அவனும் நானும்-அத்தியாயம்-14

...அவனும் நானும்....

அத்தியாயம் : 14

"...உன் விழிகளுக்குள்
என் விழிகள் வீழ்ந்ததில்
இடம்மாறிக் கொண்டது
நம் பார்வைகள் மட்டும்தானா..??
இல்லை நம்மிருவர்
இருதயங்களுமா..??..."

எப்படி எப்படியெல்லாமோ புரண்டு பார்த்தாள்,விழிகளை நன்றாக இறுக்கி மூடியும் பார்த்தாள்...ஆனாலும் அவள் அழைத்த உறக்கம் மட்டும் அவளைத் தழுவிடாது சோதித்துக் கொண்டேயிருந்தது...இறுதியில் அவளது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவள்,பல்கனிப் பக்கமாய் போய் நின்று கொண்டு இருட்சியை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்...ஆனால் அவள் மனமோ அவனின் இருவிழிகளுக்குள் மட்டுமாகவே மாட்டிக் கொண்டு முழித்தது..

இன்று அவளுக்குள் எழுந்திருக்கும் இந்த உணர்வலைகளை அவள் இதற்கு முன் என்றும் அனுபவித்ததில்லை...இப்படியான இம்சைகள் எல்லாம் அவளுக்குப் புதிதானது...இந்த இருபத்தியொரு வருடங்களாய் எதற்குள்ளுமே சிக்கிக் கொள்ளாமல் கடந்து வந்தவளால்,அந்த ஒரு விநாடியைக் கூடக் கடந்து சென்றிட முடியாது திண்டாடிக் கொண்டிருந்தாள்...

எங்கு திரும்பினாலும்,எதைப் பார்த்தாலும் அவனொருவனின் விழிகள் மட்டுமே அவளை ஆக்கிரமித்துக் கொண்டதில்,வாழ்வில் முதற்தடவையாக எதுவென்றே சொல்லிட முடியா ஓர் இன்ப அவஸ்த்தைக்குள் அவள் கொஞ்சம் கொஞ்சமாய் சிறைபட்டுக் கொண்டிருந்தாள்...ஆனால் அந்தச் சிறை கூட அவளிற்குப் பிடித்தமானதாக இருந்ததுதான் அவளிற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்து வைத்தது...

அவனது விழிகளால் அப்படி என்னதான் மாயங்களைச் செய்தானோ தெரியவில்லை,அந்த மாயவிழிப் பார்வைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறிப் போனதென்னவோ அவள்தான்...அவன் பார்வை கூறிய மொழிகளை அவள் மீண்டும் மீண்டுமாய் மனதிற்குள் படித்துப் பார்த்தும் அதன் அர்த்தங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவளாய் குழம்பிப் போய் நின்றாள்...

ஆனால் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை,குழம்பி நின்றது அவள் மட்டுமல்ல...அவனும்தானென்று...ஆம் அவனின் இருவிழிப் பார்வை அவளின் இராத் தூக்கத்தை சிறை வைத்ததென்றால்,அங்கே விடுதியில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தவனின் இருதயத்தை என்றோ சிறைப்பிடித்திருந்தது அவளின் இருவிழிப் பார்வை...

எப்போதுமே பெண்களிடம் ஓர் இடைவெளியைக் கடைப்பிடிப்பவன்,அவளிடம் மட்டுமாகவே மாட்டிக்கொண்டதில் அவனுக்குமே ஆச்சரியம்தான்...அவளிற்கு வேண்டுமென்றால் அவன் இப்போது அறிமுகமானவனாய் இருக்கலாம்...ஆனால் அவனின் பார்வை அவள் கல்லூரிக்கு வந்த முதல் தினத்திலிருந்தே அவளைப் பின்தொடர ஆரம்பித்திருந்தது...

அன்று முதல் நாள் இடம்பெற்ற புதுமுக மாணவர்களுக்கான அறிமுக விழாவினில்தான் அவன் முதன்முதலாய் அவளைக் கண்டு கொண்டது...பெரிதாக அந்த விழாவினில் அக்கறையற்று போனை நோண்டிக் கொண்டிருந்தவன்,காதோரமாய் தீண்டிச் சென்ற அவளின் குரலில் உயிர்த்தெழுந்தவனாய் விழிகளை மேடையை நோக்கிப் பதித்துக் கொண்டான்...

