நெருப்பு நொடிகள்-3

கருஞ் சாம்பல் நிற பார்க் அவென்யூ கோட்டுடன் கல்லூரி வளாகத்தை மிடுக்காய் சுற்றி வந்தபடி இருந்தார் கல்லூரியின் முதல்வர் திரு.கலைவாணன். தன் பழைய மாணவர்களை பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. சிலருடன் ஆர்வமாய் கைகுலுக்கிக்கொண்டார், சிலருடன் சத்தமாய் சிரித்துக்கொண்டார், சிலரை கண்டதும் சின்னதாய் முறைத்து பின் கட்டிக்கொண்டார். நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நான்கு மணியளவில் அனைவரும் அங்கே கூடிவிடுமாறு அறிவித்துவிட்டு தன் அறைக்குச் சென்றார் கலைவாணன்.

மோனா ஒரு வகுப்பறையின் வெளியே தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தனியாய் அமர்ந்திருந்தாள். டீனாவும் அவள் நண்பர்களும் கொஞ்ச நேரம் அவளோடு அமர்ந்து பேசிவிட்டுச் சென்றனர். அதற்கு மேல் அவள் அதிகமாய் பேச விரும்பவில்லை என்பது கண்கூடாய் தெரிந்தது. அந்த பெஞ்சில் கவராயம் கொண்டு கிறுக்கப்பட்டிருந்த யாரோ சிலரின் பெயர்கள் அவளை கடந்தகாலம் நோக்கி இழுத்துச் சென்றது.

***************************************************************************

"மோனா! எங்கே இருக்க??", மென்மலரின் சத்தம் தொலைவில் கேட்டது.

சில்லென்று வீசிய தென்றலை மெதுவாய் சுவாசித்து தன்னுள் நிரப்பி கொண்டிருந்தாள் மோனா. பழங்கால கட்டிடங்கள் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது அக்கல்லூரியில். பல வகுப்பறைகளின் கற்சுவர்கள் அதற்குச் சான்று. பசும்போர்வைப் போர்த்தியிருந்த கல்லூரி வளாகம் பெரும்தோட்டத்தின் நடுவே இருக்கும் உணர்வைக் கொடுக்கும். வருட காலமாய் அங்கே வேரூன்றியிருந்த சில மரங்கள் பல வண்ணப்பறவைகளின் வசிப்பிடமாய் இருந்ததது. இவ்வளவு அழகிய சூழலில் படிக்க யாருக்குத்தான் கசக்கும்.

கல்லூரியின் மாணாக்கர் எண்ணிக்கை அவ்வருடம் கணிசமாய் உயர்ந்திருந்தது. தன் பணிக்காலம் நிறைவடையும் முன் கல்லூரியில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவந்துவிட வேண்டுமென கல்லூரி முதல்வர் கலைவாணன் நினைத்திருந்தார். அதன் முயற்சியாக கலைநிகழ்ச்சிகள் நடத்த மூன்றாயிரம் பேர் அமரும் வசதிகொண்ட காமராஜர் அரங்கம் எழுப்பப்பட்டது. கூடவே இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகங்களுக்கு உயர்தர வசதிகள் செய்யப்பட்டன. கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை மரபெஞ்சுகளால் அழகூட்டப்பட்டிருந்தது. கூட்டம் இல்லாத சமயங்களில் அவ்விடம் மனதிற்கு அத்தனை இளைப்பாறுதலை தரும். மோனாவின் மிகவும் விருப்பத்திற்குரிய இடம் அது. அன்றும் அவள் அங்கு தான் இருந்தாள்.

"வா மலர்.. நான் இங்க தான் இருப்பேன்னு தெரியாதா?", மூச்சிரைக்க நின்றிருந்த மென்மலரிடம் கேட்டாள் மோனா.

"போடி. எத்தனை இடத்துல உன்னை தேடிட்டு வரேன் தெரியுமா!", சலித்துக்கொண்ட மலர் கையோடு மோனாவை இழுத்துச் சென்றாள்.

சிற்றுண்டியின் மற்றொரு மூலையில் அமர்ந்திருந்த டீனாவும் அவள் நண்பர்களும் சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் மார்டினை நோக்கினர். அவன் சின்னதாய் புன்னகைத்துக் கொண்டே எழுந்துச்செல்ல முயன்றான். டேய்.. எங்கே போற? அடேய் அடேய்.. சத்யாவின் சத்தத்தை காதில் போட்டுக்கொள்ளாமல் எழுந்தவனை டீனா பிடித்து அமர்த்தினாள். "லைப்ரரியில் இருந்த எங்களை கேன்டீன் போகணும்னு கூட்டிட்டு வரும்போதே சுதாரிச்சிருக்கணும்..", மார்டினின் காதுகளை பிடித்துத்திருகினாள். "அவ தான் பிடிகொடுத்து பேசமாட்டேங்குறாளே.. அப்புறம் ஏன் இப்படி??", ப்ரியாவும் தன் பங்கிற்கு அவனை திட்டிக்கொண்டாள்.

