துன்பிடைத் தூய்மை சுடர்விடும் பொன்போல் - துன்பம் 14

வலைத்தளத்தில் கீழேயுள்ள இணைப்பில் ’நீதிநூல்’ 448 ஆம் பாடல் கீழே கொடுத்துள்ளபடி உள்ளது. இது ஒரு எழுசீர் ஆசிரிய விருத்தம்;

இதை அசை பிரிக்கும் பொழுது ஒரு ஒழுங்கில் வரவில்லை. முதல் மற்றும் நான்காம் அடியின் ஏழாம் சீர் ஓரசையாக உள்ளது.

அறமென் பதற்கும் அறிவுக்கும் மூலம்
அஞராகும் உலகின் பமே
மறமென் பதற்கும் மடமைக்கும் வித்து
மகவிச்சை யாறொழுகல் கண்டு
இறையும் தகப்பன் முனியாமை சீற்ற
ஏற்றத்தின் நீர்மை எனல்போல்
உறுபுன்க ணின்றி ஒருவன் சுகங்கள்
உறலீசன் முனிவா குமால்.

(எனவே கீழேயுள்ளது போல் பிரித்தால் விளம் மா விளம் மா / விளம் விளம் மா என்ற அமைப்பில் பெரும்பாலான இடங்களில் விளத்திற்குப் பதிலாக மாங்காய்ச்சீர்கள் வருகின்றன)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அறமென்ப தற்கும் அறிவுக்கும் மூலம்
..அஞராகும் உலகின்ப மேயாம்
மறமென்ப தற்கும் மடமைக்கும் வித்து
..மகவிச்சை யாறொழு கல்கண்(டு)
இறையும்த கப்பன் முனியாமை சீற்ற
..ஏற்றத்தின் நீர்மையெ னல்போல்
உறுபுன்க ணின்றி ஒருவன்சு கங்கள்
..உறலீசன் முனிவாகு மாலாம்!.. 14

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

துன்பமே நன்மை செய்வதற்கும் அறிவு வளர்வதற்கும் காரணமாகும்.

உலக இன்பத்தின் மீதுள்ள விருப்பமே பாவம் செய்தற்கும் மூடத்தனத்திற்கும் வித்தாகும்.

பிள்ளை தன் மனம் போல் நடக்கக் கண்டும் பெற்றவன் சிறிதும் சினம் கொள்ளாதிருப்பது மிக்க சினத்தின் அடையாளமாகும்.

அதுபோல, துன்பமின்றி ஒருவன் இன்பங்கள் அடைந்தால், அதுவே ஆண்டவனின் முதிர்ந்த சினத்தின் அடையாளமாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மூலம் - காரணம். அஞர் - துன்பம். மறம் - பாவம். வித்து - காரணம். முனிவு - முதிர்சினம். புன்கண் - துன்பம். அஞர் - the ignorant ; 2 . affiction 3. bale: கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர், நோவு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-18, 9:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 194

சிறந்த கட்டுரைகள்

மேலே