முகநூல் நட்பு
முகநூல் நட்பு..!
==============
பள்ளிக்கல் லூரிநட்பு எல்லாம் கடந்து
ஆட்டிப் படைக்குதுதிப்போ முகநூல் நட்பு
வீட்டுக்குள்ளே இருந்தபடி தட்டிப் பேசலாம்
விரல்தானே பேசுதற்கு வாயும் எனலாம்..!!
பேசாத நேரத்திலும் பேசிச் செல்லும் - கணினி
பேசியதை பதித்திடுமே நட்பின் சொல்லும்
எல்லை என்பதில்லை இந் நட்புக்கெல்லாம்
இணைத்திடுமே பாலமாகி வலைதளமெல்லாம்..!!
நல்ல நல்ல நட்புக்கெல்லாம் முகவரி ஒன்று
பொல்லாத நட்புக்கெல்லாம் பல பெயருமுண்டு
இனங்கண்டு நட்புகொள்ள இன்னல் இல்லை
இதை மறந்தால் விளைந்திடுமே பலவும் தொல்லை..!!
தனித்திறமை வளர்த்திடவே ஆக்கம் அளிக்கும்
அழகான கருத்தளித்து ஊக்கம் கொடுக்கும்
நையாண்டி செய்து நம்மை நெளியச் செய்யும்
வகை வகையாய் "மூஞ்சி" யுந்தான் காட்டிச் செல்லும்..!!
திருமணமும் பிறந்த நாளும் பூப் பெய்தல்எனவும்
மொய் எழுதும் வைபவங்கள் பலவும் கண்டோம்
மொய் போலே கிடைக்குதிங்கே "லைக்" வடிவிலே
மொய்க்குத்தான் மொய் என்றால் தாங்க முடியலே..!!
இனம் கடந்து மதம் கடந்து எல்லாம் கடந்து
சங்கமத்தில் உருவாகும் முகநூல் நட்பு
உண்மை நேசம் கொண்டிருந்தால் உவகைதானே
உயிர்பறித்து போகுமென்றால் சோகம்தானே..!!
பெண் வடிவில் ஆணிருக்கும் பேதமின்றி
ஆண் வடிவில் பெண்ணிருக்கும் பயமும் இன்றி
எல்லைக்குள் நட்பென்றால் தொல்லை இல்லை
அளவோடு நட்பென்றால் ஆபத்தில்லை..!!
விடியல் என்று கூறிவரும் நட்பும் உண்டு
ஒளி பறித்துப் போகும் ஏவல் பேய்களுமுண்டு
இடியாப்ப சிக்கல்முக நூலில் உண்டு
இதில் சிக்குண்டோர் உயிர்கூட தொலைத்ததுமுண்டு..!!
ஓரிடத்தில் அனைவரையும் கட்டிப்போடும் - முகநூல்
கதியென்று கிடப்போர்க்கு நோயும் கூடும்..!!
துன்பங்கள் இறக்கி வைக்கும் முகநூல் நட்பு - அனைவர்க்கும்
வாழ்த்து நன்றி கூறுகிறேன் இந்நாள் இனிதே என்று..!
===================================================
குறிப்பு: அமுதசுரபி இதழின் ஆண்டு விழாவில் 09-04-2016 அன்று வாசிக்கப்பட்ட கவிதை. விழாவிற்கு அழைப்பு விடுத்த இதழின் ஆசிரியர் சகோதரி ஞானி அவர்களுக்கும் தலைப்பினை அளித்த கருமலை தமிழாழன் அய்யா அவர்களுக்கும் எனது நன்றிகள்..!
====================================================