அவனும் நானும்-அத்தியாயம்-10

வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து எங்கு செல்வதென்று தெரியாது காரிலேயே சுழன்று கொண்டிருந்தவள்,கடற்கரையினை நோக்கி வண்டியினைச் செலுத்தினாள்...

இன்னும் எத்தனை நாட்களிற்கு அஸ்வினிடம் இருந்து ஓடி ஒளியப் போகிறாய் என்று அவளின் உள்மனது கேள்வி கேட்டுக் கொண்டாலும்,இப்போதைக்கு அதற்கான பதில் அவளிடத்தில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...

அஸ்வினிடம் அவளின் கடந்த காலத்தினை சொல்லவும் அவள் தயாராக இல்லை...அதே நேரத்தில் இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை...நிச்சயம் அஸ்வின் தனது முடிவினை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதினை அவள் நன்கே அறிவாள்...அவளை விடவுமே பிடிவாதக்காரன் அவன்...என்ன சொல்லி அவன் மனதினை மாற்றுவதென்று புரியாமல் குழப்பித்தின் உச்சியில் நின்று கொண்டு தவித்துதுக் கொண்டிருந்தாள் அவள்...

தனிமையைத் தேடி கடற்கரைக்கு வந்தவளுக்கு,தனிமை கிடைத்ததோ இல்லையோ..அவனின் ஞாபங்கள் தோன்றி அவள் மனதின் நினைவுத்தூறல்களை மீண்டும் தட்டியெழுப்பத் துவங்கியிருந்தன...

அன்றொருநாள் மாலை வேளையில் இதே கடற்கரையில் வைத்து அவளிற்கும் அவனுக்குமான சந்திப்பு என்னவோ எதேட்சையாகத்தான் நிகழ்ந்தது...ஆனால் அவனுடன் அன்று அவள் கழித்த அந்த சில மணித்துளைகளைக் கூட அவளால் என்றுமே மனதை விட்டு அகற்றிவிட முடியாது...கல்லூரியில் அவன் அவளிற்கு ஏற்கனவே சீனியர் என்ற வகையில் அறிமுகம் என்றாலும்,அவனுடனான நட்பு துளிர்விடத் துவங்கியது அந்தச் சந்திப்பின் பின்னர்தான்...

அன்று அவளின் நண்பி சௌமியோடுதான் அவள் கடற்கரைக்கு வருவதாக இருந்தது...கிளம்பும் நேரத்தில் சௌமியின் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிடவும் அவள் மட்டுமாகவே தனித்து வந்திருந்தாள்...வந்து வந்து சென்று கொண்டிருந்த கடலலைகளோடு கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தவள்...துள்ளிக் குதித்தவாறே திரும்பிப் பார்க்கவும், அங்கே அவன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டவாறு அவளையே பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்...

ஓர் நிமிடம் அவனின் பார்வையில் கட்டுண்டு நின்றவள்,பின் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்...அவனைக் காணாதவாறு செல்லவும் வழியற்றுப் போனதால்,அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து வைத்தாள்...

அவளின் புன்னகையை சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டவன்,அவளை நோக்கி மெது மெதுவாய் காலடிகளை எடுத்து வைத்து அவளுக்கருகாய் வந்து நின்று கொண்டான்...

"ஹாய்...என்ன காலேஜ் பக்கம் இரண்டு நாளாய் ஆளை காணவேயில்லை...??.."

"நான் வரலைன்னு இவனுக்கு எப்படித் தெரியும்..??.."என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்,வெளியில்...

"பாட்டியோட 75வது பிறந்தநாள் வந்திச்சு...அதான் எல்லோருமாய் ஊருக்குப் போயிட்டு வந்தோம்..."

"ம்ம்...ஆமா தனியாவா வந்திருக்குற...?உன்கூட எப்பவுமே ஒருத்தி இருப்பாளே அவள் எங்க..??.."

"யாரு சௌமியா...??.."

"ம்ம்.."

