மரமாகிப்போ இறைவனின் சாபம்

மரத்துப்போன இதயத்துடன்
மானங்கெட்டு பணத்திற்காக
மாக்கள் போல் தலையசைத்து
மண்டியிட்டு மற்றவர் முன்
மதி கெட்டு இச்சை மொழி பேசி
மக்களிடம் கையூட்டு பெற்று
மற்றும் பல தவறிழைத்த
மன்னிக்க முடியாத குற்றத்திற்காக
மரண தண்டனை பெற்ற
மனிதருள் ஒருவனிடம் இறைவன்
மானிடா! இப் பிறவியில் உன்
மனதின் மனித நேயம்
மரணித்துப் போனதால்
மறு பிறவியில் நீ
மரமாகிப் போவாய் என்றவுடன்
மனம் குழம்பிய மனிதன்
மகேசனின் கால் பற்றி
மன்னிப்பின் காரணம் கேட்க
மன்னுலக மக்களெல்லாம்
மழை இன்றி வறட்சியாலும்
மண்ணரிப்பின் விளைவினாலும்
மனம் நொந்து வாடி
மனுக்களை அனுப்புகிறார்
மலை போல் குவியும்
மனுக்களைக் குறைக்க இனி
மனித நேயமற்ற செயல் செய்து
மரணித்து வருவோரையெல்லாம்
மரமாக அனுப்பி வைப்பேன்
மகேசனின் திட்டமிது.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (23-Oct-18, 5:38 pm)
பார்வை : 75

மேலே