சாமியார்

சாமியார்

சாமிநாதனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது. இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு மனிதன் சுதந்திரமாக வெளியே போகலாம் என்றால் எல்லாவற்றுக்கும் தடை. இல்லையென்றால் என்னையும் கூட்டிச்செல்.என்று நச்சரிப்பு. அட ஒரு கோயிலுக்கு சென்று அமைதியாக இறைவனை தரிசித்து விட்டு அப்படியே கோயில் வளாகத்தில் கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தால் “ஆஹா” அதன் சுகமே தனி !. ஆனால் இதற்குத்தான் அவளிடமிருந்து எதிர்ப்பு. நாங்களும் வருவோம் என்று. அதாவது இவளையும் இவர்கள் பெற்றெடுத்த செல்வங்கள் இரண்டையும் கூட்டிக்கொண்டு கோயில் சென்றால் இவன் நிம்மதியாக கண்ணை மூடி உட்கார முடியாது. அதுகள் ஆடுகிற ஆட்டத்தில் இருக்கின்ற நிம்மதி கூட காணாமல் போய் விடும்.
சாமிநாதனின் மனைவிக்கு அப்படி ஒன்றும் சாமிநாதனை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவள் சாமிநாதன் கோயில் குளத்துக்கு போவதற்கோ, அல்லது அங்கு கண்ணை மூடி உட்கார்வதைப் பற்றியோ கவலைப்படமாட்டாள். ஆனால் அவள் மாமியார்க்காரி அதுதான் சாமிநாதனின் அம்மா ஒரு குண்டை அவள் காதில் போட்டு விட்டுத்தான் போய் சேந்திருந்தாள். அதாவது அவளுக்கு சொன்ன ஜோசியக்காரன் “சாமிநாதன் நாற்பத்தைந்தாவது வயதுக்கு அப்புறம் சாமியாராக போய் விட வாய்ப்பு உண்டு” இவன் பாட்டுக்கு கோயில் குளம் போகிறேன் என்று சொன்னால் இவள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டது போல் இருக்கும்.
இவள் இந்த அளவு கவலைப்படக்கூடிய ஆளல்ல நம் சாமிநாதன். பொறுப்பானவன், நல்ல ரசனை உள்ளவன், அழகை இரசிப்பவன், கதை கவிதைகளில் நாட்டம் உள்ளவன். நல்ல பாடகன் (என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்) இப்படிப்பட்டவன் சாமியாராக போய் விடுவான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
அவன் மனைவியே கூட இந்த சாமியார் விசயத்தை அவனிடம் சொல்லியிருந்தால் கண்டிப்பாக வாய் விட்டு சிரித்திருப்பான். அவள் அவனிடமும் விசயத்தை சொல்லாமல் இவனை கண்கொத்தி பாம்பாய் பார்ப்பது இவனுக்கு சில நேரங்களில் கோபத்தை வரவழைத்து விடுகிறது. ஒரு நாள் !
சாமிநாதன் அவசர அவசரமாக அலுவலகத்துக்குள் நுழைந்த போது உள்ளே அவரவர் சீட்டில் இல்லாமல் கூடி கூடி பரபரப்பாய் பேசிக்கொண்டிருந்தனர் (எப்பொழுதும் அப்படித்தான்.)
இவன் எதையும் கவனிக்காமல் தான் அலுவலகம் வந்துவிட்டதை தெரிவிக்கும் ஒப்புகை பதிவேட்டில் கையெழுத்தை போட்டு விட்டு அப்பாடா இன்னைக்கு வேலைக்கு வந்தாச்சு என்ற நிம்மதியுடன் தன் நாற்காலியில் உட்கார்ந்து அதற்கப்புறமே நடப்பவைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அங்கங்கே பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது சாமிநாதனை பார்த்து “இங்க வாப்பா முக்கியமான விசயமா பேசிக்கிட்டிருக்கிறோம், நீ பாட்டுக்கு அங்க உட்கார்ந்து என்ன பண்ணறே? (அதாவது அலுவலக வேலையை நீ மட்டும் எப்படி செய்யலாம்) இவனும் ரொம்ப பொறுப்பாக எழுந்து அவர்களிடம் சென்று என்னப்பா விசயம்? எல்லோரும் கூடி பேசிக்கிட்டிருக்கீங்க?