அன்று தன் இரு விழிகளையும் அவள் மேல் பதித்துக் கொண்டவன்தான்..இன்றுவரையிலும் அவளிடமிருந்து தன் விழிகளை மீட்டுக் கொள்ள முடியாமல் அவனுடனேயே அவன் போராடிக்கொண்டுதான் இருக்கிறான்...அவளின் விழிகளும் மொழிகளும்தான் அவனை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை திருப்பிப் போட்டதென்றால்,அவள் பாடிய பாடலின் வரிகள் அவனுக்காகவே அவளால் பாடியது போலவே இருந்து வைத்தது அவனுக்கு...

.."அலைபாயுதே கண்ணா..."என்று அவள் ஆரம்பித்த போது,அவளின் மனம் அந்தக் கண்ணணுக்காய் அலைபாய்ந்ததோ இல்லையோ,இங்கே தன்னையே மறந்து அமர்ந்திருந்தவனின் உள்ளம் அவள் பால் மொத்தமாகவே அலைபாய ஆரம்பித்திருந்தது...அவள் அப் பாடலை முழுமையாகப் பாடி முடிக்கும் வரையிலும் அவன் இவ் உலகில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...மனம் அவளிடத்தில் தஞ்சமடைந்திருக்க அவனின் உடல் மட்டுமாகவே அங்கே அசைவற்று அமர்ந்திருந்தது...

அன்று அவன் அவளிடத்தில் தொலைத்தது அவனின் இருதயத்தை மட்டுமல்ல,உறக்கத்தையும்தான்...தூங்காத இரவுகளெல்லாம் அவளின் கனவுகளோடு மட்டுமாகவே தினம் தினம் கழிந்து கொண்டிருந்தது அவனுக்கு...ஆனால் அன்றோ வழக்கத்தை விடவும் அவன் மனம் அளவற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்...அந்த அளவற்ற குதூகலத்திற்குச் சொந்தக்காரியும் அவள்தான்...

ஆம் இதுவரை நாளும் அவன் மட்டுமாகவேதான் அவளைப் பார்வையாலேயே தொடர்ந்து கொண்டிருந்தான்...ஆனால் இன்று அவளின் பார்வையும் அவனோடு பிண்ணிப் பிணைந்து கொண்டதில் அவன் கால்கள் தரையிறங்க மறுத்து வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன...அதிலும் அவளின் விழிகள் அவனை ஓர்வித ஏக்கத்தோடு தேடியலைந்த போது,அவன் இவ்வுலகையே மறந்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்...

அந்தளவு தூரத்திற்கா தாம் ஓர் பெண்ணிடம் மயங்கிக் கிடக்குறோம் என்று நினைக்கும் போது,அவனுக்கு அவன் மேல் கோபமோ வெறுப்போ வரவில்லை...மாறாக அவள் மேல் இன்னும் இன்னுமாய் காதல்தான் ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது...வாழ்க்கையில் எந்தவித ரசனையுமற்றுமிருந்தவன்,என்று அவளை ரசிக்கும் கவிஞனாய் உருமாறிக் கொண்டானோ,அன்றிலிருந்து வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிகளையுமே ரசித்து வாழக் கற்றுக் கொண்டான்...

வழக்கம் போலவே அவளின் நினைவுகள் அவனுக்களித்த இதத்தோடே அவன் விழிகளிரண்டும் உறக்கத்தைத் தழுவிக் கொண்ட அதே நேரத்தில் அவளது விழிகளும் அவனை எண்ணியவாறே தூக்கத்தை துணைக்கழைத்துக் கொண்டன...

முந்தைய இரவில் தாமதமாக உறங்கியதால் மறுநாளும் தாமதமாகவே விழித்துக் கொண்டாள் கீர்த்தனா...கீழே வந்ததுமே அவளின் சிவந்த கண்கள் அவளைக் காட்டிக் கொடுத்துவிட தாயிடம் வசமாய் மாட்டிக் கொண்டு முழித்தாள்...

"ஹேய் என்ன கண்ணெல்லாம் சிவந்திருக்கு..இரவெல்லாம் தூங்காமல் என்ன பண்ணிட்டிருந்த..??.."

"அது..அது..."என்று அவள் திணறிக் கொண்டிருக்கவும்,அவளின் உதவிக்கு வந்து சேர்ந்தான் அஸ்வின்..

"இரவிரவா முழிச்சிட்டிருந்து மேடம் என்ன படிச்சிட்டா இருந்திருக்கப்போறாங்க...நல்லா கொட்டக் கொட்டக் விழிச்சிட்டிருந்து படம் பார்த்திருப்பாள்..."