"கிளம்புறப்போ அவள் வீட்டிற்கு கெஸ்ட் வந்திட்டாங்க...அதான் நான் மட்டும் தனியா வந்தேன்.."

"ஒருவிதத்தில அவள் வராததும் நல்லதுக்குத்தான்...இல்லைன்னா எனக்கு கம்பனி கொடுக்க நீ கிடைச்சிருக்க மாட்டியே....??.."என்று புன்னகையோடு பேசுபவனையே
விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...

அவனிற்கு அவள் வைத்த பெயரே கடுவன் பூனை..எப்போதும் சிடுசிடுவென்றுதான் அவனை அவள் பார்த்திருக்கிறாள்...அப்படிப்பட்டவன் இன்று அவனாகவே வந்து கலகலப்பாய் பேசவும் அவனையே விழி பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல் நோக்கிக் கொண்டிருந்தாள்...

"என்ன அப்படிப் பார்க்குற..ம்ம்...??.."

அவன் அதை நேரடியாகவே கேட்டு வைத்ததில் முதலில் தடுமாறியவள்,பின் சமாளித்துக் கொண்டாள்...

"இல்லையே நான் ஒன்னும் பார்க்கலையே..??.."

"அப்படியா..??..என்று புருவத்தை மேலுயர்த்தியவாறே கேலிப் புன்னகையொன்றினை சிதறவிட்டவன்,

"என்னடா காலேஜ்ல எப்பப் பார்த்தாலும் சிடுமூஞ்சி மாதிரியே சுத்திட்டு இருக்கிறவன்,இப்போ இங்க வந்து சிரிச்சுப் பேசிட்டு இருக்கான்னு பார்க்குறியா..??.."

அவளின் மனதைப் படித்தவன் போல் அவன் பேசி வைக்கவும்,அதிர்ச்சியோடு அவனை நோக்கியவள்,ஆமாம் என்பதாக தலையினை மேலும் கீழுமாய் அசைத்துக் கொண்டாள்...

"ஹா...ஹா...ரொம்பவும் தலையை ஆட்டாத...அப்புறம் ஒரேடியாய் கழன்டு வந்திடப் போகுது..."

"சரி வா...இப்படி நடந்துகிட்டே பேசலாம்.."

"ம்ம்.."என்றவாறே அவன் காட்டிய பக்கமாய் அவனோடு அவளும் இணைந்து நடந்தாள்...அவன் என்னவோ காலம் காலமாய் பழகியவனைப் போல் அவளோடு கதைத்துக் கொண்டே வந்தான்...அளைப்பற்றி அவளின் குடும்பத்தைபற்றி அனைத்தையுமே ஒன்றுவிடாது கேட்டுத் தெரிந்து கொண்டான்..ஆனால் அவளிற்குத்தான் ஒரு வார்த்தை அவனிடம் பேசுவதற்கே படாத பாடு பட வேண்டியதாகிற்று...

"என்ன நான் மட்டுமே பேசிட்டு வாறேன்...நீ பாட்டுக்கு அமைதியாவே வந்திட்டிருக்க...என்கிட்ட கேட்க உனக்கு ஒன்னுமேயில்லையா என்ன...??.."

அவன் தலையைச் சரித்து புன்னகையோடு கேட்ட விதத்தில் அவளின் உள்ளம் முதற்தடவையாக எதுவென்றே சொல்லிட முடியா ஓர் உணர்வில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது...

"என்ன கேட்கனும்...??.."

"எதுன்னாலும் கேளு...நான் உன்கிட்ட துருவித் துருவி எவ்வளவு கேட்டேன்..நீ என்ன இவ்வளவு அமைதியாய் இருக்க...உன்னை ஒரு வார்த்தை பேச வைக்கவே நான் ஒரு லட்சம் கூலி கொடுக்கனும் போலயே.."

ஏனோ தெரியவில்லை...அவனைப் போல் அவளால் அவனிடம் சகஜமாகப் பேச முடியவில்லை...

"நான்...நான் கிளம்பட்டுமா...??.."

