கரையான் புற்றில் மனிதப் புழு

மனிதம்
மாண்டு போன மாயமோ?
தொலைந்து போன தூரமோ ?

மனிதம்
நடுநிசி நாயாய் நடுத்தெருவில்
கேட்பாரற்று கிடக்கும் கேவலமோ?

மலை
காடு
இதுகள் கூட
இன்னும் மனிதம் மறக்க வில்லை ...

மனிதன் தான்
மலை மறந்தான்
காடு மறந்தான்
மனிதமும் மறந்தான் ...

தன் மார்பை குடைந்த போதும்
தன் வயிறை கிழித்த போதும்
மலை மனிதம் மறக்க வில்லை
மாறாய்
மானுடம் வளம் பெறவேண்டி
தன்னையே தானம் செய்தது....

தன் இறக்கைகள் ஒடிக்க பட்ட போதும்
முழங்கால் வெட்டப்பட்ட போதும்
பிறப்புறுப்பில் கோடரி குத்தியபோதும்
கோபப்படாமல் தன்னையே கொடுத்தது காடு ....

இயற்கை அன்னையின் வயிற்றுப் பிள்ளைகள்
இன்னும் மனிதம் மாறா மரபணுக்களே....!

மனித இச்சையின் எச்சத்தின் மிச்சமோ
இந்த பிண்டங்கள் மட்டுமே மனிதம் மறந்தவை...

பூமித்தாயின் மடியில் தவழ்ந்து
பூத கண்ணாடி முன் நின்று
அறிவின் ஜீவிகள் அறிவியல் பேசுகிறது ..!

ஒத்த உயிர் துடித்திடும் போது
எந்த விலங்கும் ஓடியதில்லை..
உற்ற உறவு துடித்தால் கூட
விட்டு ஓடும் மனிதச் சாதி ....

மாற்று அன்னையின் மகளாயினும்
எந்த மா க்களும் மறந்ததில்லை..
குருதிச் சொந்தம் ஆன போதும்
குறுகிக் கிடக்கும் குப்பை மனம் ....

பெற்ற தாயை அநாதியாக்கும்
அணிஞாய அத்தியாயம் இங்கே தொடக்கம்...

கொஞ்சி வளர்த்த நெஞ்சு உசுர
கௌரவக் கொலைகள் கொன்னு குவிக்குது.. .
வரம் கொடுத்த சாமியும்
வழியில்லாமல் சபிக்குது...

பட்டப் படிப்பெல்லாம் பல்லிளிச்சு வந்து
சாதிக் கூடாரத்துல கொடியும் புடிக்குது....

காதல் காமம் களம் புரியாமல் ..
கலந்தே ரெண்டும் இருக்குது ...

கலியாணக் காட்சிகள் எல்லாம்
காகிதப் பூவானது ...

நட்பும் கொஞ்சம் நடைமாறி
வஞ்சம் மிஞ்சி மிருகமாகிறது ...

பிஞ்சு உசிரிடம் நஞ்சு விதைச்சு
கொஞ்ச மனிதத்தையும் கொத்தி போடுது...

கற்பு என்ற கண்ணியச்சொல்
அகராதியில் அன்னியச்சொல் லாயிற்று ..

உழைப்பு
உண்மை
உயர்வு
இவையெல்லாம்
கரும்பலகை கருத்தாய் மட்டுமே
கருத்திழந்து கருகிப் போனது ...

கூடா நட்பு
வேண்டா உறவு
இதுவெல்லாம் இன்பமானது ...

தேடுவதென்னவோ தாசியின் மடி
கூடுவதென்னவோ கோவிலின் வழி...

காசுக்கு மட்டும் கை தூக்கும் கூட்டம்
பணத்திற்கு மட்டும் பந்தியிடும் இடம்..

மூட்டை மூட்டையாய் மூடி வைத்து
முட்டாள் பலரும் முங்கிப் போகிறான்..

வந்த வேலை அறியுமுன்னே
வெந்த சோறு வடிக்கிறான்...

ஆதியும் புரியாம
அந்தமும் தெரியாம
அவசரமா கட்டுரா..
தன் சுடுகாட்டு கட்டிடத்த...

எழுதியவர் : குணா (25-Sep-18, 7:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 71

மேலே