ஜாதியும் மதமும் வீணாகுமே

ஜாதி ஜாதி என்பவன் புத்துயிர்
இருந்தும் சவம்
சாதி ஒழித்து சாதி என்றவர் புதுவை சிவம்

நம்மைப்போல் பள்ளி என்று
ஜாதி பார்ப்பதில்லை பல்லி
ஜாதிக்குப் பிள்ளையார் சுழி போடும் இடம் பள்ளி
இந்துக்களும் போகவேண்டும் பள்ளி
கருவிலேயே ஜாதியை அழிக்கவேண்டும் பள்ளி


ஆதாம் ஏவாள் மனித ஜாதி என்றால்
மனிதனுக்குள் எப்படி
வந்தது இத்தனை ஜாதி

பலரது மூளையில் ஜாதி
இருப்பதால் மூலைக்கு மூலை
ஜாதித் தலைவர்கள் மூளை இல்லாமல் வேலை இல்லாமல்
காதலிக்கும் ஆளை இல்லாமல் செய்கின்றனர்
நாட்டை பாலையாக்கி பாலை ஊற்றுகின்றனர்

மனிதன்
வாழும்போது ஜாதிக்கு இரை
வீழும்போது ஜோதிக்கு இரை

வெற்றி
உடையார் முதலியார் கண்டு வருவதில்லை
முயற்சி உடையார் கண்டே முதலில் வருகின்றது

தாழ்த்தப்பட்டோர்
வாழும் மண்ணின் அருகே
மண்ணின் விலையும்
தாழ்த்தப்பட்டே கிடக்கிறது

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று
புத்தகத்தில் உள்ளது
நம் புத்தான அகத்தில் உள்ளதா?

தோளில் பிறந்தவன் கோயில் கருவறையில்
காலில் பிறந்தவன் கோயில் தெருவரையில்

ஜாதி ஒழிப்பு நாயகர்
பெரியாரையே சமூகம்
நாயக்கராகத்தான் பார்த்தது

ஜாதிகள் இல்லையடி பாப்பா
இதை பாரதி நம் அப்பாவிற்குச்
சொல்லியிருக்கவேண்டும்
ஏனென்றால்
பாப்பா ஜாதி பார்ப்பதில்லை
அப்பாக்கள்தான் பார்க்கின்றனர்

ஓடிவிளையாடு பாப்பா சரிதான்
ஏனென்றால் கலவரத்திலும் கலைக்க
வருவோரிடத்திலும் தப்பிக்க ஓடவேண்டும்மல்லவா?

கன்னிகாதானம்
ஏற்கும்போது பார்க்கும் ஜாதியை
யாரும் கண்தானம்
ஏற்கும்போது பார்ப்பதில்லை

ஜாதிச் சான்றிதழை
தீயிட்டு எரிப்போம்
இடஒதுக்கீடு வேண்டாம் என்று
அரசியல்வாதிகளை மறிப்போம்

நாடெங்கும் ஜாதிக்கலாவரம்
மனிதா ஜாதி கல அதுதான் வரம்

மனிதா
ஜாதி பார்ப்பதில்லை விலங்கு
ஜாதிச் சண்டைகள் உன் கைக்குப் பூட்டும் விலங்கு
இதை நீ விளங்கு
பிறகு சமூத்தின் கழுத்தில் விழும் பூ விலங்கு

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (22-Oct-18, 9:39 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 232

மேலே