மேல் தட்டு நாகரீகம்

மேல் தட்டு நாகரீகம்

மழையின் முன்னறிவிப்பை
மகிழமுடியாத கிழட்டு மயில்களாய்
மானிடம் மாளிகைக்குள்

தாவணி மங்கையரை
தவிர்த்துவிட்டு செல்லும்
பூசாரிகள்
சுடிதாரில் சுகம் காணும்

உயிர் காக்கும் ஊற்று தண்ணீரில்
உரமிட்டு வளர்ந்த
கட்டிடங்கள்
நாகரீகத்தின் வளர்ச்சிகள்

கலாச்சார சிந்தை
இன்று நாகரீக
கடிவாளம் போட்ட குதிரைகள்

ஆங்கில வசம்புகளை
அடிநாக்கில் தடவி
அரைகுறை உணர்வு
பரிமாற்றம் செய்யும் கிளிகள்

முதியோர் இல்லங்களில்
வயதோரை முட்டை இட்டு
சென்ற குயில்கூட்டம்
பணத்திற்காய் பட்டணங்களில்

கைத்தறிகளின் கைஉடைத்து
விசைத்தறிகளாய்
நாகரீக குழந்தையின் கையில்

நலிவின் வாயில்களில்
மாட்டிக்கொண்டு
அபாய மணிக்கயிற்றை
ஆட்டிக்கொண்டிருக்கும் உழவாளிகள்

வேர்பிளந்த பாறைகளாய்
மனித மனம்
இதயத்தின் கோடை
வெடிப்புகளின்மேல்
வெறுப்பு கொப்பளங்கள்

நச்சுப்பாம்பின் நாவிற்குள்
அமைந்த நகரத்திற்குள்
வசிக்கும் கோமாளிகள்
அறியாமலே வாழும் அறிவு ஜீவிகள்

எழுதியவர் : இளவல் (10-Sep-18, 3:21 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 69

மேலே