ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

ஏலே அந்த சேனல வைல.
அட இரும்மா அதுல விளம்பரம் தான போடுறான்.
சீக்கிரம் வை அவன் மொட்ட போடுறத பாப்போம்லே.
எம்மா எனக்கும் அத பாக்கனும் தா ஆனால் விளம்பரம் தானம்மா போடுறான். ஏல நீ வைக்கிறதுகுள்ள அத போட்டுருவான்லே. " இந்த வெளி லைட்ட ஆஃப் பண்ணிட்டு டீவி பாக்க வேண்டி தான" சொல்றீங்கள்ளா அப்படி நீங்களே ஆஃப் பண்ணிட்டு வர வேண்டியதானே. குற சொல்ல வந்துட்டாவோ.
ஆமா உங்களுக்கு சாப்பாடு வைக்கட்டுமாங்க. அதுலாம் இப்ப ஒன்னும் வேண்டாம்ட்டி. ஆமா போட்டானா அது.
ஆமா போட்டானே அப்பவே. உங்க மவன் தா வைக்கவே மாட்டுக்கான் விளம்பரம் விளம்பரமுன்னு சொல்லிட்டே இருக்கான் நீங்க தா கேட்கனும் உங்க மவனை.
“ஏல முதல்ல அத வைல ஏதோ போட்டு போட்டு காமிச்சா சண்ட வரும் இன்னைக்கு கண்டிப்பா, அத வைல பாப்போம்.” இல்லப்பா விளம்பரம் தா போடுறான்.ஏலே அத வைக்க சொன்னா உடனே வச்சி தொலையேம்ல பெரியவங்க பேச்ச கேளு அப்பும் தா நீ முன்னேறுவ. ஏப்பா நானு தா அத பாப்பேன்லா அப்புறம் எப்படி வைக்காம இருப்பே. இந்தா பாரு.
அம்மா ,அப்பா தம்பி மூனுபேரும் அந்த நிகழ்ச்சிய பாக்க மாறி மாறி சண்டைப் போட்டு ஆர்வ கோளாறுல இருந்தாங்க நா உள்ள வந்தது கூட யாரும் கண்டுக்கவே இல்ல. சரி அவங்க அங்க டிவிய பாக்கட்டும் நம்ம இங்க வாட்சப்ல ஸ்டேட்டஸ் போடா எதாவது வித்யாசமா கிடைக்கான்னு யூடியூப்ல பாப்போம்ன்னு வானத்த பாத்தபடி கட்டில்ல படுத்துட்டு மொபைல் போன்ல யூடியூப்ப தட்ட ஆரம்பிச்சேன்.
“இந்த வாரம் அவர் வெளியேறுவது நிச்சயம் "
அவரின் அழுகைக்கு காரணம் யார் தெரியுமா ?
“உண்மையில் இவங்க இரண்டுபேரும் லவ் தான் பண்றாங்களா"
இவர் மொட்டை போட்டுக்கொள்வாரா? மாட்டாறா? வீட்டை விட்டு வெளியே அனுப்பவடுவாரா இவர் ?
அப்பப்பா என்ன இது பாஸ் டாஸ்க்கா இல்ல லூஸ் டாஸ்க்கா ? அது சரி இத பத்தி பேசுறது தவிர வேற வேலையே இல்ல நாட்டுல. நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் இது தான் ஆரம்ப பிரச்சினையா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்களே எல்லோரும் அப்புறம் என்னத்த சொல்ல என மனதிற்குள் சிரித்தபடி நினைத்துக்கொண்டே எழுந்து நானும் டிவி பார்க்க வந்தேன். பக்கத்தில் வர வர
ஆங்கிலத்திலும், தப்பும் தவறுமாக தமிழிலும் பேசும் வார்த்தைகள் எங்க ஊரு சந்தக்கடையில் கேட்டமாதிரி சலசலவெனவும் , ஒரு சில வார்த்தைகள் எங்க பக்கத்து வீட்டு பாட்டிங்க பேசுவது போல் குசுகுசுவெனவும் காதில் விழுகிறது.
நானும் போய் டிவியின் முன் அமர்ந்தேன். என்னைப் பார்த்து எங்க அப்பா நீ எப்போ வந்தன்னு கேட்கல. என்ன பெத்த ஆத்தா நான் வந்ததை பார்க்கவே இல்லை. என்னோட உடன்பிறப்பு கண்டுக்கவே இல்லை. நானும் சரி என்று அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்..
சரி நான் மொட்டை போட்டுகிறேன்மா உனக்காக என்று இரண்டு பெண்களை தன் மார்பில் சாய்த்தபடி அழுகிறார். உடனே அம்மா ஏ ஆத்தாடி மொட்ட போடப்போறான்லே என்று வாயில் விரல்வைத்து பார்த்தால். நான் மீண்டும் என் மனதிற்குள் நினைத்தேன். அடுத்த வீட்டு சண்டை , சமாச்சாரம், பிரச்சனை என்றால் யாருக்கு தான் பிடிக்காது . இதுவும் ஒரு வியாபார உத்தி தான். இந்த மனோபாவம் தெரிந்து தான் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நாம எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது இந்த பிக் லூஸ். இப்ப இதிலிருந்து ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் இருக்கோம். சும்மாவா சொன்னாங்கா ஓடவும் முடியாது ஒழியவும் முடியாதுன்னு.

சுட்டித்தோழி சுபகலா,

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (12-Sep-18, 5:47 pm)
பார்வை : 333

மேலே