எந்த நட்சத்திரம் நீ
அன்றும் இதே போன்ற ஒரு இரவு
நிலவைத் தொலைத்த வானம்
நீளும் கடற்கரை
முகம் மறைக்கும் கும்மிருட்டு
ஆர்ப்பரிக்கும் கடல்
நானும் நீயும் தனியே
மணலின் ஈரம் மனதை நனைக்க
மெளன நடை
நம் அந்தரங்கம் மதித்து
நண்டுகள்கூட தம் பொந்துக்குள்
முகம் புதைத்துக்கொண்டன
மணல் நடையில் சமனிழந்து
உரசி விலகும் நம் உடல்களிலிருந்து
உருகி வழிந்த பேரன்பில்
அந்த இரவு ஈரமானது
இணைந்த விரல்களினூடே
எண்ணற்ற கனவுப்பறிமாற்றம்
வாய்மொழியற்ற சம்பாஷணை
ஊடலும் பின் கூடலுமாய்
உயிர்ப்போடுலவிய
நெடுங்காதல் பாயணம்
இது போதுமென
இரு மனங்களும் சொல்லும்
ஓர் இலையுதிர்கால நாளில்
பழுத்த இலைகள் இரண்டு மெதுவாய்
மிக மெதுவாய் மரத்திலிருந்து
விலகிச் செல்வதுபோல்
விரல்கோர்த்து ஒன்றாய்
விடைபெறும் நம்
கடைசிக் கனவு மட்டும்
கைகூடாமலே போனது
இதோ இன்னுமொரு
நிலவைத் தொலைத்த இரவு
நிலா முற்றத்தில் மல்லாந்து
விழித்துக் கிடக்கிறேன்
எண்ணற்ற நட்சத்திரங்களில்
எந்த நட்சத்திரம்
நீ.