தொலையும் அடையாளம்
தமிழ்
ஒவ்வொரு தமிழனின் அடையாளம். நம்முடைய தாய் மொழி. இந்த மொழியை தமிழராகிய நாம் பேசாமல், வேறு எவரும் இந்த உலகத்தில் பேசப்போவதில்லை. நம் மொழி அழிந்து தேய்ந்து, நெளிந்து கொண்டு இருக்கிறது. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழை உயிருக்கு நிகராக நினைத்த நாம் இன்று அவல நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எந்த மொழிக்கும் இல்லாத சிறப்புகள் தமிழுக்கு இருக்கிறது. நாம் இதை அடுத்தவர்களுக்கு எடுத்த உரைக்கவில்லை என்றாலும் அதை சிதைக்கவேண்டாமே.
ஆங்கிலம் பேசினால் தான் நாகரீகம் என்று நினைப்பவர்களே,ஆங்கிலம் தான் எனக்கு பிடித்திருக்கு, ஆங்கிலம் தான் சோறு போடுகிறது என்று கூறுபவர்கள் ஒரு விடயத்தை யோசிக்க வேண்டும். தகவல் தொழிநுட்பத் துறையில் இருப்பவர்களே, ஜப்பான் நாட்டினர்; கணினியை பற்றி அவர்களுடைய தாய் மொழியில் தான் படிக்கின்றார்கள். அவர்களுடைய மொழியில் தான் பதிகின்றார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் படிக்கவில்லை. ஏன் என்றால் வேற்று மொழியில் படிப்பதை விட தாய் மொழியில் படிப்பது எளிதில் புரியும். அதனால் தான் அவர்கள் இப்படி ஒரு வளர்ச்சி அடைந்துள்ளனர். எல்லோரிடமும் ஆங்கிலம் வேண்டாம் என்பது தான் ஆதங்கம். தமிழர்களோடு பேசும் பொழுது தமிழில் பேசவேண்டும் என்ற என்ன எண்ண வரவேண்டும்.
ஒரு வாக்கியம் பேசினால் நிச்சயமாக குறைந்த பட்சம் ஒரு வார்த்தையாவது ஆங்கிலத்தில் இருக்கிறது. நாம் முயன்றால் இதை நிச்சயம் மாற்றலாம். நம் தாய் தந்தையரை தெருவில் விட்டுவிட்டு முதியோர் இல்லம் நடத்தினால் எப்படியோ, அது போல் தான் நம் தாய் மொழியை விட்டுவிட்டு ஆங்கில மோகத்தில் திரிவது. தமிழர்களிடம் பேசுவதற்கு ஏன் வேற்று மொழி. நமக்கு தமிழ் தெரியும் அவர்களுக்கும் தமிழ் புரியும். பிறகு ஏன்? நம் மொழிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அதை காப்பது தமிழர்களாகிய நம்முடைய கடமை.
நம் மொழி நம்முடைய சொத்து, அடையாளம், அனைத்தும். அது சீர்கெட நாமே காரணமாக ஆகக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் போதும். ஹாய் என்று சொல்வதற்கு பதில் வணக்கம் என்று சொல்வோம். ஒரு நாளில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தோம் என்று யோசித்துப் பார்க்கணும். அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலவார்த்தைகளை நம்மிடம் இருந்து அகற்றுவோம். பழகிவிட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாம் நினைத்தால் நடக்கும். தமிழை காப்பது என்பது நம் அடையாளத்தை காப்பதுக்கு சமம்.
கார்த்திக்