வர்ற ஒண்ணாம் தேதியோட நம்ம கம்பெனி ஆரம்பிச்சு இருபத்தைந்து வருசம் முடியறதுனால அன்னைக்கு விழா எடுக்கலாமுன்னு முடிவு பண்ணியிருக்காங்க. அன்னைக்கு நடக்கற விழாவுல நம்ம ஸ்டாப்களுக்கு தெரிஞ்ச திறமைகளை மேடையில் காட்டலாம்னு சொல்லியிருக்காங்க. நம்ம ராம்ஸ் டான்ஸ் ஆடறேன்னு சொல்றான், அதுதான் மேடை தாங்காதுன்னு சொல்லிகிட்டிருக்கோம். ஆமா நீ என்ன திறமையை காட்டப்போறே?
இப்பவே பேரை கொடுத்துடு. சாமிநாதன் யோசித்தான், நமக்கு என்ன தெரியும்? எல்லாம் தெரியும் என்று சொல்லி விடலாம், ஆனால் பாக்கறவங்க இரசிக்கணுமே, யோசித்தவன் திடீரென்று மாறு வேடப்போட்டியில் என்னுடைய பேரை சேர்த்துக்கோ, உடனே நண்பர்கள் கை கொடுத்து வெரி குட், என்ன வேசம் போடப்போறே? அது சஸ்பென்ஸ் என்றான். (உண்மையில் என்ன வேசம் போடலாம் என்று தெரியாமல் இருந்தான்).
அந்த நாளும் வந்தது, விழா மேடையில் ரகு மைக் முன்னால் நின்று விழா வரவேற்புரையை முடித்து விட்டு உங்கள் திறமையை காட்டும் நண்பர்களே, நம் விழாவிற்கு நம் விருந்தினர்க்ளோடு நம்மை ஆசிர்வதிக்க சாமியார் தவத்திரு “நாதன் சுவாமி”அவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் மேடையேறுமுன் அவரிடம் ஆசிர்வாத்த்தை பெற்றுக்கொண்டு உங்கள் திறமையை எங்களுக்கு காட்டுங்கள். மேடைக்கருகில் சுவாமிஜி அமர வைக்கப்பட்டார். பக்தி பிளம்பாக இருந்தார் சுவாமிஜி. ஒவ்வொருவராக மேடையேறுமுன் சுவாமிகளிடம் வந்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு மேடையேறி தங்கள் திறமையை காண்பித்தனர்.
அனைவரின் நிகழ்ச்சிகள் முடிந்த பின் ரகு எழுந்து சுவாமிஜி அவர்கள் எங்களுக்காக சில அருளுரைகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டான். சுவாமிஜியும் மெல்ல எழுந்து மேடையேறி மைக் முன் நின்று உங்கள் திறமைகளை அனைவரும் கண்டு மகிழ்ந்தோம், நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மெல்ல கீழிறங்கினார்.
இறுதியாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நடுவர்களிடமிருந்து பெறப்பட்டு, ரகு மேடையேறி விருந்தினர்களை மேடைக்கு அழைத்து அனைவரையும் உட்காரவைத்த பின் மைக் முன்னால் நின்று இப்பொழுது நடந்த கலை நிகழ்ச்சி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை வாசிக்கிறேன் வரிசையாக வந்து நம் விருந்தினர்களிடம் பரிசை பெற்று செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நடனம் முதல் பரிசு….என்று வாசிக்க ஆரம்பித்தான். மாறு வேடப்போட்டி முதல் பரிசு சாமிநாதன் என்று வாசிக்க “நாதன் சுவாமிகள் எழுந்து மேடையேறி பரிசை பெற்றுக்கொண்டான். கூட்டம் “ஹா” என்று வாயை பிளந்தது.
விழா முடிந்து ஓரிரு நாட்கள் கழிந்திருக்கும், சாமிநாதன் வீட்டில் போன் மணி அடித்தது. போனை எடுத்து அவன் மனைவி “ஹலோ” என்றாள்.
அங்கே “சாமியார் சாமிநாதன்” இருக்கறாரா? வாயை பிளந்து நின்றாள் சாமிநாதன் மனைவி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Sep-18, 11:35 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : saamiyaar
பார்வை : 175

மேலே