அழநீயும் வைத்த தேனோ

சூரியனாய் பவனி வந்து
சுறுசுறுப்பாய் தொண்டு செய்தாய்
மாரியென பொழிந்து நின்று
மக்களினம் மகிழ வைத்தாய்
காரிருளை அகற்றி வைத்து
கலங்கிடுவார் இன்னல் தீர்த்தாய்
பாரியென வாழ்ந்தி ருந்து
பசிதனையும் துரத்தி நின்றாய்.

பழமையிலே மூழ்கி நின்றார்
பயம்போக்க வழி வகுத்தாய்
இளமையிலே முதிர்ந்தவன் போல்
இயல்புடனே செயல் முடித்தாய்
இலக்கியத்தின் இனிமை தன்னை
எளிதாக்கி விருந்தளித்தாய்
நலம்பயக்கும் திட்ட மெல்லாம்
நாட்டுக்காய் ஆக்கி வைத்தாய்.

முத்தமிழாய் இனித்தி ருந்து
மக்களெல்லாம் மகிழ்ந்திருக்க
தித்திக்கும் சொல்லெடுத்து
தீந்தமிழை மொழிந்து வந்தாய்
எத்திக்கும் கலைஞர் என்றே
எழுகின்ற ஒலிகள் கேட்க
முத்திரையை பதித்து விட்டு
நித்திரையை கொண்ட தேனோ ?

உறங்காமல் உழைத்து நின்று
ஒப்பற்ற தலைவன் ஆனாய்
மறக்காது தமிழர் கூட்டம்
மாமலையாய் உன்னைப் போற்றும்
உறவான எம்மை இன்று
உருக்குலைய வைத்த தேனோ ?
அறம்மறந்து உறவு தம்மை
அழநீயும் வைத்த தேனோ ?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (23-Aug-18, 5:23 pm)
பார்வை : 413

மேலே