வழக்கம் போல் அவன் என்னவோ அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அப்படிச் சொல்லி வைத்தான்...ஆனால் அது அவளிற்கு வசதியாகிப் போக முதற்தடவையாக அண்ணனிற்கு ஒப்பாகத் தலையாட்டி வைத்தாள் அவள்...

"இது என்ன புதுப்பழக்கம்...தூங்காமல் முழிச்சிட்டிருந்து படம் பார்க்குறது..."என்று அவர்கள் அர்ச்சனையை ஆரம்பிக்கவும்,

"சரி விடுங்கம்மா...பிழைச்சுப் போகட்டும்..."என்று தங்கைக்காகப் பரிந்து பேசி தாயிடமிருந்து அவளைக் காப்பாற்றிவிட்டான் அஸ்வின்..ஒரு வழியாக அன்னையிடமிருந்து தப்பித்துக் கொண்டவள்,அஸ்வினிற்கு நன்றியுரைத்துவிட்டு போனோடு தோட்டத்துப் பக்கமாய் சென்றாள்...

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆனந்தோடு கதைக்காவிட்டால் அவளிற்கு அன்றைய நாளே போகாது...அதிலும் அன்று அவனிடம் சொல்வதற்கும்,கேட்பதற்கும் நிறையவே அவள் மனதில் காத்துக்கிடந்ததால், வழக்கத்தைவிடவும் கொஞ்சம் உற்சாகமாகவே அவனிற்கு அழைப்பினை மேற்கொண்டாள்...

ஆனால் அவளது அழைப்பிற்குப் பதிலளித்தவனிற்கோ அவளின் அப்போதைய நிலை எதுவும் தெரிந்திருக்காததால் பொறுமையாய் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டே அவளின் கதைக்கு வந்து சேர்ந்தான் அவன்..ஆனால் அதற்குள்ளாகவே பொறுமையின் எல்லைக் கோட்டினைக் கடந்திருந்தாள் அவள்...

"அப்புறம் நீ எப்பிடிடீ இருக்க...ராக்கிங் எல்லாம் முடிஞ்சுதா..??.."

"கடவுளே..இப்போயாச்சும் இவனுக்கு என்னைப்பத்தியும் கேட்கனும்னு நினைப்பு வந்திச்சே...??..ஏன்டா கோல் பண்ணவளைத் தவிர மத்த எல்லாரையும் ஒவ்வொன்னாய் விசாரிச்சிட்டே இருக்க..??..என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுதாம்...??.."

"ஹா...ஹா...சரிடி சரி கோபப்படாத...அதான் இப்போ உன்னோட கதைக்கு வந்திட்டனே...இப்போவாச்சும் இந்தப் பச்சப்புள்ளைய மன்னிச்சு..என்ன ஏதுன்னு சொல்லலாம்ல..."

"அதெல்லாம் மன்னிக்க முடியாது போடா...நான் எவ்வளவு ஆசையாய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லலாம்னு கோல் பண்ணன்,ஆனால் நீ என்னடான்னா எங்க வீட்டு நாய்குட்டியிலிருந்து,பக்கத்துவீட்டு பூனைக்குட்டி வரைக்கும் நலம் விசாரிச்சிட்டிருக்க..??..."

"ஏன்டி ஒவ்வொரு வாரமும் நான் இப்படிக் கேட்குறதுதானே..??..அப்போலாம் நான் அவங்களைக் கேட்கல,இவங்களைக் கேட்கலன்னு நீதானேடி சண்டைக்கு வருவ.. இன்னைக்கு மட்டும் புதுசா என்ன உனக்கு இவ்வளவு கோபம் வருது..??..ம்ம்..??.."

"அது..அது போன வாரம்...இது இந்த வாரம்.."

"ம்க்கும்...இந்தப் பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை...ஆனால் என்ன சொல்ல வந்ததை விட்டிட்டு வேற எதையாவது பிடிச்சுத் தொங்க வேண்டியது..."

"நான் ஒன்னும்..."என்று மீண்டும் சண்டையிடுவதற்கு ஆயத்தமானவளை இடைமறித்துக் கொண்டவன்,

"இங்க பாரு..மறுபடியும் சண்டைதான் போடப் போறாய்னா சொல்லிடு...நான் கோலைக் கட் பண்ணிடுறேன்...இல்லையா ஒழுங்கா என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லு...??.."

ஏனோ இவ்வளவு நேரமாய் அவனிடம் தன் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காய் துடித்துக் கொண்டிருந்தவளால்,அவன் கேட்டதுமே எங்கே ஆரம்பித்து எதைச் சொல்வதென்று தெரியாமல் திணறத் தொடங்கிவிட்டாள்...வாயைத் திறந்தாலே வெறும் காத்துத்தான் வந்தது அவளிற்கு...

