பெத்தவளின் கண்ணீர்
எம்புருஷன்
செத்து இன்னும்
நாலுநாளு ஆகலயே...
பால் தெளிச்ச
ஈரங்கூட காயலயே...
அவரோட
நெனப்பு இன்னும்
என்னவிட்டு போகலயே...
ஆசபட்டு வளத்த
எம்
புள்ளங்கள்ளாம்
பிரிக்கச் சொல்லி
நிக்குதுக அவர்
சொத்துகள....
அவர்
பாத்து பாத்து
கட்டினாரு மெத்த வீடு
டவுனுக்குள்ள...
அத கேட்டு
நின்னான்
பெரிய புள்ள...
பாட்டன் சொத்து
சில மிச்சமிருக்கு
ஊருக்குள்ள...
அது எனக்குனு
சொல்லி வந்தான்
அடுத்த புள்ள...
காடு கழனி
மீதமிருக்கு
ரோட்டோரத்துல...
ரியல் எஸ்டேட்
பண்ணபோறேன்
தந்துடுமா...
இது நடுபுள்ள...
பாங்குள உள்ள
பணத்தையெல்லாம்
எடுத்து கொடு...
சொந்த தொழில்
செய்ய போறேன்னான்
சின்ன புள்ள...
பொத்தி பொத்தி
வளத்தேன் நாலு
பொட்ட புள்ள்...
அதுகளாம் கேக்குது
என் நகநட்டுகள...
பத்து பத்தா
பத்துமாசம்
சுமந்து பெத்த
பத்து புள்ள...
அதுக அத்தணையும்
கேக்குது அவர்
சொத்துகள...
ஆனா?
ஒருத்தவனும் கேக்கலையே
இந்த
பெத்தவள...!