தனிமை தடங்கள்
சிட்டுக்குருவிகளிடம் மனம்விட்டுப்பேச
காலையிலும் மாலையிலும்
கிடைக்கவில்லை தனிமை
சன்னல் நுழைய முயற்சிக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கு வழிகாட்ட
கிடைக்கவில்லை தனிமை
மழைக்குமுன் உலாவரும்
தென்றலை நூல்பிடித்தாற்போல்
ஊர் சுற்றிட இரவிலும்
கிடைக்கவில்லை தனிமை
மலர்சூடி வெட்கப்படும் பெண்ணின்
சுகந்தத்தை நினைத்து நினைத்து
ரசித்திடவும் கிடைக்கவில்லை தனிமை
கறிவேப்பிலை தோட்டத்தில்
பழக்கப்பட்ட தும்பிகளிடம்
மனம் விட்டுப்பேச
கிடைக்கவில்லை தனிமை
செல்லக்குழந்தைகளின்
சின்ன சின்ன பிடிவாதங்களில்
கட்டுண்டு கிடக்க
கிடைக்கவில்லை தனிமை
அதிகாலையில் அளவளாவிட
மலைக்கோவிலின் பாறையில்
அமர்ந்து எதிர் காற்றில்
ஆனந்த கண்ணீர் வடித்திட
கிடைக்கவில்லை தனிமை
தென்னை ஏறி தினம் வரும்
அணிலுக்கு சோறுவைத்து
அது உண்ணும் பொழுதில்
என் வயிற்றையும் நிறைத்திட
கிடைக்கவில்லையே தனிமை!
கைபேசி உலக வாழ்க்கையில்!!!