"அது...அது...வந்து..."என்று அவள் மென்று விழுங்கவும்,

"என்னடி இவ்வளவு நேரமாய் பட படவென்னு வெடிச்ச...இப்போ என்னடான்னா பம்முற...??.."

"ப்ச்...நீ அப்போவே கேட்டிருந்தால் ஒரு ப்ளோவில என் மனசில என்ன இருந்திச்சோ அதை அப்படியே சொல்லியிருப்பன்...இப்ப எனக்கு எப்படி எங்க ஆரம்பிக்குறதின்னே தெரியல்ல...போடா..."

அவளின் பேச்சிலிருந்தும் தடுமாற்றத்திலிருந்தும் எதையோ ஊகித்துக் கண்டுபிடித்துக் கொண்டவனாய்,

"ஹேய் என்னடி....யார்கிட்டையாச்சும் காதல்ல மாட்டிக்கிட்டியா என்ன..??.."

ஏற்கனவே அவனிடம் எதைச் சொல்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவள்,அவன் அதை நேரடியாகவே கேட்டதும் கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்...அவளிற்கு அந்த அவனைப் பிடித்திருந்தது என்னவோ உண்மைதான்...அவனது அந்தப் பார்வை அவளின் மனதை லேசாய் தட்டிச் சென்றதும் உண்மைதான்...ஆனால் அது அனைத்தையும் அவளால் காதல் என்ற வார்த்தைக்குள் அவ்வளவு எளிதாக உள்ளடக்கிக் கொள்ள முடியவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை...

"என்ன மேடம் சத்தத்தையே காணோம்...அதுக்குள்ள கனவு காணப் போயாச்சா..??.."

"ப்ச்..நீ நினைக்குற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லைடா..."

"நான் நினைக்குற மாதிரி இல்லைன்னால்,அங்கே தங்களோட மனசு இப்போ யாரை நினைச்சிட்டிருக்காம்...??.."

அவன் அப்படிக் கேட்டதுமே அவள் முன்னையதிலும் பார்க்க இன்னும் அதிகமாய் குழம்பத் தொடங்கிவிட்டாள்...காரணம் நேற்றைய தினத்திலிருந்தே அவனொருவன்தானே அவள் மனதை மொத்தகமாகவே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்...

"ஹலோ..ஹலோ கீர்த்து லைனில இருக்கியா இல்லையா...??.."

"ஆ..ஆ...இப்போ நீ என்ன கேட்ட..??.."

"சரியாப் போச்சுப் போ...என்ன மேடம் என்கூடத்தானே இவ்வளவு நேரமாய் பேசிட்டிருக்கீங்க...இல்லைன்னா மனசுக்குள்ளேயே வேற யார்கூடவும் பேசிட்டு இருக்கியா என்ன..ம்ம்..??.."

"ஏன்டா நீ வேற..நானே ஏகப்பட்ட குழபத்தில இருக்கன்..."

"ம்ம்...இங்க பாரு கீர்த்து...முதல்ல உன் மனசு என்ன சொல்லுதின்னு கண்ணை மூடி யோசி...உன்னோட மனசால மட்டும்தான் இப்போ உனக்குள்ள வந்திருக்குற இந்த மாற்றங்களுக்கெல்லாம் பேரு காதலா இல்லையான்னு சொல்ல முடியும்...நீயா ஒரு முடிவுக்கு வரும் வரைக்கும் இதைப்பத்தி நீ யார்கூடவும் டிஸ்கஸ் பண்ணாத...ஏன்னா உன்னோட மனசு என்ன சொல்லுதின்னு உன்னைத்தவிர வேற யாராலையுமே சரியாப் புரிஞ்சுக்க முடியாது கீர்த்து...அப்படி நீ இதுதான்னு உறுதியாய் ஒரு முடிவுக்கு வந்ததுக்கு அப்புறமா எனக்கு கோல் பண்ணு...அப்போ நாம இதைப்பத்திப் பேசலாம்...சரியா..??...

"ம்ம்..."என்று அவள் முணுமுணுக்கும் போதே அவளின் மனம் சிந்தைக்குள் மூழ்கத் தொடங்குவதை உணர்ந்து கொண்டவனாய் அவன் அழைப்பினைத் துண்டித்துக் கொள்ள...அவளின் உள்ளமும் "இதுதான் காதலா..??.."என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கத் துவங்கியது...

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (21-Oct-18, 10:54 pm)
பார்வை : 529

மேலே