இழந்து விட்ட அனுபவங்கள்
இழந்து விட்ட அனுபவங்கள்
நாலு காலை கட்டி
படுக்க வைத்து லாடம்
அடித்த காட்சிகள் வன்முறை
தெரிந்தாலும் அவைகளின் கால்களுக்கு
கவசம் போட்டு விட்ட பாசம்
“நலம் நலமறிய ஆவல்”
கடிதங்களை பிரித்து ஆர்வமாய்
வாசித்த கணங்கள் !
ஹேய் ஹேய்..சத்தமிட்டு
கம்பிரமாய் சாட்டையை சுழற்றி
பாதையில் ஓடிய குதிரை
வண்டி, மாட்டு வண்டி
ரேடியோவுக்கு “லைசென்ஸ் கட்ட
தபால் நிலையத்தில் வரிசையாய்
நின்றிருந்த காலம்
“தடங்கலுக்கு வருந்துகிறோம்”
பிரபலமான தூர்தர்ஷன் வாக்கியமும்
பின்னணி இசையும்
சரோஜ் நாராயணசாமியும்,
ஜெயா பாலாஜியும், வாசித்த
ரேடியோ செய்திகள்
இன்னும் எத்தனையோ?
அனுபவித்து அசை போடுகிறோம்
அறிவியலின் ஆதிக்கத்தில் இருக்கும்
இளைய தலை முறையினர்க்கு
இவையெல்லாம் இழந்து விட்ட
அனுபவங்கள் !