கல்லட்டி அருவி-------------காலஹஸ்தி அருவி------------குளிர்ப்பொழிவுகள்- ----------பயணம்

கல்லட்டி அருவியின் சரியான பெயர் காலஹஸ்தி அருவி. இங்கு அருவிக்கரையில் ஓர் இயற்கைக்குகை ஆலயமாக உள்ளது. இவ்வூர் காளஹஸ்திபுரா என அழைக்கப்படுகிறது.பின்னணியில் சந்திர துரோணா மலை நாநூறு அடி உயரமாக செங்குத்தாக எழுந்து நிற்கிறது. அங்கிருந்து கல்லட்டி என்னும் காட்டாறு விழுந்து பல அருவிகளாக மாறி கீழே வந்து குகையருகே மீண்டும் அருவியாக மாறி கீழிறங்கிச் செல்கிறது. இந்தக்குகை குகேஸ்வரர் அல்லது வீரபத்ரரின் ஆலயமாக இருந்தது. இப்போது இதை நவீன ஒட்டுஓடுகள் பதித்து கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்

செல்லும் வழி முழுக்க சில்லறை வணிகம். சிலர் சிலைகளை வாத்தியங்களுடன் கொண்டுவந்தனர். பிள்ளையாரா என்று பார்த்தேன், இல்லை. வீரபத்ரர் சிலைகள்தான். கர்நாடகத்திலுள்ள வீரபத்ர வழிபாடு காசிக்கு அடுத்தபடியாக என்று சொல்லலாம். பலருக்கு குடும்பதெய்வமே வீரபத்ரர்தான். வீரபத்ரசாமியை வெறும் தலையாக வைத்து வணங்குவதுமுண்டு

கல்லட்டி நீர்வீழ்ச்சியில் பாறைகளை யானைகளாக செதுக்கியிருந்தார்கள். தலையோடு தலைமுட்டிய மாபெரும் யானைநடுவே நீர் கொப்பளித்தது. இடுக்குக்குள் சிமிண்டால் ஆன ஒரு மும்முக சிவன். திரிசிரஸ் என்னும் தாந்திரிக சிவ வடிவம். மக்கள் நீராடி குகையுறைவோனை வணங்கிச் சென்றனர். அருவி நான்காள் உயரமானது. ஏராளமான குரங்குகள். ஒரு குரங்கு தேங்காய்மூடியை கரம்ப முயன்று வாய் எட்டாமல் சலித்து அதை தூக்கி வீசிவிட்டு மனம்பொறாமல் மீண்டும் எடுத்துக்கொண்டதைக் கண்டேன். இளம்குரங்குகள் சும்மாவே துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன

மேலே வெண்ணிற நாடாபோல அருவி மலையிலிருந்து நேரடியாகவே இறங்குவதைக் கண்டோம். ஒரு மலையேற்றம் செல்லலாமா என்ற எண்ணம் வந்தது. பேசிப்பார்த்தபோது அஜய் என்ற வழிகாட்டி சிக்கினார். இளைஞர், தமிழர். சொந்த ஊர் சேலம். சிக்மகளூர் மாவட்டத்தில் முப்பது சதவீதம்பேர் தமிழர்கள். காபிதோட்டங்களில் வேலைக்காக கொண்டுவரப்பட்டு இங்கேயே நிலத்தை கையகப்படுத்தி விவசாயம் செய்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்

அஜய் உட்பட பெரும்பாலானவர்கள் தமிழகத்துடன் உறவை தக்கவைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே கர்நாடக மண்ணின் ஒரு பகுதியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டுமிருக்கிறார்கள். பெரும்பாலும் அடித்தள விவசாயிகள், சிறுவணிகர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர். கர்நாடகத்தில் தான் தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகம். அடுத்தபடியாக ஆந்திரத்தில். அதன்பின் கேரளத்தில். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் ஓரளவு நிலைகொண்டவர்கள். ஊரைவிட்டு வந்ததுமே சாதிச்சழக்குகள் அகன்று பிழைக்கும்வழியைத் தேடும் மனநிலை வாய்த்துவிடுகிறது

இரண்டு மணிநேரம் செங்குத்தாக காபித்தோட்டம் வழியாகவும் காட்டினூடாகவும் ஏறிச்சென்றோம். மூச்சின் வலிமையை சோதிக்கும் பயணம்தான். நடுவே குறிஞ்சி பூத்திருந்தாது. நீலம் ஊதாவாக மாறி சிவப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. உதிரப்போகும் நிலை. ஆங்காங்கே நின்று மூச்சிரைக்கச் சென்றோம்

அருவியில் அதிக நீர் இல்லை. ஆனால் இருநூறடி உயரத்திலிருந்து செங்குத்தாக நேராக விழுகிறது. ஆகவே பயங்கரமான அடி. ஊசிபோல நீர்த்துளிகள் குத்தின. நடுநடுங்கச்செய்யும் குளிர் வேறு. அமைதியாகக் குளிக்கும் பண்புகொண்டவர்களாக இருந்தாலும் சென்னை செந்திலும் சக்தி கிருஷ்ணனும் அலறிக்கூச்சலிட்டார்கள். காட்டுக்குள் ததும்பிய தன்னந்தனிமையில் நாங்கள் மட்டும் அருவியுடன் இருந்தோம்

புகைபோல அலையலையாக விழுந்தது அருவி. அருவி என்பது நீரின் தொடர்வீழ்ச்சி என நினைக்கிறோம். இத்தகைய உயரமான அருவிகளைப்பார்க்கையில் தெரியும். நீர் தனித்தனித் துளிகளாகவே விழுகிறது. குவிந்த மழைபோல. அருவிநாடா காற்றில் ஊசலாடியது. வெண்ணிற நெற்றிப்பட்டம் அணிந்த யானை துதிக்கையை ஆட்டுவதுபோல..

இத்தகைய காட்டருவிகள் கொஞ்சம் ஆபத்தானவை. குளிப்பதற்கான இடங்கள் உருவாகியிருக்காது. பாறைகள் வழுக்கலாகவும் கூர்மையாகவும் இருக்கும்.கிருஷ்ணன் நிலைதடுமாறி ஒரு பாறையில் சாய அது கையை உரசிவிட்டது. ரத்தப்பெருக்கு. அருவிநீரிலேயே கழுவி பனியனைக்கிழித்து கட்டுப்போட்டுக்கொண்டு திரும்பவேண்டியிருந்தது.



ஜெ
மின்னஞ்சல்
செப்டம்பர் 22, 2018

எழுதியவர் : (22-Sep-18, 6:57 pm)
பார்வை : 44

மேலே