காந்தக் குரலெடுத்து அழைத்து விடு
ஒரு நூற்றாண்டைப் புதைத்தாலும்
ஒரு வரலாற்றை நாம் விதைத்திருக்கிறோம்.-அது
வேர்விட்டு வளர்ந்து
ஒரு விருட்சமாக விரிந்து –பலர்
வாழ்வுக்குப் பெரும் நிழலாக அமையும் !
கடலில் போட்டாலும்-ஒரு
கட்டுமரமாக மிதப்பவன் அல்லவா நீ.
போர்களத்தில் விட்டால் –ஒரு
போர்வீரனாக வாளைச் சுழற்றும்
துணிச்சல்காரன் நீ !
சூரியனாய் ஒளிகொடுத்து –பல
நிலாக்களை ஒளிரச் செய்தவன் –அதே
சூரியக் கதிர்களால்
ஆரவாரம் செய்த நச்சுக் கிருமிகளைச்
செயல் இழக்கச் செய்தவன் நீ !
ஒளி நிலவாய் ஒளி தந்து –பல
இதய அறைகளில் அறிவு என்னும்
விளக்கினை ஏற்றியவன் நீ!
கடனாகப் பெற்றிருந்த
அண்ணாவின் இதயத்தைத்
திருப்பித் தருவதற்காய் சென்றாலும்
எங்கள் இதயமது வெடிக்கிறது.
எமனவனை எரித்திடவே துடிக்கிறது
கண்களோ கண்ணீரை வடிக்கிறது.
இதயத்தைக் கொடுத்துவிட்டு மறக்காமல்
எங்களிடம் வந்துவிடு !
துடிக்க மறந்திட்ட எங்களை இதயத்தை
துடிக்க நீ வைத்துவிடு!
விழித்திரையை மறைக்கின்ற
கண்ணீர்த் திரையை
விலக்கிடவே விரைந்திங்கே வந்து விடு!
அன்பு உடன் பிறப்புகளே என்று
உன் காந்தக் குரலெடுத்து
ஒரே ஒரு முறை அழைத்து விடு.