ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள் கம்பன் திறமை

கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.

காரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்!

கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே

பொருள்:-

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு, சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.

இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.

கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.

தமிழ் இசைக் கருவிகள்

1.காரைக்கால் அம்மையார் ஏழு பண்களையும் 11 இசைக் கருவிகளையும் கம்பனுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலிட்டார்

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

காரைக்கால் அம்மையாருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் மலைபடுகடாமில் ஒரு பட்டியலைப் பார்க்கிறோம்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இசை!!

லண்டன் ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (16-Jul-18, 7:06 pm)
பார்வை : 37

மேலே