நாங்களே போதும்
நாங்களே போதும். .
வாசலில் ஒலிக்கும்
அழுகுரலால்
நித்திரை கலைந்த
அனைவருக்கும் எதிர்பார்ப்பு
புதுவரவை நோக்கி. .
"" முதல் உயிர்வாயு சுவாசித்த அழுகை"" யென
விளக்கிய அறிவியலாலும்
அறிய முடியாத
அந்த அழுகையில்,
மீண்டும் பிரசவித்தது
இந்த உலகத்தில்
காப்பாளரின் கருணையோடு
கடவுளின் குழந்தையாக. .
தாயின் முகம்காண
தந்தையின் கரம்தீண்ட
சகோதரப்பாசம்
இப்படி யாதுமொரு
ஆசையின்றி
முதல் ஆசையாக
தன் பெயரமைக்க
அதுவும் நிராசையாய் நின்றது
முதலெழுத்தின்றி. .
தாய், தந்தை, உறவுகளின்
பெயரில் தொடங்கி,
சகலமும் சொல்லும்
அறிமுக வகுப்புகளில்
ஆசிரமத்தின் பெயரோடு நின்றது
எங்களின் அறிமுகம். .
விழாக்கால விடுமுறைக்குப்பின்
சீருடை உதிர்த்து
புத்தாடையில் பூத்திருக்கும்
வகுப்பறையின்,
உதிர்ந்த மலர்களின்
இடைவெளியாய்
எங்களின் விடுமுறை.
அம்மா விலக்கிச்சென்ற
போர்வைக்குள் மீண்டும்
அரைநாழிகை உறக்கம்,
அப்பாவின் அதட்டலுடன்
சிற்றுண்டி.
சகோதர சண்டைகளை
சகதோழன் சொல்ல
கவனமாய் கேட்கிறேன்
நாளைய கனவுக்கு.
மஞ்சளேறிய முகமும்
விழிகளில் கருமையுமிட்டு
முதல் அனுபவமாய்
சிற்றாடையணிந்த நாணத்தோடு
ஒரு மாத விடுமுறைக்குப்பின் வரும்
மங்கையரின் மத்தியில்
"" அவள் காய்ச்சலுக்கு
மூன்று நாள் விடுமுறையென்ற
காப்பாளரின் கடிதத்தோடு ""
கரைகின்றது
பூப்பெய்திய கனவுகள். .
அறியா அகவையில்
ஆண்டவனிடம் சென்றீர்
என்ற பொய்க்கு
மெய்யறிய ஆசைப்படுகையில்
அய்யப்படுகிறேன்.
என் பிறப்பு
வேண்டாவெருப்பிற்கோ
வறுமைக்கோட்டிற்கோ
காதலுக்கோ
கள்ளக்காதலுக்கோ
என எண்ணங்கள் பலவாயினும்
காமம் என்ற காரணம்
ஒன்றே. .
மனித ஆறாம் அறிவின்
எதிர்வினையாம் காமத்தின்பால்
வரப்போகும் என்போன்ற
சிசுவுக்கு
வழியமைத்து வெளிசெல்கையில்
மீண்டும் ஒலித்தது
அன்று
நான் உரைத்த முதல் அழுகுரல்
அன்றும் , இன்றும்
விடையில்லா
என் வாழ்க்கையின் வினாக்களைத் தாங்கி.
காமம் புகும்முன்
கட்டாயம் யோசி
அந்த அழுகுரலுக்கு விடையை. .
இல்லையேல்
உன் விடையில்லா
உணர்ச்சிக்குப் பிறந்த
(_) . நாங்களே போதும். . .