இவர்களின் தற்கொலைக் கண்டோமா

சூதாடும் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாமல்
=சுருக்கிட்டு உயிர்நீத்த சுந்தரிகள் கண்டோம்
ஊதாரி மனைவியால் உளம்முடைந்து வெறுப்படைந்து
=உயிர்நீத்தப் குடும்பஸ்தர் உலகத்தில் கண்டோம்
போதாத காலமது புடைத்தெடுத்து வாட்டுகையில்
=பொறுமையற்று உயிர்துறந்தோர் பலபேரும் கண்டோம்
வாதாடி வெல்வதற்கு வழிசெய்யத் தவறிட்ட
=வழக்கறிஞர் தற்கொலையை வாழ்வினில்கண் டோமா?
***
நாயாகக் ஓடியாடி நாளெல்லா முழைத்துழைத்து
=நடுத்தெருவில் நின்றுவிடும் நன்றிமிக்க தொண்டன்
தாயாரின் சொற்கேளா ததையெண்ணித் தலைகுனிந்தே
=தனைமாய்த்தக் கதைகளையுந் தானிங்கு கண்டோம்
நோயாளி தனையிங்கு நுணுக்கமுடன் கவனித்தும்
=நூதனமாய் மாயந்ததானால் நொந்துநொந்து தன்மேல்
தீயள்ளி எரியவிட்டே தெய்வத்திடம் போய்ச்சேர்ந்த
=தெய்வீக வைத்தியரை தெருவில்கண் டோமா?
***
சோதனையில் தோல்வியென்று சோர்ந்துவிடும் மாணாக்கர்
=சொல்லாமல் தூக்கிட்டச் சோகங்கள் கண்டோம்
காதலிலே தோல்வியென்று கண்கலங்க வைத்துவிடும்
=காதலர்கள் சாவினையும் கண்களினால் கண்டோம்
வேதனையைத் தாங்காமல் விரக்தியுற்று உயிர்மாய்த்து
=விடுகின்ற நோயாளர் வீண்சாவும் கண்டோம்
தேர்தலிலே தோற்றுமக்கள் தேவைதீர்க்க முடியாமல்
=தீக்குளித்து மாய்ந்திட்டத் தலைவனைக்கண் டோமா?
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Oct-18, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 62

மேலே