இடஒதுக்கீடு அதுவே சமூகநீதி

நமது சமூகமானது அடிப்படையிலேயே சாதிய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளோடே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.பெரியார், அண்ணா,கலைஞர் இவர்களெல்லாம் பெரும்பாலும் எதிர்க்கபடுவதற்கு சொல்லப்படும் காரணம் இவர்களின் நாத்திக கொள்கை. ஆனால் உண்மையில் இவர்கள் எதிர்க்கப்பட்டதற்கான காரணம் இவர்களின் சமூகநீதி கொள்கையும்,அதற்கு இவர்கள் ஆற்றிய தொண்டுமே ஆகும்.பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையிலெடுத்ததும் கூட மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலுமே இங்கே சாதி என்ற ஒன்று பாதுக்காக்கபடுகிறது என்பதற்க்காகத்தான்.இன்று நம்மில் பெரும்பாலானோர் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.ஆனால் அதற்கான வழி பள்ளி சான்றிதழிலும்,இன்னபிற சான்றிதழ்களிலும் சாதியை குறிப்பிடாமல் இருப்பதும்,சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே ஆகாது.இன்னும் சொல்லப்போனால் அவற்றினால் இந்த சாதிய கட்டமைப்பின் துரும்பைக்கூட அசைக்க முடியாது.அதற்கான ஒரேவழி "சமூகநீதி-இடஒதுக்கீடு" மட்டுமே. இதனால் சாதியை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.ஆனால், இடஒதுக்கீட்டின் மூலமாக சாதி என்ற கட்டமைப்பின் ஆணிவேரான ஏற்றத்தாழ்வையும்,ஆதிக்க வர்க்கத்தினர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மீது தொடுக்கும் அடக்குமுறைகளையும் உடைக்கலாம்.இடஒதுக்கீடு என்பது சலுகையோ,இலவசமோ அல்ல...அது காலங்காலமாக ஆதிக்க வர்க்கத்தினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உரிமையாகும்.இன்று இடஒதுக்கீடே கூடாது என்றும்,தங்களுக்கு இடஒதுக்கீடே வேண்டாமென்றும் கொக்கரிக்கும் பிரமாணச் சமூகம் தான் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் முதன்முதலில் இடஒதுக்கீட்டிற்காகவும்,அரசு எந்திரத்தில் சமவாய்ப்பு வேண்டியும் போராடியவர்கள்.அதன் பலனாகவே இன்று அரசு எந்திரத்தின் பெரும்பகுதியை அச்சமூக மக்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.இங்கு பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டின் காரணமாகவே சமூகத்தில் பின்தங்கிய மக்களில் பலர் மேற்ப்படிப்பை தொடர்கின்றனர்.இந்திய மாநிலங்களிலேயே பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்கின்ற மாணவர்கள் தமிழகத்தில் தான் அதிகம்.தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் சதவீதமானது ஒட்டுமொத்த இந்தியாவில் உயர்கல்வி கற்பவர்களின் சராசரியைவிட அதிகமாகும். அரசு துறையில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வேலைவாய்ப்பு பெறுவதும் இங்கேதான்.இங்கே பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கையான இடஒதுக்கீட்டினால் பெற்ற கல்வி மற்றம் வேலைவாய்ப்பை கொண்டே பலர் இச்சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை வென்றுவருகின்றனர்.தமிழக வளர்ச்சியிலும் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி கொள்கை பெரும் பங்காற்றியிருக்கிறது.அதன் காரணமாகவே இங்குள்ள அனைத்து சாதி மக்களிலிருந்தும் குறைந்தது ஒரு மருத்துவரையாவது நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது(இன்று நீட் என்ற ஒன்றை நம்மீது திணிப்பதற்கான காரணங்களுல் இது மிக முக்கியமான ஒன்று),அனைத்து சமூகத்திலிருந்தும் பல பொறியாளர்களையும்,இன்னும் பிற துறைகளில் பல பட்டதாரிகளையும் உருவாக்க முடிந்தது.இவற்றின் பலனை அறிந்ததினால் தான் "வி.பி.சிங்" ஆட்சியின் போது தமிழகத்தில் பின்பற்றப்படும் 69சதவீத இடஒதுக்கீடு கொள்கையானது மத்தியிலும் அமல்படுத்தப்பட்டது.இங்கே பின்பற்றப்படும் சமூகநீதி கொள்கையின் காரணமாகவே மனித வளக்குறியீட்டு வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் தான் "நோபல் பரிசு" பெற்ற பொருளாதார அறிஞர் "அமார்த்திய ஜென்" இந்தியாவிற்கான உண்மையான மாடல் வளர்ச்சி தமிழகமும்,கேரளமும் மட்டுமே,ஏனெனில் அவ்விருமாநிலங்களே மனித வளக்குறியீட்டில் சீரான வளர்ச்சி இருந்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியும் சீராக இருக்கும் என்பதையுணர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக தமிழகம் அதில் சிறந்து விளங்குகிறது என்று ஆய்வு செய்து கூறியிருக்கிறார்.இம்மண்ணில் சமூகநீதி கொள்கை என்பது ஆழமாக வேரூன்றி இருக்கும் காரணத்தினாலேயே சில விசக்கிருமிகள் இங்கே காலூன்ற முடியாமல் தவிக்கின்றனர்.இடஒதுக்கீட்டின் பலனையும்,தேவையையும் அறிந்திருப்பதினால் தான் பல மேற்கத்திய நாடுகளில் இடஒதுக்கீடு கொள்கை இன்றளவும் பின்பற்றப்படுகிறது.இடஒதுக்கீட்டை கொண்டு மட்டுமே சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சியை கட்டமைக்க முடியும். இந்த சமூகநீதி கொள்கையினை பின்பற்றுவதினாலேயே பல விசயங்களில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது.எனவே இம்மண்ணுக்கான தேவை என்பது "சமூகநீதி-இடஒதுக்கீடு" கொள்கையே ஆகும்.அதுவே நம்மை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் காரணியாகும்.

எழுதியவர் : அக்பர் ஷரிஃப் (28-Aug-18, 4:26 pm)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 84

மேலே