விழி மூடிய நொடிப் பொழுதில்

பேருந்து நிலையம்
பிதுங்கிக் கொண்டிருந்தது...

எனக்கானப் பேருந்துக்காக
விழி பிதுங்கியபடிக்
காற்றுக் கொண்டிருந்தேன்
நான்,கையில் பெட்டியுடன்...

அந்த நெரிசலிலும்
விண்மீன் சல்லடையில்
வடிகட்டிய முழுமதியாய்த்
தெரிகின்றாள் அவள்...

ஆகா,
இவளும் பேருந்திற்குத்தானா?
இறைவா..உன் கருணையே கருணை...

அடடா...
என்ன அழகு...?
இவள் எப்படி தனியாய் நிற்கிறாள்?
என்னை வேறு கவிஞனாக்கிக் கொண்டு...

ஆகா...யாரை அழைக்கிறாள்
அலைபேசியில்?
மணமானதுபோல் தெரியவில்லையே...
அப்பாவையா? அண்ணனையா? தம்பியா? தாய்மாமனா?
கடவுளே… காதலனா?

நல்லவர்களே...வந்துவிடாதீர்கள்...
தாவிக்குதிக்கும்
என்
மனக்குரங்குக்கு
'ஆப்பு'வைத்து விடாதீர்கள்...

காற்றில்
அவள் கண்களை
முத்தமிடும் கூந்தல்...
ஒரு கையால் அக்கூந்தலை சரி செய்கிறாள்..
மறுகையால் கழுத்தணியை இதழில் வைத்துக்கொள்கிறாள்...
நகம் கடிக்கின்றாள்..
அவ்வப்போது
என்னையும் பார்க்கின்றாள்...
அய்யோ...அழகே...
அருகில் வந்து
என் கரங்களைப் பற்றிக்கொள்ளடி...
கவிதைவலிப் பற்றிக்'கொல்'கிறது...

பேருந்து வந்துவிட்டது...

முண்டியடிக்கும் கூட்டத்தில்
நான் நொண்டியடிக்க
என் கண்கள்
அவளைத் தேடி வலை வீச...
ஆகா...
அருகில் நிற்பது
அவளேதான்..அழகேதான்...
இறைவா...கூரையைப் பிய்த்துக்கொடுத்துவிட்டாயே...

நெரிசலில்
என்னைப் பனிக்கட்டியாய் அவள் இடிக்க,
என்னை மறந்துவிழி மூடிய நொடிப் பொழுதில்


அவளையும் காணவில்லை...
என் பெட்டியையும் காணவில்லை....
அடிப்பாவி..... :(

எழுதியவர் : முகவை சௌந்தர் (17-Oct-18, 12:07 am)
பார்வை : 72

மேலே