அவள் இப்படிக் கேட்டதுமே அவன் முகம் ஓர் நிமிடம் இறுகிப் பின் பழையது போல் மாறியதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை...

"ஏன் பிடிக்கலையா..??..."என்று கேட்டவனின் விழிகளிரண்டும் அவளை அம்பாய் துளைத்ததில் விக்கித்துப் போய் நின்றவள்...

"என்..என்ன...??.."

"என்கூடப் பேசப் பிடிக்கலையான்னு கேட்டேன்...அதுக்கேன் இவ்வளவு பதற்றம்..??."

"சரி நீ கிளம்பு...நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம்..."என்றவனின் குரலில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..

"இல்லை...அது...நான்.."என்று அவள் மாறி மாறி உளறிக் கொட்டத் துவங்கவும்,

"அதான் போன்னு சொல்லிட்டேனே...நாளைக்குப் பேசிக்கலாம்...போ..."என்றவாறே அவன்  முகத்தைத் திருப்பிக் கொள்ளவும்,அதற்கு மேலும் அங்கே தாமதிக்காமல் கிளம்ப முற்பட்டாள்..

ஆனால் அப்போதென்று பார்த்து சில்லென்று வீசிக் கொண்டிருந்த காற்றோடு பறந்து வந்த தூசித் துகளொன்று அவளின் கண்களிற்குள் புகுந்து அவளின் விழிகளைத் திறக்கவிடாது அடைத்துக்கொண்டது...அவள் கண்களைக் கசக்கியவாறே நகரவும்,

"இங்க காட்டு நான் எடுத்து விடுறேன்.."

"இல்லை பரவாயில்லை..."

"பச்..."என்று சலித்துக் கொண்டவாறே அவள் கையினைப் பிடித்து அவன் பக்கமாய் இழுத்தவன்,கைவிரல்களால் அவளின் விழிகளைத் திறந்து தன் சுவாசத்தினை அவளின் விழிகளுக்குள் கலந்திடச் செய்தான்...

அவன் ஊதியதில் தூசி வெளியே வந்ததோ இல்லையோ...அவனுக்கு மிக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தவளின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுள் செல்ல ஆரம்பித்தது...

முதற்தடவையாய் ஓர்ஆணின் வாசத்தை இவ்வளவு அருகாமையில் சுவாசித்துக் கொண்டதில் அவளின் இருதயம் அதன் வசத்தினை மெது மெதுவாய் இழக்க ஆரம்பித்தது...அப்படியே அவள் விழிகளோடு தன் விழிகளையும் கலந்திடச் செய்தவன்,அவளின் உள்ளத்தையும் சத்தமின்றியே களவாடிக் கொண்டான்....

அன்றைய நாளின் நினைவில் அவனின் சுவாசம் தீண்டிய விழியினை ஸ்பரிசித்துக் கொண்டவள்,கண்களை மூடி கடந்த காலத்திலிருந்து தன்னை முழுவதுமாய் விடுவித்துக் கொண்டாள்...இனியும் அங்கேயேயிருந்தால் மீண்டும் அவன் நினைவுகள் தொல்லை செய்யும் என்ற காரணத்தால் கிளம்பத் தயாரானாள்...

மணலைத்தட்டி விட்டவாறே எழும்பியவள்,அவளிற்கு சற்றுத் தூரமாய் பரிச்சயமான ஆணின் முகம் தெரியவும்,அருகே சென்று பார்த்தாள்...ஆனால் அருகில் சென்றதும்தான் அவனுக்கருகே ஓர் பெண்ணும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கொண்டாள்,முதலில் இருவரையுமே அங்கே இணைத்துக் கண்டதிலேயே திகைத்துப் போனவள்...அவர்கள் அதன்பின் பேசியவற்றை முழுமையாகக் கேட்டதில் மொத்தமாய் அதிர்ந்து போய் நின்றாள்...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (15-Jun-18, 4:19 pm)
பார்வை : 525

மேலே