"அதெல்லாம் உங்களுக்கு புரியாது.. அவ ஒரு பொண்ணு. மனசுல உள்ளதை பேசத்தயங்குறா", மோனாவிற்கு வக்காலத்து வாங்குவதாய் எண்ணிக்கொண்டு ப்ரியாவையும் டீனாவையும் வெறுப்பேற்றிவிட்ட மார்டினை கையில் கிடைத்த பொருட்களை கொண்டு துவம்சம் செய்தனர் இருவரும். சத்யா சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் ஒரு கலை நிகழ்ச்சியில் தான் மோனாவை முதன்முறை சந்தித்தான் மார்டின். ஊதா நிற கவுன் அணிந்திருந்தாள் அவள். நடனம் முடிந்து மேடையின் பின்னால் உள்ள ஓய்வறைக்கு உடைமாற்றச் சென்ற மோனா வெளியே வந்தபோது முதல் ஆளாய் சென்று வாழ்த்தினான் மார்டின். ரொம்ப அழகா இருந்தது உங்க "டான்ஸ்" என்று சொல்ல நினைத்தவன், பதற்றத்தில் "டிரஸ்" என்று சொல்லிவிட்டு தடுமாறினான். முறைக்கப் போகிறாள், அறையப் போகிறாள் என்று உள்ளுக்குள் படபடத்தவனை அவள் இயல்பாய் சிரித்து திகைப்பூட்டினாள். "பரவாயில்லை! அழகான டிரஸ் தான்! அடுத்த முறை டான்ஸையும் பாராட்டணும் சரியா!!", அவன் நிலை புரிந்து பேசிவிட்டுச் சென்றாள் மோனா.

மோனாவின் துணிச்சலும், துறுதுறுப்பும் மார்டினை முழுதாய் கொள்ளைக்கொண்டன. அதன் பிறகு வந்த நாட்களில் மோனாவின் சின்னப் புன்னகையையும், செல்லக் கோபங்களையும் தூர இருந்து பார்த்து ரசித்தான் அவன். காதலில் நண்பர்கள் படும்பாட்டை கேட்கவா வேண்டும். மோனா செல்லும் இடங்களில் எல்லாம் மார்டினும் இருந்தான். அவனோடு அவன் நட்புகளும் இருக்கவேண்டியிருந்தது. அவள் அறியாமல் அவள் கைப்பையில் குடிவந்த பூக்களுக்கு டீனாவும், ப்ரியாவும் பொறுப்பேற்க வேண்டி வந்தது. கல்லூரி நாட்கள் கறையத்தொடங்கிய போது மார்டினின் காதல் கிளைகள் பரப்பி வளரத்தொடங்கிற்று.

அன்று மார்டினுக்கு விஷப்பரீட்சை. மோனாவிடம் தன் காதலைச் சொல்ல இரவுப்பகலாய் ஒத்திகை பார்த்துக்கொண்டான் மார்டின். சத்யா ஒருபக்கம், ப்ரியா ஒருபக்கம் என ஆலோசனைகளால் அவனை துளைத்தெடுத்தனர். ஐந்து நிமிட போருக்கு ஆறேழு நாட்களாய் புறப்பட்டவன் களம் கண்டபோது, இருநொடிகளில் தன் வாள்வீச்சை நிகழ்த்தி முடித்தான். ஏதேதோ பேசவேண்டுமென நினைத்தவன் இதை மட்டுமே பேசினான்.

மோனா..

ம்ம்ம்??

காலேஜ் முடிச்சு வேலைக்கு போயி..

போயி??

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாமா?

கற்சிலையாய் உறைந்துபோனாள் மோனா. தன் முன் பாவம்போல் நிற்கும் மார்டினிடம் செருப்பை தூக்கிக்காட்ட நிச்சயம் அவளுக்கு தோன்றவில்லை. இல்லையென்று தலை அசைத்தாள். அவள் செய்கைகளை புரிந்துகொள்ள முடியாமல் விழித்த மார்டின், அவள் கண்களில் பதிலை கண்டுக்கொண்டான். அவன் இதயத்தை புண்படுத்தாமல் அவள் சொல்ல முயல்வது, அவள் உணர்வுகளற்ற விழிகளில் அவனுக்கு விளங்கியது. "மன்னிக்கணும் மார்டின். எனக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை", சொல்லிவிட்டு நின்றாள் மோனா. புன்னகைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் மார்டின்.

"மார்டின்! என்ன ஆச்சு? அவ ஒகே சொல்லிட்டாளா? சொல்லுடா?" டீனாவும் ப்ரியாவும் உற்சாகமாய் கேட்டனர்.

"ஒன்னும் சொல்லாம போயிட்டா..", பொய்யாய் சிரித்தான் மார்டின்.

"அப்போ எதிர்காலத்துல வாய்ப்பிருக்குனு சொல்லு", நண்பனை கட்டிக்கொண்டான் சத்யா.

தொடரும்..

எழுதியவர் : மது (12-Jul-18, 4:54 pm)
பார்வை : 1125

மேலே