வேறுபட்டு கிடக்கிறார்கள்
இலங்கை வாழ் முதியவர்
திருநீரோடு நெற்றி, சிவந்த தேகம்,
தமிழோடு உதடுகள், நல்ல உயரம்,
அள்ளி முடித்த முடி, அமைதி முகம்,
அனைத்தும் துறவிபோல,
ஆலங்குடி வந்து தங்கியவர்
ஒரு நாள் தில்லைக்கு சென்று
ஆடும் நடராஜனைத் தரிசித்து
கோவிலை சுற்றி வலம் வந்தபோது
கூடவே அழகு நாய்க்குட்டி ஒன்று
நன்றியோடு தொடர்வதைக் கண்டு
நெகிழ்ந்து போனார்
அழகு நாய்க்குட்டியின் பாசம்
ஆசைகளைத் துறந்தவரின் மனத்தை
இறைத்த கிணறுபோலாக்கியது,
நொறுக்கு தீனி வாங்கி
நாய்க்குட்டிக்கும் தந்து விட்டு
பேருந்து நிலையம் புறப்பட்டார்
தொடரும் நாய்க்குட்டியை
தடுத்து விரட்ட கல்லால் அடித்தார்
காலில் அடிபட்டு இரத்தம் கசிய
கத்தியவாறே ஓடியது
பெரியவர் மனம் தவித்தது
பேருந்து புறப்பட்டது
நாய்க்குட்டி யாருடையதென
நடத்துனர் கேட்டபோது தான்
நாய்க்குட்டி பயணிப்பது தெரிந்தது,
நாய்க்குட்டியை பார்த்தபோது
ஏக்கத்தோடு வாலை ஆட்டியது
பெரியவர் கண்கலங்கி விட்டார்—அதனை
இலங்கைக்கும் அழைத்து போனார்
மண்ணில் பேதம் பார்க்காமல்
முளைக்கும் விதைபோல
பூமியை பிரித்து பார்க்க
பாவம் மிருகங்களுக்கும் தெரிவதில்லை,
பூமியை பிரித்த மனிதர்கள் தான்
வேற்று நாடுகளென
வேறுபட்டு கிடக்கிறார்கள்