விதவை

கண்ணீர்ப் படலம்

உணர்வுகளைக் கிள்ளி எறியும்
பொல்லாத உலகம் இது
பெண்களின் மனம் உடைக்கும்
ஆண்களின் தேசம் இது

உறவென்ற சொந்தங்கள் செய்யும்
கொடுமையின் ஆட்டம் இது
கலங்கியே வாடும் பாவை
வடிக்கின்ற சோகம் இது

கண்ணீரில் கதை எழுதும்
தேவனின் சூழ்ச்சி இது
சுமை கொண்டு எனை வாழ்வு
சோடித்த படலம் இது

பருவம் முளைத்த பொழுதில்
சிறகை உடைத்து விட்டார்
கனவுகள் வரும் முன்பே
கண்களைக் கொய்து எடுத்தார்

திருமணம் என்ற பெயரில்
என்னைச் சிறை வைத்தார்
கருணை ஏதும் இன்றி
அவசர முடி வெடுத்தார்

என்னைப் பொதி செய்து
எங்கோ அனுப்பி வைத்தார்
என் ஆசையைக் கேளாமல்
தங்கள் பாரம் குறைத்தார்

பெண்ணாய்ப் பிறப்பது பாவம்
கொடுமை நிறைந்த உலகினிலே
பெண்மை கொண்ட சாபம்
கனவுகள் எல்லாம் தொலைவினிலே

காலன் செய்த மாயம்
கணவன் இல்லை அருகினிலே
நான் வந்த நேரம்
அவன் சீவன் காற்றினிலே

வீட்டார் கொண்ட வேகம்
எந்தன் வாழ்வு தீயினிலே
எச்சில் வைத்த பண்டம்
இன்று வாடுது தனிமையிலே

மோகம் வரும் முன்னே
மேகம் என்னைச் சூழ
எங்கே நிலவு வாழும்
தனிமையின் கூண்டின் உள்ளே

துன்பம் தரும் சொல்லை
என் பெயர் தாங்க
எங்கே இன்பந் தோன்றும்
மனதைச் செல் அரிக்க

இளமை பொங்கும் இடையே
வெள்ளைச் சேலை கட்ட
எங்ஙனம் இச்சை தீரும்
முடிவில் கதை தொடங்க

பிள்ளை வரம் கிட்டா
பாவி இவள் தேகம்
மெல்ல இங்கு சாவதை
அறிவார் எவரும் இல்லை

பூவும் பொட்டும் இல்லா
மங்கை இவள் துன்பம்
மேலும் அங்கம் ஆள்வதை
தடுப்பார் யாரும் இல்லை

என்னை எவரும் எண்ணா
வலிகள் கொண்ட உச்சம்
ஆவியைச் சுட்டு எரிப்பதை
அணைப்பார் அருகில் இல்லை

நேற்றைய வாழ்வு இங்கே
மண்ணில் கைகள் சேருமோ
மீண்டும் குழந்தை போலே
என்னைக் காலம் கடத்தாதோ

துள்ளித் திரிந்த வயதுகள்
மறுபடி ஒரு முறை வாராதோ
தோழியரோடு செய்த குறும்புகள்
கனவிலும் இங்கு நிகழாதோ

இடையில் நின்ற கல்வியை
திரும்பச் சிந்தை சுவைக்காதோ
பிறந்த வீட்டின் கதவுகள்
என்னை மீண்டும் ஏற்காதோ

-கவிக்காவலன்

எழுதியவர் : கவிக் காவலன் (12-Aug-18, 3:45 pm)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : vithavai
பார்வை : 1549

மேலே