வரதட்சணை

வரதட்சணை என்ற சொல் ஆதி காலம் முதலே நம் பாரத நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகின்றது .அதன் வளர்ச்சி என்பது நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விட வேகமாக வளர்ந்து இன்று அழிக்கமுடியாயாத அல்லது இந்த மனித சமுதாயம் மறைக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது .

இந்த வரதட்சணை என்ற பழக்கம் எப்படி தோன்றியது என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது பல்வேறு வகையான கருத்துக்களும் பலவிதமான விமர்சனங்களும் உண்டு

வரதட்சனை என்ற சொல்லுக்கு நாம் அர்த்தம் கொண்டாமேயானால் ஒரு சமுதாயத்தில் பெண் ஆண் ஒருவனை திருமணம் செய்த பின்பு அவனுடன் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பெருட்கள் மற்றும் இதர வகையான கொடுக்கபப்டும் தட்சணை என்று சொல்லலாம்

நம் இந்திய திருநாட்டில் பழங்காலங்களில் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆண் தன்னால் இயன்ற பொன்னையோ பொருளையோ பொண்ணுக்கு தட்சணையாக கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது தன்னுடம் குடும்பம் நடத்த வரும் பெண்ணுக்கு ஆணால் கொடுக்கப்படும் தட்சணை இது

நாளடைவில் நம் நாட்டில் சிறு சிறு பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்கள் தங்களின் பெண்ணை மற்ற தேசத்து அரசர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது தங்களின் பெண்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர் இந்த பழக்கம் இன்று வரை அப்படியே தொடர்ந்து வருகின்றது

தற்போது வரதட்சணை என்ற சொல் மக்களின் மனதில் ஆலமரம் போல் வேரூன்றி அசைக்க முடியாத வகையில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்து பெண்களை பெற்ற தாய் தந்தையரின் நிலை என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கின்றது அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற முடிந்த அவர்களால் திருமணம் என்ற நிகழ்வின் போது இயலாத நிலையிலே உள்ளது

பெண்களை தெய்வமாக வழிபடும் இந்திய தேசத்தில் வரதட்சணை கொடுக்கமுடியாத பெண்களின் திருமண வாழ்வு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. நம் நாட்டில் வரதட்சணை காரணமாக பெண்கள் நாற்பது வயது வரையிலும் கூட முதிர் கன்னியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஒற்றை சன்னல் வழியாக தன்னை தேடி நல்ல ஆண்மகன் ஒருவன் வரமாட்டானா என்ற எக்கத்துடன் காத்திருக்கும் பெண்கள் அதிகம். இன்னும் சொல்லப் போனால் பணம் இல்லாத காரணத்தினால் தங்களின் திருமண வாழ்கை கானல் நீராகப் போய்விடுமோ என்ற ஏக்கதின் விளைவாக தங்களின் உடலை விற்று அதன் மூலம் கிடக்கும் வருவாயினை சேர்த்துக் கொண்டு திருமணம் முடிக்கும் பெண்களும் நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

மனிதர்கள் ஆகிய நாம்அனைவரும் உணர்சிகளின் தொகுப்பாகவே இன்று வரை வாழ்ந்து வருகின்றோம். நம் உடலின் தோன்றும் பருவ மாற்றங்களின் வளர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. . பருவ வயதில் தோன்றும் காமம் என்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் ஓன்றே. . ஆண் என்பவன் தனது காம இச்சையை தீர்த்துக்கொள்ள திருமணம் என்ற பந்தம் இல்லாமல் கூட செய்து கொள்ள முடியும் இந்த சமூகம் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பெண் என்பவள் நிலை எனபது முற்றிலும் மாறானது. வரதட்சனை கொடுத்து திருமணம் செய்ய வழியில்லாத இன்றைய பெண்களின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அவர்கள் வாழ்வு தடம் மாறிப் போக இந்த வரதட்சனையும் ஒரு காரணமாக இருக்கின்றது.

காலையில் செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சி ஊடகங்களிலும் தினம் தினம் வரதட்சனை கொடுமை காரனமாக பெண்கள் கொலை மற்றும் தற்கொலை என்ற செய்திகள் இல்லாத நாளே இல்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

நம் நாட்டில் பழங்காலத்தில் இந்த பழக்கம் வேரோடிப் போயிருந்தது என்பதை கூட அவர்களின் கல்வி அறிவின்மை என்று நம்மால் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் கல்வியறிவு பெற்று உலக அரங்கில் யாராலும் ஒதுக்கிவிட முடியாத கலாச்சாரம் பண்பாடு மனிதநேயம் சகிப்புத்தன்மை இவற்றிக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் நம் நாட்டில் இன்றும் இந்த வழக்கம் இருகின்றது என்பது உலக அரங்கில் நம் நாட்டின் பெருமைகளை சீர குலைக்கும் செயல்களில் ஒன்றாகவே கருதப்படும். .

இந்த வழக்கம் என்பது நம் நாடு முழுவதிலும் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல நன்கு பதிந்துள்ளது பெரிய செல்வந்தராக இருந்தாலும் சரி இல்லை தினம் தினம் கூலி வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி இருவரின் நிலையும் ஒன்றகத்தான் உள்ளது. இந்த நிலை மாறிட வரதட்சனை என்ற கொடிய நோய்க்கு சாவு மணி அடித்து சமாதி கட்டிட இளைய சமுதயத்தினரால் மட்டுமே முடியும்.

பிறருக்கு அறிவுரை சொல்வதென்பது உலகில் மிக எளிதான செயல். மாற்றத்திற்கான வழியினை செய்து காட்டுவதன் மூலம் புதிய சமுதாயத்தினை உருவாக்கிட இன்றே உறுதி ஏற்போம்.

எழுதியவர் : கருப்பசாமி (14-Oct-18, 9:11 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : varathatchanai
பார்வை : 3118

மேலே