாம். ஆனா நான் படிக்கணும்னு ஆசைப்பட்டதால் எல்லாத்தையும் இழந்து என்னை படிக்க வச்சாங்க.அதனாலதான் நீ என்ஜினியர் பெண்டாட்டின்னு பெருமையா சொல்லிக்கறே.
அவங்களை நான் நல்லா வச்சுக்க நினைக்கறேன். அவங்களுக்குத்தான் இங்கே முதல் உரிமை அப்புறம்தான் உனக்கு. அத புரிஞ்சு இருக்கறதானா இரு. இல்லாட்டி உங்கம்மாகூட புறப்படு.
இப்போ நான் ஆஸ்பத்திரிக்கு போய் அம்மாவை….. என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மாவை அழைத்துக்கொண்டு கோபி உள்ளே வந்தான்.
“” அம்மா ! “” என்று மதி எழுந்திருக்கும் போதே சுதா வேகமாக சென்று ” என்னை மன்னிச்சுடுங்க அத்தை ” என்று அவளை பிடித்துக்கொண்டாள். அவளை அன்புடன் தடவிக்கொடுத்து விட்டு..மலர்ந்த முகத்துடன் பிள்ளையின் பக்கம் திரும்பினாள்துளசி.
(இந்தக் கதை சொந்தக் கற்பனை, பெயர்களும் கற்பனை)
விசாலாக்ஷி ராமசந்திரன்..