கவிதை- கொலு
கொலு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அணையா விளக்குகள்
வண்ண வண்ணமாய்
வானில் மலர்கள் பூத்தது போல்
அழகழகான புதுமைகள் படிகளெங்கும்
அலங்கார உடையணிந்து
மலர்கள் சூடி மனதை
மயக்கும் தோற்றத்துடன்
அவற்றிலொரு புதுமையின்
ஆதங்கக் குரல் இங்கே
என்னை எடுத்துச் செல்ல
எவரேனும் வாரீரோ
விரும்பி யாம் அமரவில்லை எம்மை
விருப்பத்துடன் தொடுவாருமில்லை
நடுத்தரகர்களின் பலவித
நயவஞ்சக உரைகளாலே
விலை பேசப்பட்டு நாங்கள்
விற்பனைக்கு இங்கே
இவர்களின் வியாபாரம்
இன்றோடு முடிவதில்லை
காசுள்ள கீழ் மனத்தோர்
காமுற்ற போதெல்லாம்
புது மணப் பெண்களாய் நாங்கள்
புதிய இடம் செல்ல வேண்டும்
இது எங்கள் குலத்தொழில் என்று
இழிவாக நினைத்திடாதீர்
கடத்தி வரப்பட்டு
காலத்தால் நசுக்கப்பட்டு
மதியிழந்து மயக்கமுறும்
மானங்கெட்ட மனிதர்களிடம்
சாலையின் ஓரங்களில் கூட
சரிசமமாய் எங்களின் விற்பனை
விதிவசத்தால் சிக்குண்டு
விலை பேசப்படும் அவலநிலை
விரும்பி அழைக்கின்றோம் வந்து
விடுதலை தாருங்கள் எங்களுக்கு
சிவப்பு விளக்குகளின் ஒளியில் மேனி
சிவந்தது போதும் இனியாகிலும்
வெள்ளை ஒளியில் எங்களின்
வெளிச்ச வாழ்க்கை தொடங்கட்டும்