அன்பின் புனிதச் சின்னம்

அன்னையர்கள் எல்லோரும்
அன்னப்பறவைகள் போல்தான்...
குருதியிலிருந்து
பாலைப் பிரிக்கும்
மாயம் அறிந்தவர்கள்…!

நிலமாய் கருப்பை..
நீராய் முலைப்பால்..
உண்ணமாய் உடற்சூடு..
வலியிலும் வளியூட்டிய
தொப்பூழ்கொடி...
விசும்பாய் அண்டம்…
ஆம்…
அன்னையர்கள் எல்லோரும்
ஐம்பூதங்களின்
அடையாளம்தான் …!

இருள் விழுங்கிய
கருவறைச் சிறையிலும்
யாரும் அறியா வண்ணம்
உந்திநாளத்தில் உணவு
கடத்தியூட்டும்
அன்னையர்கள் எல்லோரும்
அன்பின் புனிதச் சின்னம்தான்….!

கருவறையில் இருந்ததால்தான்
என்னவோ…
பிள்ளைகளை கடவுளாய்
பார்க்கிறார்கள் அன்னையர்கள்...
ஆனால்...
கருவறை நிரந்தரமாய்
கதவடைக்கப்பட்டு..
ஆலயங்கள்
பாழடைந்து போகும்போது..
பிள்ளைகள் சிலபேர்
ஆலயம் மறு(ற)க்கும்
நாத்தீகர்களாய் மாறிவிடுகிறார்கள்…!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (21-Aug-18, 3:50 pm)
பார்வை : 78

மேலே