ஞான ஊற்றே பெருக்கெடு

முத்தமிட்டு முத்துகளாக சிதறிய மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாய் மாறி பள்ளம் நோக்கி பாயும்,
பள்ளமும் மேவியே மேட்டை நாடி பாயும்,
அறியாத அறிவியல் விதி என்னவோ?
விதியும் மாறும் விந்தை காணாயோ?

காணாத விதிகள் பல அகிலத்தில் உண்டு,
எல்லாம் கண்டதாய் குலைக்காதே நீயும்,
மொழியால் வளர்ந்து மெலியார் விதியை சட்டமிட்டு
தீர்மானித்த நீயும் மண்ணுள்ளே புதையும் காலம்
அறிந்து புதையாமல் தப்பித்துக் கொள்வாயோ?

கொள்வாய் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வாய்,
கடவுள் என்று மதவெறியன் காலில் விழுந்தால்
அதைவிட அறியாமை என்றொன்று உண்டோ இழிவாய் மொழிந்திட,
எந்த கடவுளாவது சாதி, மதம், பிறப்பு இனம் மொழி என்று
பிரிவினை பாராட்டி தம் மக்கள் நிம்மதியை அழிப்பாரோ?

அழிப்பார் என்று அழிவார் என்று எண்ணுபவரை விட
அழிக்காது வாழும்முறையை கண்டு கடைபிடிப்பவரே மேலானவர்,
நேர்வழியில் வாழ நெஞ்சில் துணிவு வேண்டும்,
பாகுபாடுகள் ஒழிந்திட பகுத்தறிவு பயன்பட வேண்டும்,
ஏற்றமிகு எண்ணங்களை எல்லுலகும் எடுத்துரைக்க
அள்ளக்குறையாத அன்பாகிய ஞான ஊற்றே பெருக்கெடு....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Aug-18, 5:10 pm)
பார்வை : 1072

மேலே